Published : 01 Jan 2015 10:44 AM
Last Updated : 01 Jan 2015 10:44 AM

குழந்தைகளே கற்றுக்கொள்வார்கள்

மாற்றுப் பள்ளிகளும் மாற்றுக் கல்வியும் குழந்தைகளின் கற்றல் திறனை எந்த அளவுக்கு மேம்படுத்துகின்றன?

இன்றைய மாற்றுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிரமப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அன்புடன் விளையாட்டு மூலம் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் விளையாட்டு என்று சொல்வதையே நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். தனியாகவோ கூட்டாகவோ குழந்தைகள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இந்தச் சொந்த மான விளையாட்டுகள்தான் உண்மையிலேயே தங்கள் அறிவை முழுமையாக வளர்க்க உதவும் என்பது எனது கருத்து. கடந்த ஐந்தாண்டுகளாக எனது மகள் தானாகவும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்தும் (பெரியவர்களின் எந்தவிதமான தலையீடுமின்றி) கற்பனை செய்து, உருவாக்கி, விளையாடுவதை மிகுந்த ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்துவருகிறேன். இதில் ஒரு விளையாட்டைப் பார்ப்போம்.

சட்டையைத் தொங்க விடும் ஹாங்கர்களை ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களாகக் கற்பனை செய்துகொள்வாள். அப்பா - அக்கா, அம்மா - பாப்பா என்று கைகோக்கச்செய்து எங்கோ இழுத்துக்கொண்டு போவாள். அந்தப் புதிய இடத்தில், அவர்களைக் கொண்டு ஒரு புதிய கதை உருவாகும். இப்படித் தினம் தினம் தன்னிச்சையாக உருவாகும் புதிய விளையாட்டுகளின் மூலம், புதிய விஷயங்களைத் தோண்டித்துருவிக் கற்றுக்கொள்வாள். இதில் வீட்டில் கிடக்கும் தட்டு, கரண்டி, குச்சி, தொப்பி, தலையணை, புட்டிகள் அனைத்துமே வெவ்வேறு பொருட்களாகவும் மனிதர்களாகவும் மிருகங்களாகவும் மரங்களாகவும் மாறும். நம்மில் யாராவது இவ்வகையான கற்பனையைச் செய்ய முடியுமா? நாம் எப்படி இவர்களின் மனங்களை அறிந்துகொண்டு இவர்களுக்கான பொம்மைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்க முடியும் என்று எண்ணுகிறோம்?

இன்றைய பெரியவர்களுக்கு விளையாட்டைப் பற்றி இருக்கும் புரிதல் கவலைக்குரியது! விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்துகொடுக்கிறது.

சுதந்திரம் எதுவரை?

சில மாற்றுப் பள்ளிகளில் “உங்கள் சொந்த வரிகளில் சரியான விடையளிக்கலாம்.” “ஆசிரியர் நடத்தும் பாடம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக வெளியில் சென்று ஒரு நடை சென்று வரலாம். ஆனால், திரும்பி வந்து பாடங்களைக் கவனிக்க வேண்டும்” என்பன போன்ற சலுகைகளையெல்லாம் சுதந்திரம் என்னும் பெயரில் கொடுப்பார்களாம். “இந்தக் கேள்வியே எனக்குத் தவறாகத் தோன்றுகிறதே!” அல்லது “எனக்கு இந்தப் பாடத்தில் சுத்தமாக ஆர்வமே இல்லை! மாறாக, அதோ அங்கே இரும்புக் கதவை வெல்டிங் செய்துகொண்டிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது! அது எப்படி இரண்டு இரும்புத் துண்டுகளை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கிறார்கள்?” என்பன போன்ற அவர்களது சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், கேள்விகளையெல்லாம் சகித்துக்கொள்ளும் பள்ளிக்கூடங்களை நான் ஒன்றிரண்டே கண்டிருக்கிறேன்! பத்து வயது வரை இவற்றுக்கு ஓரளவு இடம்கொடுத்தாலும் அதன் பிறகு இழுத்துப் பிடித்து ஓட்டப் பந்தயத்தில் ஓட வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதட்டாமல், மிரட்டாமல் செல்லமாகப் பேசியே!

உயர்ந்த லட்சியங்களுடன் தொடங்கப்படும் பள்ளிகள்கூட “என்ன செய்வது? பெற்றோர்கள் இதைத் தானே கேட்கிறார்கள்!' என்று கூறி, நுகர்வோரின் தேவைக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன.

கல்வி என்பது என்ன?

இன்று பள்ளிகள் சிறப்பாகச் செய்வதெல்லாம் முதலாளித்துவத் தொழிற்சாலைகளில் வெவ்வேறு மட்டங்களுக்கான தொழில் வல்லுநர்களையும் தொழிலாளர்களையும் தரம் பிரித்துப் பயிற்றுவித்துக் கொடுக்கும் வேலையைத்தான். இந்த வேலை ‘ப்ரி-கேஜி’ நேர்முகத் தேர்விலேயே தொடங்கிவிடுகிறது. இப்படித் தொழில்மயமான சமுதாயத்துக்குத் தேவையான செயல் திறனை வளர்க்கும் பயிற்சியைத்தான் நாம் ‘கல்வி’ என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில், கற்றல் என்பது எவ்வாறு நிகழ்கிறது?

