Published : 28 Nov 2014 10:50 am

Updated : 28 Nov 2014 10:50 am

 

Published : 28 Nov 2014 10:50 AM
Last Updated : 28 Nov 2014 10:50 AM

அஸ்தமனத்தின் தூதுவர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்னால் எனது தாய் மரணம் அடைந்தார். இறப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே அவர் விநோதமாக நடந்துகொள்ளத் தொடங்கினார். டாக்டர்களிடம் அழைத்துச் சென்ற பிறகுதான் அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவும் அவர் வித்தியாசமாகத்தான் இருந்தார்.

இருட்டான, அமைதியான இடத்துக்குச் சென்று, பல போர்வைகளைச் சேர்த்து போர்த்திக்கொண்டு பந்துபோலச் சுருண்டு படுத்துக்கொள்வார். அவருக்குப் பக்கத்திலேயே 3 பூனைகள் அவரைக் கட்டிக்கொண்டு படுத்திருக்கும். இறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் அவருடைய கைகள் அசைவற்ற நிலைக்குச் சென்றதுமே எனக்குப் புரிந்துவிட்டது, அந்திமம் நெருங்கிவிட்டதென்று. நம் அன்புக்குரியவரின் இறுதி நாட்களில் அவருடன் இருப்பது என்பது துயரம் நிறைந்தது. ஆனாலும், அதை அவர் அறியாத வகையில், முகத்தில் புன்னகை தரித்துக்கொண்டு, தேவைப்பட்டதையெல்லாம் நேரம் பார்த்துச் செய்துகொண்டிருக்கும் அனுபவம் வித்தியாசமானது. அவருடைய மூச்சு பிரிந்த பிறகு நொறுங்கி அழப்போகிறோம் என்றாலும், அதுவரை நம்முடைய சோகத்தை வெளிப்படுத்தாமல், இயல்பாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள வேண்டும்.

அறிவிக்க வந்த கழுகுகள்

பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் குடும்ப நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வந்தார்கள். என் தாயுடன் சில மணி நேரம் இருப்பதாக அவர்கள் உறுதி கூறியதால், சிறிது மாறுதலாக இருக்கட்டுமே என்று காரை எடுத்துக்கொண்டு இலக்கில்லாமல் நெடுஞ்சாலையில் ஓட்டினேன். அது குளிர்காலம் என்பதை வானம் காட்டியது. வாணலியின் உட்குழிவான பரப்பு போன்ற நிலப்பரப்பு ஒன்று கடந்துசென்றது. இயற்கைக் காட்சி, எளிமையான கவிதையாக என் முன் விரிந்தது.

எண்ணங்கள் ஏதோ ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்ததால், ஆக்சிலேட்டரைப் பலம்கொண்ட மட்டும் அழுத்திக்கொண்டேயிருந்தேன். திடீரென விழிப்படைந்து பெருமூச்சுவிட்டு, என் எண்ணச் சுழலை விரட்டினேன். சாலைத் திருப்பத்தில் வரிசையாக இருந்த உயரமான மரங்கள் கண்ணைக் கவர்ந்தன. சில விநாடிகளில் அவற்றில் ஏதோ ஒன்று என் பார்வையை ஈர்த்தது. மரக் கிளையின் உச்சியில் முதலில் ஒரு கழுகு தென்பட்டது. அடுத்து இன்னொன்று, அருகில் மற்றொன்று. ஒன்று, தன்னுடைய நீண்ட இறகை விரித்து மேலும்கீழும் அடித்துக்கொண்டது. இன்னொன்று, ஒரு சுற்றுச் சுற்றி அடுத்த மரத்தின் கிளையில் போய் அமர்ந்தது. மற்றொன்று, டென்னிசன் கவிதையில் வரும் மின்னலைப் போல செங்குத்தாகச் சட்டெனக் கீழே இறங்கியது. இரண்டு கழுகுகள் சிறிதுகூட அசையாமல் சிலையைப் போல உட்கார்ந்திருந்தன. இப்படியே மொத்தம் 9 கழுகுகள். அன்றைக்கு தேதியும் பிப்ரவரி 9.

பிறகு வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்தேன். அருகில் இருந்த என் அன்னை தன்னுடைய கடைசி மூச்சை இழுத்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட நிசப்தம் என் விலாவைக் கத்திபோல ஊடுருவியது. அந்தக் கணத்தில் ஆழ்ந்த நிம்மதியும் அமைதியும் ஏற்பட்டது. இனி எந்த வேதனையும் அந்த உடலுக்கு இல்லை.


எனக்கு ஆன்மிக உணர்வுகள் கிடையாது. அவ்வப்போது இயற்கையில் என்னை இணைத்துக்கொண்டு, மன அழுத்தங்களைப் போக்கிக்கொள்வேன். அன்றிரவு மீண்டும் அந்தக் கழுகுகள் என் நினைவுக்கு வந்தன. அவை இயற்கையின் தூதாக என்னுடைய தாயாரின் இறப்பை எனக்கு அறிவிக்க வந்ததாகக் கருதினேன்.

