Last Updated : 12 Dec, 2014 01:25 PM

 

Published : 12 Dec 2014 01:25 PM
Last Updated : 12 Dec 2014 01:25 PM

கிறிஸ்துமஸ் தினத்தன்று அலிகாரில் மிகப் பெரிய மறு மதமாற்ற நிகழ்ச்சி?

உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இந்து சமய ஜகரன் சமிதி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பாஜக-வை சேர்ந்த கோரக்ப்பூர் எம்.பி. யோகி ஆதித்யானந்த், அலிகார் எம்.பி. சதீஷ் கவுதம் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் செயல்படும் இந்து சமய பிரிவான ஜகரன் சமிதியின் பொறுப்பாளர் ராஜேஷ்வர் சிங், 'தி இந்து'பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் கூறும்போது, "இந்து சமயத்திலிருந்து கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யப்பட்ட பலருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மீண்டும் மறு மதமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

ஊடகங்கள் பரப்புவது போல இது மதமாற்ற நிகழ்ச்சி அல்ல. அச்சத்தின் காரணமாக இந்து மதத்தைச் சேர்ந்த மிகப் பெரிய அளவிலான வெவ்வேறு மதங்களுக்கு கட்டாயப்படுத்தி மாற்றபட்டனர். தற்போது இந்த மக்கள் அவர்களது உண்மையான நம்பிக்கைக்குரிய இடத்தில் மீண்டும் இணைகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலிருந்து பலதரப்பட்ட மக்கள் இதில் கலந்துகொள்கின்றனர். கிருஸ்துவ மத பரப்பாளர்கள் நாட்டில் மிகப் பெரிய அளவில் சட்டவிரோதமான மதமாற்றத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். தற்போது அந்த சமயத்திலிருந்து விடுபட்டு மக்கள் இந்து மதத்தில் இணைவது அவர்களிடத்தில் கொண்ட நம்பிக்கை இழந்ததை காட்டுகிறது.

அலிகார் நகரம் இந்து பாரம்பரியம் கொண்டது. தற்போது இந்த நகரத்தில் வரலாற்றை மீட்டு கொண்டு வரவேண்டிய தருணம் வந்துவிட்டது" என்றார்.

இதனிடையே அலிகாரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய ராஜேஷ்வர் சிங்குக்கு நெருக்கடி வந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 'தி இந்து' செய்தியாளர்கள் அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அவரது செல்போன் எண் அனைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த வாரம் 100 முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பிய நிலையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x