Published : 03 Nov 2014 04:21 PM
Last Updated : 03 Nov 2014 04:21 PM

தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் பெருகிவிட்டன. சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற, காப்பாற்றப்பட தமிழ்நாட்டிலே ஒரு பெரும் புரட்சி தேவை என திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.

பால் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தென் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசுக்குப் பெயர் அ.தி.மு.க. அரசு என்று சொல்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்தால், கோட்டையிலே இருக்கிறதா? கொலு மண்டபத்திலே இருக்கிறதா? எந்தக் கோட்டத்திலே அந்த அரசு இருக்கிறது என்று நாம் தேட வேண்டிய நிலைமையிலே, அந்த அரசு இன்றைக்கு எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றது.

நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த அல்லது கவனத்தை ஈர்த்த அரசாக இருக்குமேயானால்,அதை நாம் குற்றஞ்சாட்டிப் பேச முடியும். ஆனால் இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா அல்லது பன்னீர் செல்வம் அரசா அல்லது பினாமி அரசா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

நான், யாரைத் தேடிப் பிடித்து, அய்யா உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன வழி சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க வழியில்லை. காரணம், அவர்கள் யாரும் நம்மைப் பார்ப்பதும், பார்க்க விரும்புவதும் இல்லை, விரும்பினாலும் பதில் சொல்லத் தயாராக இல்லை.

திமுக ஆட்சியிலே பால் விலையை உயர்த்தியிருந்தால், பூமிக்கும் ஆகாயத்திற்குமாக குதிக்கக் கூடியவர்கள், இன்றைக்கு பால் விலையைத் தான் உயர்த்தியிருக்கிறோம், அதனால் என்ன என்று சொல்வார்கள். ஆலைகள் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேற்றப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புகூட நோக்கியா ஆலை, ஆயிரக்கணக்கான தொழிலாளத் தோழர்களை இழந்து விட்டு அவர்களை யெல்லாம் கண் கலங்க விட்டு விட்டு மூடப்பட்டு விட்டது என்கிற செய்தியைக் கேட்கிறோம்.

ஒவ்வொரு நாளும் ஏழு கொலை, எட்டு கொலை, பத்து கொலை என்று நடைபெறுகிறதே, சட்டம், ஒழுங்கு, அமைதி இதைப்பற்றிய பிரச்சினைகளைப் பற்றி யாரும் ஆட்சியிலே இருப்போர் கவலைப் படுவதில்லை. எனவே சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற - காப்பாற்றப்பட - தமிழ்நாட்டிலே ஒரு பெரும் புரட்சி தேவை. அந்தப் புரட்சியைத் தொடங்க வேண்டியவர்களும் நீங்கள் தான்.

தமிழினம், இன்றைய தினம் தடுமாறி நிற்கின்றது. இந்தத் தமிழ் இனத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை எனக்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற இளைஞர்கள், வாலிபர்கள், நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புதிய ஆட்சியை உருவாக்க நீங்கள் எல்லாம் முன் வர வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x