நமக்கு மிகவும் பிடித்தவர்களின் இறப்பின்போதோ, அல்லது நினைவுநாளிலோ பிராணிகள் அல்லது பட்சிகள் நேரில் தோன்றும் என்பது பலருடைய நம்பிக்கை. செரில் ஸ்டிரேய்ட் என்ற நூலாசிரியை தனது தாயை இழந்த பிறகு, நரியைச் சந்தித்தது குறித்து ‘வைல்ட்’ என்ற தன்னுடைய நினைவுநூலில் சுவைபட விவரித்திருக்கிறார்.

ஒரு பட்டாம்பூச்சி பறந்துவந்து உங்களுடைய முழங்கையில் உட்காருகிறது. எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும் மான் மேய்வதை நிறுத்திவிட்டு உங்களையே மருட்சியோடு பார்க்கிறது. இதுவரை நீங்கள் பார்த்தேயிராத நாய் ஒன்று வாலைக் குழைத்துக்கொண்டு எதையோ தெரிவிப்பதுபோல் உங்களை உரசியபடி சுற்றிச்சுற்றி வருகிறது. வீட்டுக்கு வெளியே கதவைத் திறந்தால் தெரியும் அணில், தோட்டத்துப் பக்கம் குரலெழுப்பும் சின்னப் பறவை என்று எதைப் பார்த்தாலும் அம்மாவின் முகம் அவற்றில் தெரிகிறது. ‘அம்மா இதில் நீ ஏதாவதா?’ என்று உள்மனம் ஏக்கத்தோடு கேட்கிறது. இது முட்டாள்தனம்தான். ஆனால், அந்த நேரத்தில் அந்த நினைப்பே மனதுக்கு அளவற்ற ஆறுதலைத் தருகிறது.

நம்பிக்கைகளின் உலகம்

மனிதர்கள் பல்வேறு ஜென்மங்களை எடுக்கிறார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பிராணிகள், பறவைகள் என்று பல பிறவிகள் எடுத்து மனிதர்களாகி பிறகு தெய்வத்தை அடைகிறோம் என்பார்கள். எகிப்தில் பூனைகளைப் புனிதமாகக் கருதுகின்றனர். கத்தோலிக்க மதகுருவான புனித பிரான்சிஸ் பிராணிகளுக்கும் சுவிசேஷத்தை அருளினார். அமெரிக்கப் பூர்வகுடிகள் ஓநாய்கள், கழுகுகள் போன்றவை தங்களை வழிநடத்துவதாக நம்பினார்கள்.

தங்களால் பார்க்க முடியாததை பிராணிகள் மூலம் அறிய மனிதர்கள் விரும்புகிறார்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஏதோ ஒன்று, நம்மைச் சுற்றியுள்ள ஏதோ ஒன்றில் கலந்து தொடர்ந்து வாழ்கிறது. பிராணிகளின் பார்வையிலும் சைகையிலும் ஏதாவது தகவல் இருக்குமோ?

நெருங்கியவரின் மரணத்துக்குப் பிறகு சோகத்தில் மூழ்கியிருக்கும்போது நம்முடைய காரண அறிவு சற்றே விலகிவிடுகிறது. யார் எதைக் கூறினாலும் ஏற்கும் மனநிலையில் இருக்கிறோம். “துக்கம் அனுஷ்டிப்பவர் மிகவும் புனிதமானவர். இவ்வுலக வாழ்க்கைக்கு அப்பால் என்ன என்ற தேடுதலில் இருப்பவர் அவர்” என்று குறிப்பிடுகிறார் பவுத்த குரு தாரா பிராச்.

துக்கப்பட்ட வேளையில், சோகத்தை இறக்கிவைக்க ஆறுதலாக ஒரு தோள் தேவைப்படுகிறது. அது அருகில் இருக்கும் எந்த உயிரினம் மூலமாக இருந்தாலும் அற்புதமான வரமாகவே தோன்றுகிறது. அந்த 9 கழுகுகளை என்னுடைய தாயே அனுப்பியிருக்கக் கூடும் என்ற நினைப்பே மனதை ஆறுதலாக வருடுகிறது.

ஒருவேளை என் நம்பிக்கை பொய் என்றாலும், அந்தக் காட்சிக்காகவும் அந்த நினைப்புக்காகவும் அந்த கழுகுகளுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் - என்னிடம் கொடுக்க ஏதும் இல்லாவிட்டாலும்!

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

மரணம்இறப்புமறுஜென்மம்பறவைகள்விலங்குகள்

You May Like

More From This Category

More From this Author