Last Updated : 29 Jan, 2015 04:13 PM

 

Published : 29 Jan 2015 04:13 PM
Last Updated : 29 Jan 2015 04:13 PM

இடைநிறுத்தங்களில் ஆன்-லைன் டிக்கெட் பதிவு முறை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை குற்றம்சாட்டும் ஊழியர்கள்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடைமுறையில் உள்ள ஆன்-லைன் முன்பதிவு டிக்கெட் பதிவில் குளறுபடிகள் இருப்பதால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் இழப்பு ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆம்னி பேருந்துகளின் வரவுகள் ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருந்தாலும், குறைந்த கட்டணத்தில் சாய்வு தள இருக்கையுடன் கூடிய விரைந்த பயணத்துக்காக மக்கள் அதிகம் நாடுவது தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளைத்தான்.

மொத்தம் 954 பேருந்துகளைக் கொண்டு தமிழகத்துக்குள் மட்டும் இல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில், எதிர்வரும் இரு மாதங்களுக்குள் ஆன்-லைன் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

இவ்வாறு ஆன்-லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் குளறுபடியான மேலாண்மை காரணமாக, கழகத்துக்கு வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

"ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் உள்ளன. உதாரணத்துக்கு, திருப்பதியில் இருந்து புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் விரைவுப் பேருந்துக்கான முன்பதிவில், வேலூரில் இருந்து பாதிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலமாக முன்பதிவு செய்யப்படுகிறது.

இதேபோல், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் ஈரோடு, சேலத்தில் இருந்து அதிகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால், திருப்பதியில் இருந்து வேலூர் வரைக்கும் அல்லது கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வரைக்கும் காலியாக ஓட்டி வர வேண்டி இருக்கிறது. ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவில் ரயில்வே நிர்வாகம் போன்று கட்டுப்பாடுகளை கொண்டு வராததே பிரச்சினைக்குக் காரணம்.

இடை நிறுத்தங்களில் பதிவு செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் காரணமாக திருப்பதி - கோவை வரும் பேருந்து தினமும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை இழப்பைச் சந்திக்கிறது. இது போலவே, பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளும் இழப்பைச் சந்திக்கின்றன. அதற்காக, இடைநிறுத்தங்களில் இருந்து பயணிகளை ஏற்றக் கூடாது என கூறவில்லை.

இடைநிறுத்தங்களான வேலூர் போன்ற இடங்களுக்கு இவ்வளவு இருக்கைதான் முன்பதிவு செய்ய முடியும் என்ற ஒதுக்கீடு நிர்ணயித்துவிட்டால் பிரச்சினை இல்லை. இல்லையென்றால், கூடுதல் சேவைக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், அதுதான் சரியானது.

தனியார் ஆம்னி பேருந்துகள் சீசனுக்கு தகுந்தாற் போல் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இது போன்று கழகப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க முடியாது.

ஆனால், சீசன் நேரத்தில் கூட இடைநிறுத்தங்களில் இருந்து அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கழகத்துக்கான வருமானம் குறைகிறது. இதனை மாற்ற வேண்டும் எனக் கோருகிறோம்.

ஏற்கெனவே, அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. மேலும் நஷ்டமடையச் செய்யும் வகையில் நிர்வாகத்தின் நடவடிக்கை இருக்கக்கூடாது. இதனை மாற்றுவது அதிகாரிகளின் உடனடிக் கடமை என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்து ஊழியர்."

இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மேலாளர் சுப்ரமணியத்திடம் கேட்ட போது, இந்த பிரச்சினை இருப்பது உண்மைதான். ஒவ்வொரு தடத்திலும் இடைநிறுத்தங்களில் அதிகமாக பதிவாகும் முன்பதிவு டிக்கெட் குறித்த விவரங்களை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். உடனடியாக, நிர்வாகமும் அந்த இடைநிறுத்தத்தில் இருந்து அதிகமாக ஆன்-லைன் மூலமாக டிக்கெட் பதிவு செய்ய முடியாதபடி கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.

ஆனால், இடைநிறுத்தங் களுக்கான முன்பதிவை வெகுவாக குறைத்துவிட முடியாது. சீசன் இல்லாத நேரங்களில் இடைநிறுத்தங்களில் இருந்துதான் பயணிகளை ஏற்றி சமாளிக்க வேண்டி இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x