Published : 13 Sep 2014 11:11 AM
Last Updated : 13 Sep 2014 11:11 AM

ஆஸ்திரேலியாவில் திருமந்திரத்தின் புகழை பரப்பிய காந்திகிராமம் பேராசிரியர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சைவசமய மாநாட்டில் திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் சி.சிதம்பரம் கலந்து கொண்டு திருமந்திரம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி சைவ மன்றம், உலக சைவ பேரவை சார்பில் புகழ்பெற்ற சிட்னி முருகன் கோயில் வளாகத்தில் சைவ ஆகமங்கள், திருமுறைகள் மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித மேயம் குறித்த பதினோராவது சைவ மாநாடு கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சி.சிதம்பரம் கலந்து கொண்டார். இவர் சைவ சமயம் சம்பந்தமாக எழுதிய ஆய்வுக்கட்டுரையை, மாநாட்டு அமைப்புக்குழு தேர்வு செய்து இவரை ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சைவ சமய மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது.

இவர், ஆஸ்திரேலியாவில் நடந்த மாநாட்டில் பங்கேற்று, திருமந்திரம் காட்டும் வழிபாட்டு நெறிமுறைகள் எனும் தலைப்பில் பேசினார். தமிழகத்தில் உள்ள சிறப்புவாய்ந்த கோயில்கள் மற்றும் ஆகம வழிபாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

இதுகுறித்து பேராசிரியர் சி.சிதம்பரம் கூறும்போது, நெறியை தமிழ் உலகுக்கு வழங்கிய சித்தர் பரம்பரையில் முதன்மையும், தொன்மையும் வாய்ந்தவர் திருமூலர். ‘சித்தாந்தத்தின் தந்தை’ என போற்றத்தக்கவர். முதன்முதலில் ‘சித்தாந்தம்’ என்ற சொல்லை தமது திருமந்திரத்தில் எடுத்தாண்டவரும் இவரே. இவரால் பாடப்பட்ட திருமந்திரப் பாடல்கள் பத்தாம் திருமுறையாகத் திகழ்கின்றன. இந்த பத்தாம் திருமுறையில் இறைவழிபாடு பற்றிய செய்திகள் அதிகமாக காணக் கிடக்கின்றன. சைவ சமயம் குறிப்பிடும் சரியை, கிரியை, ஞானம், யோகம் எனும் நால்வகை நெறிகளையும் சுட்டும் திருமூலர், இறைவழிபாட்டில், புற வழிபாட்டு நெறிகளைவிட அக வழிபாட்டு நெறிகளையே மேன்மையுடையதாக வலியுறுத் துகிறார். இன்றைய காலச்சூழலில் அகவழிபாடு எந்த அளவுக்கு சமுதாயத்துக்கு பயன்படுகிறது என்பது பற்றி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் விரிவாக விவாதித்தனர், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x