Published : 15 Feb 2015 12:30 PM
Last Updated : 15 Feb 2015 12:30 PM

உலக மசாலா: வலியை விரும்புற அதிசயப் பிறவிகள்...

பிரான்ஸை சேர்ந்த தாவரவியலாளர் பாட்ரிக் ப்ளாங்க். இவரது பங்களாவின் உட்சுவர்களிலும் வெளிச்சுவர்களிலும் செடிகள், கொடிகள், மரங்கள் என்று தாவரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஜன்னல்கள், கதவுகளை தவிர சுவரே தெரியாத வண்ணம் தாவரங்கள் மூடியிருக்கின்றன. வீட்டுக்குள் நுழைந்தால் காட்டுக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பூச்சிகள், ஓணான், பச்சோந்தி, அழகான பறவைகள் இந்தத் தாவரங்களோடு சேர்ந்து வசிக்கின்றன. 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர்த் தொட்டியில் மீன், ஆமை, சிப்பி போன்ற உயிரினங்கள் நீந்தி விளையாடுகின்றன. சமையலறை, படிக்கும் அறை என்று எங்கும் தாவரங்களின் ஆட்சிதான். இரவில் மெல்லிய வெளிச்சத்தில் இந்தத் தாவரங்கள் வேறோர் அனுபவத்தைத் தருகின்றன. 61 வயது பாட்ரிக்கு 6 வயதிலேயே இயற்கை மீது ஆர்வம் வந்துவிட்டது. மீன்கள் வளர்க்க ஆரம்பித்தார். 12 வயதில் சுவர்களில் செடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார். இயற்கைக்குத் தீங்கு இழைக்காத பொருட்களையே வீடு கட்டுவதிலிருந்து சகல விஷங்களுக்கும் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துகிறார்.

வீட்டுக்குள் வனம்! அழகான கான்செப்ட்!

ரஷ்ய சூதாட்ட விடுதிகளில் ஒரு புதிய விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. வலிகளுக்கு அடிமையானவர்கள் இங்கே கூடுகிறார்கள். மின்சாரத் துப்பாக்கிகள் மூலம் ஒருவரை ஒருவர் மின்சாரத்தைச் செலுத்திக்கொள்கிறார்கள். சிலர் தாங்களே தலையிலோ, கழுத்திலோ விருப்பமான இடங்களில் மின்சார அதிர்வுகளை அளித்துக் கொள்கிறார்கள். சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக வட்டமாக நின்றுகொண்டு விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். வலி பொறுக்க முடியாதவர்கள் வரிசையாக வெளியேறிவிடுகிறார்கள். இறுதி வரைக்கும் யார் வலிகளைத் தாங்கிக்கொண்டு நிற்கிறாரோ அவரே அன்றைய வெற்றியாளர். அவருக்குப் பட்டமும் பரிசுத் தொகையும் கிடைக்கும். ஏழு தடவைக்கு ஒரு முறை 10 ஆயிரம் வோல்ட் மின்சார அதிர்ச்சியை ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும். உயிர் இழக்கும் அளவுக்கு இந்த விளையாட்டில் ஆபத்து இல்லை என்பதால் இது அனுமதிக்கப்படுகிறது. வலிப்பு நோய் உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ள இயலாது என்கிறார்கள்.

வலியை விரும்புற அதிசயப் பிறவிகள்…

அமெரிக்காவில் பிறந்த அலிசியா பென்னிங்டனுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. அவரால் ஓட்டுப் போட இயலாது. கார் ஓட்ட முடியாது. ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடியாது. அலிசியா தான் ஓர் அமெரிக்க பிரஜை என்பதற்கான எந்த அத்தாட்சியும் அவரிடம் இல்லை. அலிசியா பிறந்த உடன் பிறப்புச் சான்றிதழ் பெறவில்லை. பிறகு ஹோம் ஸ்கூல் என்ற கிறிஸ்தவ மெஷினரியில் படித்தார். அவர்களும் பிறப்புச் சான்றிதழையோ, சோஷியல் செக்யூரிட்டி நம்பரையோ வாங்கவில்லை. ஹோம் ஸ்கூலில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களைப் பெரிதாக மதிக்க மாட்டார்கள். பெற்றோரின் எண்ணத்துக்குத்தான் மதிப்பு அளிப்பார்கள். இங்கே பிறந்து, இங்கே படிக்கும் குழந்தைகள் அலிசியாவைப் போல அடையாளம் இன்றியே இருக்கிறார்கள். கல்லூரியில் சான்றிதழ் அவசியம் என்பதால் மேற்படிப்பையும் அலிசியாவால் தொடர முடியவில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறவும் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் பெறவும் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. கடைசியில் ஃபேஸ்புக், ட்விட்டரில் தன்னுடைய நிலைமையைப் பகிர்ந்துகொண்டு, உதவி செய்யும்படிக் கேட்டிருக்கிறார். உலகில் பிறப்பைப் பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழ் பெறாத குழந்தைகள் 20 கோடி பேர் இருக்கிறார்கள்.

ஐயோ… பாவம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x