Published : 30 Jan 2015 10:04 am

Updated : 30 Jan 2015 11:32 am

 

Published : 30 Jan 2015 10:04 AM
Last Updated : 30 Jan 2015 11:32 AM

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணை: திமுக, அதிமுக வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது திமுக வழக்கறிஞர் சரவணனனுக்கும் அதிமுக வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமார சாமி முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞரு மான ஆர்.பசன்ட், வழக்கறிஞர்கள் மணிசங்கர், அசோகன் உள்ளிட் டோர் ஆஜராகினர். 2-வது நாளாக சசிகலாவின் வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்கள் தொடர் பான நடவடிக்கைகளிலோ, பண பரிவர்த்தனையிலோ ஜெய லலிதா ஈடுபடவில்லை. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் சில தனியார் நிறுவனங் களில் பங்குதாரராகவும் நிர்வாக இயக்குநர்களாகவும் இருந்துள் ளனர். தனியார் நிறுவனங்களில் வந்த லாபத்தையும் வங்கிகளில் கடன் பெற்றும் தொழிலில் ஈடு பட்டுள்ளனர்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், சூப்பர் டூப்பர் டிவி உள்ளிட்ட நிறுவனங்களில் சசிகலாவும் சுதாகரனும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். இந்த நிறுவனங்களுக்கான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்தியன் வங்கி, கனரா வங்கி மூலமே நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் பணம் பயன் படுத்தப்படவில்லை. எவ்வித சட்டமுறைகேடும் நடைபெற வில்லை என்று அவர் தெரிவித்தார்.

897 முறை பண பரிவர்த்தனை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘ஜெயா பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நடத்திய‌ தனியார் நிறுவனங்களுக்கு இடையே பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அருணாசலம் (இந்தியன் வங்கி மேலாளர்), வித்யாசாகர் (கனரா வங்கி மேலாளர்) ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் தனியார் நிறுவனங்களுக்காக 897 முறை பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது'' என்றார்.

இதையடுத்து வழக்கறிஞர் ஆர்.பசன்ட் பேசும்போது, ‘‘நமது எம்ஜிஆர் பத்திரிக்கை நிறுவனத் தின் ‘டெபாசிட்' திட்டத்தின் மூலம் சசிகலாவுக்கு ரூ.14 கோடி வருமானம் வந்தது. அந்த பணத் தையும் தனது தொழில் வளர்ச் சிக்கு பயன்படுத்தினார். இதற்காக முறையான வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. அதனை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை'' என்றார்.

திமுக-அதிமுக மோதல்

இதனை தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, ‘‘திமுக நடத்தும் முரசொலி பத்திரிகைக்கு இது போன்ற 'டெபாசிட்' திட்டம் மூலம் பணம் வசூலிக்கப்படுகிறதா'' என கேள்வி எழுப்பினார். அதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன்,''நாங்கள் அத்தகைய திட் டத்தை பின்பற்றுவதில்லை. பத்தி ரிகை தேவைப்படுவோர் சந்தா செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட அதி முக மாநிலங்களவை உறுப்பின ரும் வழக்கறிஞருமான நவனீத கிருஷ்ணன், ‘‘திமுகவினர் உண்டி யல் மூலம் அடிக்கடி நிதி திரட்டு வார்கள். திமுக தலைவர் கருணாநிதி அறிவியல் பூர்வமாக ஊழல் புரிகிறவர் என சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது''என்றார்.

அதனை ஆட்சேபித்த‌ திமுக வழக்கறிஞர் சரவணன், நீதி மன்றத்தை அரசியல் மேடை ஆக் காதீர்கள். நாங்களும் அரசியல்ரீதி யாக அதிமுக மீது பல்வேறு குற்றச் சாட்டுக்களை கூறுவோம்''என்றார்.

இதையடுத்து அரசு வழக்கறி ஞர் பவானிசிங், ‘‘பணபரிவர்த்த னையில் ஜெயலலிதாவுக்கும் சசி கலாவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து எழுத்துபூர்வமான அறிக்கையை தாக்கல் செய்கிறேன். நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.14 கோடி வந்தது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் அனைத் தையும் நிரூபித்துள்ளேன்'' என்றார்.

நல்லம்ம நாயுடு வருவாரா?

எனவே நீதிபதி, ‘நமது எம்ஜிஆர்,ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் தொடர்பாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் யார்? அவர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் எங்கே? இதெல்லாம் அடங்கிய ‘வழக்கு புத்தகம்' எங்கே'' என கேட்டார்.அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சம்பந்தம்,'அதெல்லாம் 18 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஒப்படைத்துள் ளோம்'' என்றார்.

அதற்கு நீதிபதி, ‘‘உங்களிடம் ஒரு நகல் இருக்க வேண்டும் அல்லவா? இவ்வழக்கில் விசா ரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவை நீதிமன்றத் திற்கு வரவழையுங்கள்.அவரிடம் பணபரிவர்த்தனை குறித்த விவரங்களை கேட்டு தெரிந் துக் கொள்கிறேன்''என்றார். இதை யடுத்து சொத்துக்குவிப்பு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை (வெள்ளிக்கிழமைக்கு) ஒத்தி வைக்கப்பட்டது.

திமுக மனு மீது இன்று விசாரணை

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக‌ பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு மனு (ரிட்) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக‌ உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குமேல்முறையீட்டு மனு விசாரணைதிமுக வழக்கறிஞர்கள்அதிமுக வழக்கறிஞர்கள்கடும் வாக்குவாதம்

You May Like

More From This Category

More From this Author