Published : 09 Jan 2015 08:56 AM
Last Updated : 09 Jan 2015 08:56 AM

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டில் சிபிஐ சோதனை

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

மதுரை சின்னசொக்கிகுளம் பெசன்ட் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால்முகமது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி இவரைக் காணவில்லை என புகார் செய்யப்பட்டது. மதுரை தல்லாகுளம் போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது மதுரை முனிச்சாலையை சேர்ந்த சங்கர் (35) என்பவர் ஜமால்முகமதுவை கொலை செய்ததாக மேலூர் நீதிமன்றத்தில் செப். 6-ம் தேதி சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மதுரை சிறைச்சாலை வீதியில் முரட்டன்பத்திரி பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலரது பெயரில் பத்திரப்பதிவு செய்து தர மறுத்ததால் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண் மூலம் பாலியல் ஆசை காட்டி ஜமால்முகமதுவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை மயிலாடும்பாறையில் 200 அடி பள்ளத்தில் உருட்டிவிட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பூங்கொடி, கணேசன், இமாம் அலி, கரடி அப்பாஸ், பாலமுருகன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

இந்த கொலை வழக்கின் பின்னணியில் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் இருப்பதாக சில அமைப்புகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து போராட்டத்தில் ஈடுபட்டன. போலீஸார் இது தொடர்பாக விசாரிக்கையில், ஐ.பெரியசாமி மகள் இந்திரா (35), உறவினர் பழனிவேலு (55), அவரது மனைவி உமாராணி (51) ஆகியோர் மதுரை சிறைச்சாலை வீதியில் இருந்த 20 சென்ட் நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்து தர ஜமால்முகமதுவிடம், வெற்று பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாகக் கருதிய போலீஸார், இந்திரா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நியாயமான விசாரணை நடக்க இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஜமால்முகமது உறவினர்கள் வலியுறுத்தியதால், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

மேலும் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், நவம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை மூவருக்கும் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ஐ.பெரியசாமி மகள் இந்திரா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று டி.எஸ்.பி. தலைமையில் 4 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நுழைந்த போலீஸார், மதுரை சிறைச்சாலை வீதியிலுள்ள பிரச்சினைக்குரிய அந்த நிலத்தின் ஆவணங்களைத் தேடியுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 3 மணி வரை நடைபெற்றது.

இந்த சோதனையில் இந்திரா விடம் ஜமால்முகமது கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். 3 மணிக்கு சோதனை முடிந்து வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரி கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்து காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செந்தில்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், இந்திரா என்ற மகளும் உள்ளனர். ஒரே மகள் இந்திரா மீது ஐ.பெரியசாமி மிகுந்த பாசமாக இருப்பாராம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பெரியசாமி தனது பிறந்த நாளில் சொந்த ஊரான வத்தலகுண்டில் அவரது தாயிடம் ஆசி பெற்று, இஷ்ட தெய்வமான தேவதானப்பட்டியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வார். எங்கே இருந்தாலும் அவரது பிறந்தநாளில் சொந்த ஊருக்கு வந்து தனது பிறந்த நாளை, குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளுடன் திருவிழாபோல் கொண்டாடுவார். பாசமாக இருந்த மகள், இந்த கொலை வழக்கில் சிக்கித் தவிப்பதால் கடந்த ஜன. 6-ம் தேதி தனது பிறந்த நாளை ஐ.பெரியசாமி சொந்த ஊரில் கொண்டாட வரவில்லை. பிறந்த நாளில் சென்னைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் மட்டும் ஆசி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x