Last Updated : 09 Jan, 2015 08:41 AM

 

Published : 09 Jan 2015 08:41 AM
Last Updated : 09 Jan 2015 08:41 AM

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு ஏற்பு: பவானி சிங் நியமனம் குறித்து பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு - சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் குறித்து பதில் அளிக்குமாறு கர்நாடக அரசு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான‌ பவானி சிங்கே, இதிலும் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் அவரது வழ‌க்கறிஞர் தாமரைச்செல்வன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங் குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்படு வதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழ‌க்கறிஞரை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த‌து. அப்போது அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், “சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது.

இவ்வழ‌க்கில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால், அவரின் பணிக் காலம் நிறை வடைந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராக இதுவரை கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை மட்டுமே அவரை அரசு வழக்கறிஞராக தொடர ஆணை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு இல்லை. எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை உடனடியாக இவ்வழக்கிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.

சம்மன் அனுப்ப உத்தரவு

திமுக தரப்பின் மனுவை ஏற்றுக்கொண்ட‌ நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் குறித்து வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக அரசின் தலைமை செயலாள‌ர், கர்நாடக சட்டத்துறை செயலாளர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மற்றும் பவானி சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் மீது தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருவதால் அவரை மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தவறான தகவலை அளிக்கலாமா? நீதிபதி கேள்வி

பெங்களூரு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நான்காவது நாளாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான பி.குமார் பேசும்போது, “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி வி.சி.பெருமாள் தலைமையிலான விசாரணைக் குழு, வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களையும் வழக்கில் இணைத்தது. இதனால் ஜெயலலிதாவின் சொத்து பல மடங்கு மிகைப்படுத்தி காட்டப்பட்டது. ஜெயலலிதா மீது சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரை விசாரித்த சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி ஆணை வெளியிட்டார். அதில் விசாரணை அதிகாரியாக லத்திகா சரணை நியமிப்பதாக குறிப்பிட்டு இருந்தார். குற்றவியல் நடைமுறை சட்டப்படி விசாரணை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு ஆணை வெளியிட முடியாது” என்றார்.

அதற்கு நீதிபதி, “அப்படி யென்றால் இது தொடர்பாக வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முறை யிட்டீர்களா?” என்றார். இதற்கு வழக்கறிஞர் குமார், “இல்லை” என பதில் அளித்தார்.

அதன் பிறகு நீதிபதி குமாரசாமி கூறும்போது, “விசாரணை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு ஆணை வெளியிட்டது தொடர்பாக, ஜெயலலித தரப்பில் கடந்த 2002-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனை நீதிபதி சிவப்பா விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் இருக்கின்றதே? மூத்த வழக்கறிஞரான நீங்கள், வழக்கு குறித்து தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா?” என கேள்வி எழுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x