Last Updated : 22 Jan, 2015 10:34 AM

 

Published : 22 Jan 2015 10:34 AM
Last Updated : 22 Jan 2015 10:34 AM

கருப்புப் பண விவகாரம் : ஸ்விஸ் வங்கிகள் மீது இந்தியர்களுக்கு ஆர்வமில்லை - வாடிக்கையாளர்களை ஈர்க்க பகீரத முயற்சி

கருப்புப் பண விவகாரத்தால், ஸ்விட்சர்லாந்து வங்கிகளின் `ரகசியம் காக்கும்’ தன்மை கேள்விக்கு உள்ளாகி உள்ளதால், மிக உயரிய வங்கிச் சேவையை அளிப்பதாகக் கூறி, அந்நாட்டு வங்கிகள் இந்தியர்களை ஈர்க்க முயல்கின்றன. ஆனால், இந்தியர்கள் ஸ்விட்சர்லாந்து வங்கிகளுடன் பரிவர்த்தனை வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உலக பொருளாதார மையத்தின் (டபிள்யூஇஎஃப்) ஆண்டு மாநாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள தாவோஸில் நேற்று தொடங்கியது. இதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஸ்விட்சர்லாந்தில் முகாமிட்டுள்ளனர்.

இதில், வாடிக்கையாளர்களை ஈர்க்க ஸ்விட்சர்லாந்து வங்கிகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கி யுள்ளன. குறிப்பாக தாவோஸ் நகரில் குழுமியுள்ள இந்தியர்களை தங்கள் வாடிக்கையாளர்களாக தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அவை முயல்கின்றன.

இதற்காக, வங்கியாளர்கள், கார்ப்பரேட் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மேலும், உலகின் பல நாடுகளும் ஸ்விஸ் வங்கிகளின் ரகசிய கணக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதனால், ஸ்விஸ் வங்கிகள் இதுவரை தங்களின் தாரக மந்திரமாகக் கூறி வந்த `ரகசியம் காக்கும்’ தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே, ரகசிய கணக்கு என்பதற்குப் பதில், மிக உயரிய வங்கிச் சேவையை அளிப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களை ஸ்விஸ் வங்கிகள் ஈர்க்க முயல்கின்றன.

ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில் மிக உயரிய வங்கிச் சேவை கிடைப்பதால், ஸ்விஸ் வங்கிகளின் தூண்டிலில் மாட்ட இந்தியர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பணக்கார வாடிக்கையாளர்களைக் கவர, கேஷ் கூரியர், பெரிய பாதுகாப்புப் பெட்டக வசதி, பிட்காயின் போன்ற இணைய பணம் உள்ளிட்ட வசதிகளைத் தருவதாகவும் ஸ்விஸ் வங்கிகள் சலுகைகளை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

ஐரோப்பியன் மத்திய வங்கியின் சமீபத்திய தகவலின்படி, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் கடந்த 2012-ம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.9,000 கோடியாகக் குறைந்தது. இது மிகப் பெரும் சரிவாகும். இருப்பினும், 2013-ம் ஆண்டு ரூ.14,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரகசியம் காக்கும் தன்மை கேள்விக்குள்ளானதை அடுத்து, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பிற நாட்டவர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x