ஒவ்வொரு ஜீவனும் அத்தனை அறிவையும் உள்ளடக்கியபடிதான் உருவாகின்றது. ஆனால், இந்த அறிவை உணர்வதற்கு அதன் மேல் படிந்திருக்கும் பல அடுக்குகளாலான தேவையற்ற விஷயங்களைக் களைந்தெறிய வேண்டும். இப்படிப்பட்ட உணர்தலே உண்மையான கற்றல் ஆகும். ஆங்கிலத்தில் இதை “ஆஹா! தருணம்” என்பார்கள். இதை ஒருவகையான நிகழ்வு எனலாம். இந்த நிகழ்வுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியும். கற்றலைச் செய்விக்க முடியாது. அது தானாக நிகழ வேண்டும். மண்ணை வளப்படுத்தி விதையை விதைக்கத்தான் முடியும். அது முளை விட்டு வளர்வது அதன் கையில் உள்ளதல்லவா? அதுபோல, உண்மையான கற்றல் அவரவரின் சுயமான தேடல் முயற்சியால்தான் நிகழும். சுயமான கேள்விகளுக்கு, அனுபவபூர்வமாகவும், உள்ளுணர்வின் வழிகாட்டுதலாலும் சுயமான பதில்களையும் பாதைகளையும் கண்டறிய வேண்டும். அந்தப் பதில்கள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் தவறானதாக இருந்தாலும், அதை உணர்ந்து ஏற்றுத் திருத்திக் கொள்வதும் சுயமுயற்சியாலேயே நடைபெற வேண்டும்.

ஆனால், மாற்றுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் என்ன நடக்கிறது? ‘தங்கள் சொந்த வரிகளில் ஓரளவுக்குத் தங்கள் சொந்த பதில்களை’எழுத ஊக்குவிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், யாருடைய கேள்விகளையோ அவர்கள் மேல் திணிக்கும் வரை, இந்தக் கற்றல் எப்படி உண்மையான கற்றலாக இருக்க முடியும்? ஆங்கிலமும் கணிதமும் வாரத்தில் எல்லா நாட்களும் பயில வேண்டும். நடனம், கைவேலை, விளையாட்டு, சமையல், தோட்டக்கலை போன்றவற்றை வாரத்தில் சில நாட்கள் செய்தால் போதும் என்பது போன்ற முடிவுகளெல்லாம் குழந்தைகள் சார்பாக எடுப்பதற்கு நமக்கு இருக்கும் தகுதி என்ன? நமது இன்றைய தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், அது ‘வெற்றி’என்று வரையறை செய்வதை அடையத் தேவையான ‘ஆங்கிலம், கணிதம், நவீன அறிவியல்’ ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை, நான் எல்லா மாற்றுப் பள்ளிகளிலும் பார்க்கிறேன்.

சுயமாகக் கற்றுக்கொள்ளுதல்

எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு குழந்தையும், சுயமாகக் கேள்வி கேட்டுத் தானாகவே கற்றுக் கொள்ள வேண்டுமா? ஏற்கெனவே நன்கறிந்த விஷயங் களை முதிர்ந்த தலைமுறையினர் இளைய தலைமுறை யினருக்குக் கைமாற்றிக்கொடுப்பதற்கு இந்தக் கல்வி முறையில் இடமில்லையா என்கிற கேள்வி எழலாம். அதை ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்தித்து, கேள்விக்கு உட்படுத்தி அந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே அதைக் கற்றல் என்று சொல்ல முடியும். அதுவரையில், எத்தனை ஆழ்ந்த உண்மையாக இருந்தாலும், அது மூளையில் தேக்கி வைத்திருக்கும் ஒரு தகவல் மட்டுமே. இந்த செயல்முறையில் சில விஷயங்கள் சரியென்று தோன்றவில்லை என்றால், அவற்றைத் தற்காலிகமாக நிராகரிப்பதற்கும்கூட இடமுண்டு. மற்றவர்கள் சொல்வதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போதுதான் பல குழப்பங்கள் எழுகின்றன. இதை லெபனீய தத்துவவாதி கலீல் ஜிப்ரான் எத்தனை அழகாக விளக்கியுள்ளார்!

“உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையை வழங் காதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சிந்தனையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தேகங் களுக்கு ஒரு இல்லத்தை வழங்கலாம். அவர்கள் ஆன்மாக்களுக்கல்ல. ஏனெனில், அவர்களின் ஆன்மா, கற்பனையிலும் பிரவேசிக்க முடியாத எதிர்காலம் எனும் வீட்டில் வசிக்கிறது. நீங்கள் அவர்களைப் போன்று இருக்க முயலலாம். ஆனால், உங்களைப் போன்று அவர்களை ஆக்க முயற்சிக்காதீர்கள்.”

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று உள்ளது. நாம் மேற்கொள்ளும் எல்லாக் கல்வியும் நமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்திசெய்யுமாறுதான் அமைய வேண்டும். “குழந்தை வளர்ப்பு ஒரு வழிபாட்டைப் போன்றது” என்றார் விவேகானந்தர். இதை உணர்ந்து, தங்களது சொந்த வாழ்க்கைத் தேடலில் தீவிரமாக இருக்கும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே மாற்றுக் கல்வியைப் பற்றிய சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உண்மையாக ஈடுபட முடியும்.

- சங்கீதா ஸ்ரீராம், சமூக ஆர்வலர், ‘பசுமைப் புரட்சியின் கதை’ என்ற நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: sriram.sangeetha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x