Published : 21 Dec 2014 14:31 pm

Updated : 21 Dec 2014 14:31 pm

 

Published : 21 Dec 2014 02:31 PM
Last Updated : 21 Dec 2014 02:31 PM

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 22.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

22-12-2014

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10.00 மணி:

Cowboys /Croatia/Mrsic Croatia/107’/2013

தன் சொந்த ஊருக்கு நாடகம் போடும் எண்ணத்தோடு திரும்புகிறான் நடுத்தர வயது நாடக இயக்குநர் சாஷா. ஊருக்கு வந்த பிறகுதான் தெரிகிறது, மேயராக இருப்பவன் இவனது பழைய நண்பன் என்று. அவனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து அமெச்சூர் நடிகர்களை வைத்து நாடகம் போடுவதற்கு அனுமதி வாங்கி விடுகிறான்.

நாடகத்தில் நடிக்க ஆட்களைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்குகிறான். வருபவர்கள் ஓரிருவர்களைத் தவிர யாருக்குமே அனுபவமோ திறமையோ இல்லை. வேறு வழியின்றி அவர்களையே தேர்ந்தெடுத்து நாடக வேலைகளில் இறங்குகிறான். நாடகம் யாருக்கானது என்ற குழப்பமும் உருவாகிறது. நாடகம் உயர்த்தட்டு மேற்கத்திய நாகரிகம் உள்ளவர்களுக்கா? அல்லது பொதுமக்களுக்கா என்ற கேள்வி எழுகிறது.

நாடகத்தை ஒரு தொழிலாக நடத்துவது எனில் அது மேற்கத்திய பாணியில் உயர்த்தட்டு மக்களுக்கானதாக அமைவதுதான் சாலப்பொருத்தம் என ஒருவழியாய் முடிவெடுக்கிறார்கள். நகைச்சுவை அம்சங்களோடு சில வித்தியாசமான விஷயங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறது இத்திரைப்படம்.

*

மதியம் 12.00 மணி:

Mamarosh / Mamaros / Momcilo / Serbia / 2013 / 105'

கனவுத் தொழிற்சாலையில் கதையின் நாயகனாக பணியாற்றி வருகிறான் பெறா. திரை இலக்கணத்தை பற்றிய தெளிவான அறிவும் ஆற்றலும் பெற்ற இவன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறான். செரிபியாவில் நடக்கின்ற போரினால் இவனும் இவன் தாயும் அகதிகளாக்கப்படுகின்றனர்.

நீண்ட பயணங்களுக்கு பின் இவர்கள் நியூயார்க் வந்தடைகின்றனர். வந்த இடத்தில் தான் விரும்பிய தொழிலை இனியும் செய்ய முடியுமா என்கிற ஐயம் இவனுள் பிறக்கின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கம் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட சுருள்களின் தேவையை நீக்கிட, பழைய ப்ரோஜக்டர்கள் தூக்கி எறியப் படுகின்றன. தன்னிடம் கிடைத்த ப்ரோஜக்டர் ஒன்றினை வைத்து நெகடிவ்களில் அமைந்துள்ள முலாம் பூசாத உன்னத சினிமாவின் மகிமையை நாயகன் உலகிற்கு எப்படிப் படைக்கிறான் என்பது தான் இப்படம்.

*

பிற்பகல் 3.00 மணி:

The New World (De nieuwe wereld) / Jaap van Heusden / Netherlands / 2013 / 83'

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில், 39 வயதான மிர்டேவுக்கு துப்புரவு செய்யும் பணி. தஞ்சம் கோரி நெதர்லாந்து வருபவர்கள், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தின் அந்த பாதுகாப்பகத்திலேயே 10 நாட்களுக்கு காவல் வைக்கப்படுகின்றனர். மிர்டே இந்த பாதுகாப்பகத்தில் தனது பணியை செய்து வர, அவளது வாழ்க்கையைப் புரட்டிப்போட வருகிறான் மேற்கு ஆப்பிரிக்காவின் லூக். வருத்தப்பட்ட இரு இதயங்கள் சங்கமிக்கின்றன. அது காதலாக இருக்கலாம். ஆனால், இருவருக்குமே தெரியும் எல்லாமே வெறும் 10 நாட்களில் முடிந்துவிடும் என்பது.

*

பிற்பகல் 5.00 மணி:

In the Name of My Daughter/France/Andre Techine/116’/2014

பிரென்ச் ரிவேராவில் உள்ள நீஸ் எனும் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மேடம் ரேணி லீ ரோக்ஸ். அவளின் மகள் ஏக்னஸ் காணாமல் போனதாக தொடுக்கப்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீண்டும் கொண்டுவருகிறாள். தன் மகள் கொலைசெய்யப்பட்டதாகவும் அதைச் செய்தது வழக்கறிஞர் மௌரீயஸ்தான் எனவும் புகார் தெரிவிக்கிறாள். கதை1976-க்குப் பின்னோக்கிச் செல்கிறது.

அப்போது நட்சத்திர விடுதியின் கேஸினோ இறங்குமுகத்தில் இருந்தது. அங்கு வந்துபோய்க்கொண்டிருந்த வழக்குரைஞர் மௌரீயஸ் அதை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறான். கேஸினோ உரிமையாளர் ரேணியின் மகள் ஏக்னஸுடன் நெருங்கிப் பழகுகிறான். அவளும் இவன் காதல் வலையில் விழுகிறாள். இத்தனைக்கும் அவன் நிறைய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன்.

பின்னர் உள்ளூர் மாஃபியா ரௌடி ஃப்ரேட்டினியின் துணையை நாடுகிறான். தாய்க்கும் மகளுக்கும் அவன் சண்டைமூட்டிவிடுகிறான். சிலநாட்களில் ஏக்னஸ் காணாமல் போகிறாள். ஏக்னஸ் லீ ரோக்ஸ் என்பவளின் உண்மைக் கதைதான் இங்கு சுருக்கமான உளவியல் ரீதியான திரைப்படமாகியுள்ளது. ரேணி எழுதிய புத்தகத்திலிருந்து இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்னதும் இப்படத்தின் இயக்கத்தில் ரேணியின் இளைய மகன் துணைநின்றதும் முக்கியமான விஷயங்கள்.

*

இரவு 7.15 மணி:

Superegoes/Germany/Benjamin Heisenberg/93’/2014

மனிதர்களின் விசித்திரமான நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் உளவியல் போக்குகளை படு நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ள படம். பொஹிமிய நாடோடி ஒருவன் உளவியல் மருத்துவரைச் சந்திக்கிறான். விரைவில் அவன் உளவியல் மருத்துவரின் முக்கியமான பரிசோதனைப் பொருளாக மாறுகிறான்.

அதேநேரத்தில் அந்த பொஹிமியன் வாழ்க்கை எந்தவித மோசமும் இல்லாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அது விபரீதமாக மாறுகிறது. பொஹிமியனை தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்க பூமிக்குள்புதைத்து நிற்க வைக்கிறார் மருத்துவர். அதனால் உண்டாகும் மனஎழுச்சிகளை கண்டறிய முற்படுவது முதலாக படம்முழுவதும் பிளாக் காமெடி நிறைந்து வழிகிறது. பெர்லின் திரைப்படவிழா பனோரமாவில் இடம்பெற்றது.

You May Like

More From This Category

More From this Author