Published : 15 Sep 2014 08:20 AM
Last Updated : 15 Sep 2014 08:20 AM

உள்ளாட்சி இடைத் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் நடைபெற்ற அத்துமீறல்கள், விதிமீறல்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் இந்த தேர்தலையே நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய கனரக மற்றும் பொதுத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மேயர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகப் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார். கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இது தானாக வந்த தேர்தல் அல்ல. மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். இடைத்தேர்தல் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மரணம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அந்த மக்கள் பிரதிநிதி தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கே இருந்த மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் முறையாக நடக்காது என்ற காரணத்தால் திமுக உள்பட சில கட்சிகள் போட்டியிடவில்லை. அதே சமயம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாஜக இத்தேர்தலை சந்திக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யக் காலஅவகாசம் கூட தேர்தல் ஆணையத்தால் சரியாக வழங்க முன்வராத சூழலிலும் அதை சவாலாகக் கருதி பாஜக போட்டியிடுகிறது. அப்படியிருந்தும் பல இடங்களில் பாஜக வேட்பாளர்களைப் போட்டியிடவே அனுமதிக்காத வகையில் ஆளும் கட்சி காவல் துறை மூலம் தடுத்தாளும் போக்கு நடைபெற்றுள்ளது.

அதையும் மீறி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மூலம் அனைத்து முறைகளும் கையாளப்பட்டன. எங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறச் சொல்லி அமைச்சர்கள் சிலர் கெஞ்சிய சூழல்களையும் பார்க்க முடிந்தது.

நெல்லை வேட்பாளர் வெள்ளையம்மாள் வேட்பு மனு தாக்கலின்போது என்னிடம் ஆசி பெற வந்தார். என்னை தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என்றும் அழைத்தார். அதற்குப் பிறகு அவர் கடத்தப்பட்டாரா, அவரே கடந்து போனாரா என்பது தெரியவில்லை. இப்போது அவர் அதிமுகவில் உள்ளார்.

மதுரையில் ஒரு வேட்பாளர் வாபஸ் பெற்றதாக அறிவித்தார்கள். அவர் வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது எங்களுடன்தான் இருந்தார். ஆக, அவர் கையெழுத்தையே போட்டு வாபஸ் பெற்றுவிட்டதாக அறிவிக்கிறார்கள்.

இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் இந்த தேர்தலையே நடக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

கோவையில் வாக்காளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதை எங்கள் கட்சியினர் பிடித்து வீடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகார் செய்துள்ளார்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கி ஒரு தேர்தல் நடைபெறுகிறதென்றால் அதற்கு என்ன அவசியம் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

உங்கள் வேட்பாளரை ஆதரிக்குமாறு திமுகவுக்கு அழைப்பு விடுத்தீர்களா?

இந்த தேர்தலில் அனைத்து சக்திகளும் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். மக்கள் மட்டுமல்ல; தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகளும் ஆதரிக்கணும்.

20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கோவையில் முகாமிட்டுள்ளது குறித்து...

சட்டசபையை பேசாமல் கோவைக்கு மாற்றிவிடலாம்.

உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் அத்துமீறல்கள், விதிமீறல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிப்பீர்களா?

(சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x