Published : 27 Jan 2015 13:32 pm

Updated : 27 Jan 2015 13:32 pm

 

Published : 27 Jan 2015 01:32 PM
Last Updated : 27 Jan 2015 01:32 PM

நூறில் ஒன்றாக....

உலகளவில் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களையும், நவீனங்களையும் தன் வசப்படுத்திக்கொண்டு முன்னணி பல்கலைக்கழகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக கூறுகிறார் தென்தமிழகத்தின் மிகப் பின்தங்கிய பகுதியான ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கலசலிங்கத்தின் மகனும், பல்கலைக்கழக வேந்தருமான ஸ்ரீதரன். அவருடன் ஒரு சந்திப்பு.

இந்தப் பல்கலைக்கழகம் எப்படி உருவானது?

என் தந்தை கலசலிங்கம் பிறந்த ஊரில் நடுநிலைப்பள்ளிகூட கிடையாது. எட்டாம் வகுப்பு படிப்பதற்கே ஊரில் இருந்து வெகுதூரம் நடந்து சென்றிருக்கிறார். மேல்படிப்புக்கு மதுரை அல்லது ராஜபாளையம் செல்ல வேண்டிய நிலை. அவரால் படிக்க முடியவில்லை. 10 ஆண்டுகள் கழித்துத்தான் காமராசர் பல்கலைகழகத்தில் படித்தார்.

1972-ல் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கினார். உள்ளூர் பள்ளியைத் தரம் உயர்த்தவும், பக்கத்துக் கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் உதவி வந்தார். சென்னையில் அவர் நடத்திய ஆனந்த் பில்டர்ஸ் நிறுவனத்தின் லாபம் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.

தாமே கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்துடன், 1983-ல் முதன் முறையாக கிருஷ்ணன் கோயிலில் அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே பொறியியல் கல்லூரி கட்டினார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐ.டி.ஐ., பார்மஸி கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி, ஆனந்த் பொறியியல் கல்லூரி போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார். மத்திய திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தவரான கே.வெங்கடசுப்பிரமணியம் கொடுத்த ஆலோசனையின் பேரில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டிய அடிப்படையானத் தேவைகளை எல்லாம் செய்த பிறகு 2006-ல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்ந்தது.

எந்த ஒரு விஷயத்தையும் தனக்கு மனத்திருப்தி ஏற்படும்வரை விடாப்பிடியாகத் தொடர்வார்.அதுதான் அவருக்கு விருப்பமான செயலாக இருக்கும். அப்படி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பொறியியல் பாடப்பிரிவு. இந்தத் திட்டத்தை அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

முதல் ஆண்டில் வளாகத்தேர்வில் செவித்திறன் குறைந்தவர்களைத் தேர்வு செய்யத் தயங்கிய நிறுவனங்கள் கூட, தேர்வு செய்யப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், திறமையையும் பார்த்துவிட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மாணவர்களை விரும்பித் தேர்வு செய்தார்கள். 2014-ல் நடந்த வளாகத்தேர்வில் மொத்தமுள்ள 60 மாணவர்களில் 55 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவரிடம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

அவரிடம் நான் கற்றுக்கொண்டது கடின உழைப்பு. 80 வயதுக்குப் பிறகும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார்.

‘இந்தப் பல்கலைக்கழகத்தை இன்னும் முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் தர வேண்டும்’என்பதுதான் அவர் என்னிடம் சொல்லிவிட்டுப்போனது. ‘அது உன்னால் முடியும்’ என்பார்.

பரபரப்பான ஒரு நாளில், திடீரென அவரது நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்தது. பார்க்கக் கிளம்பியவர், போகிற வழியில் காரில் இருந்து இறங்கி ஹார்லிக்ஸ் வாங்கி வரச் சொன்னார். அந்தப் பதற்றமான நேரத்திலும் கூட, அந்தப்பாட்டிலில் உள்ள காலாவதியாகும் தேதியை சரிபார்த்தார். நான் மிரண்டு போய்விட்டேன். சின்னச்சின்ன விஷயங்களிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எனக்கு வழிகாட்டி.

பொறியியல் கல்விக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதே?

தவறான சில நம்பிக்கைகள் காரணமாகத் திடீரெனப் பொறியியல் கல்வி மவுசு பெற்றது, பிறகு அதே காரணங்களால் மவுசு குறைந்தது. ஆனால், பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே வருகிற மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

மாணவர்களின் தனித்திறன்களைப் புரிந்து கொண்டு, அவர்களின் துறை சார்ந்த ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கிறோம். மாணவர்களே நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அதில் 21 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ளனர்.

அடுத்த திட்டம்?

அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவில் முதல் 100 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இதைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

லிங்கா குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளோம். நர்சிங் கல்லூரி தொடங்கும் திட்டமும் இருக்கிறது.

நேர்காணல்சந்திப்புகலசலிங்கம் பல்கலைக்கழகம்ஸ்ரீதரன்பொறியியல் கல்வி

You May Like

More From This Category

More From this Author