Published : 29 Sep 2014 05:01 PM
Last Updated : 29 Sep 2014 05:01 PM

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை சிட்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் உட்பட தமிழ்த் திரையுலகைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, நாளை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும், படப்பிடிப்புகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும், அனைத்துத் திரையரங்குகளின் காட்சிகளும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எங்கள் அன்பின் வெளிப்பாடு; நன்றி உணர்வின் வெளிப்பாடு. காலம் மாறும். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகம் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x