Published : 25 Feb 2015 12:18 PM
Last Updated : 25 Feb 2015 12:18 PM

தியாகி மாயாண்டி பாரதி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

தியாகி மாயாண்டி பாரதி திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முதுபெரும் விடுதலைப் போராட்டத் தியாகியும் - தமிழகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் - சிறந்த பத்திரிகையாளருமான ஐ. மாயாண்டி பாரதி, தனது 99வது வயதில், மதுரையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அவர் தனது இளமைக் காலத்திலேயே, அதாவது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, தேச விரோதச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தியாகியாவார்.

விடுதலைப் போர் கொழுந்துவிட்டெரிந்த நேரத்தில் மாயாண்டி பாரதி "பாரதசக்தி", "லோக்சக்தி", "லோகோபகாரி", "நவசக்தி" போன்ற பத்திரிகைகளில் எழுதிய உணர்ச்சி பூர்வமான கட்டுரைகள் பெரும் தாக்கத்தை தமிழகத்திலே ஏற்படுத்தின.

சட்ட மறுப்பு இயக்கம், கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் மாயாண்டி பாரதி ஈடுபட்டுச் சிறை சென்றார். நாடு விடுதலை பெற்ற பிறகு, பொதுவுடைமை இயக்கத்திலே சேர்ந்து, அதன் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையிலும், வெளியிலும் அவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் நுhல்களாக வெளி வந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தியாகச் சுடர் திரு. மாயாண்டி பாரதி அவர்களின் மறைவுக்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x