Published : 28 Sep 2014 11:08 AM
Last Updated : 28 Sep 2014 11:08 AM
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிமுக வினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவதால், மத்திய அரசின் பாதுகாப்பு படையினரை தமிழகத் துக்கு அனுப்பி அமைதி ஏற்படுத்த வேண்டும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
சட்டத்தையும், நீதியையும் எப்போதும் வளைத்துவிட முடியாது, நீதி இன்னும் வாழ்கிறது என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது. பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாமக சார்பில் வரவேற்கிறோம்.
வைகோ (மதிமுக பொதுச் செயலர்)
இந்த தீர்ப்பு ஊழல் அரசிய லுக்கு எச்சரிக்கை மணி அடித் துள்ளது. நேர்மையான அரசிய லுக்கு நம்பிக்கை வெளிச்சம் கொடுத்துள்ளது. இத்தீர்ப்பு நீதித் துறையின் நம்பகத் தன்மையை இமயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்)
ஜெயலலிதா மீதான வழக் கில் வெளியாகியுள்ள தீர்ப்பு, மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தி யுள்ளது. இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தால் அவர் எத்தனை பெரிய பொறுப் பில் இருந்தாலும் நீதி தன் கடமையை செய்யும் என்பது நிரூபணமாகியுள்ளது.
ஞானதேசிகன் (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்)
தீர்ப்பை தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். தீர்ப்பின் மீது விமர்சனம் என்பது இருக்கக் கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக காவல்துறைக்கு உள்ளது. அது தனது கடமையை செய்யும் என்று நம்புகிறேன்.
ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம் மாநிலச் செயலர்)
பொது வாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
சரத்குமார் (சமக தலைவர்)
இது இறுதித் தீர்ப்பு அல்ல. இதற்கு மேலாக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைப்பதற்கு வழி இருக்கிறது. சட்ட நடவடிக்கை மூலம் மேல்முறையீடு செய்து முதல்வர் ஜெயலலிதா வெற்றி காண்பது உறுதி.