Published : 10 Jan 2015 11:18 AM
Last Updated : 10 Jan 2015 11:18 AM

இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை: ஒரு மணி நேரம் இதயத் துடிப்பு நின்றவர் உயிர் பிழைத்த அதிசயம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் இதய ரத்தக்குழாய் அடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது.

திருவள்ளூரை சேர்ந்தவர் அன்பழகன் (50). கூலித் தொழிலாளி. நெஞ்சுவலி காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் என்.நாகராஜன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்ய முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சைக்கு தொடங்குவதற்கு முன்பு அன்பழகனின் இதயத் துடிப்பு திடீரென நின்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்தனர். அதன்பின், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, ரத்தக்குழாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பை நீக்கினர்.

இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா, இதய அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் என்.நாகராஜன் ஆகியோர் அளித்த பேட்டி:

இதய துடிப்பு நின்ற நோயாளிக்கு, மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் இதயத் துடிப்பை கொண்டு வந்தோம். அதன்பின் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு, அன்பழகன் நலமாக இருக்கிறார். சுமார் 4 மணி நேரம் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.3 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இங்கு இலவசமாக செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x