Published : 07 Sep 2014 12:53 PM
Last Updated : 07 Sep 2014 12:53 PM
உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது அதிமுகவினர் அராஜகம் செய்ததாக பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் மாநில தேர்தல் ஆணையர் எஸ்.அய்யரிடம் சனிக்கிழமை புகார் தெரிவித்தன.
புகார் அளிக்க வந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.வெங்கடேசனின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக 5-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 6-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் அதிமுக வேட்பாளரின் வேட்புமனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலிலும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மறு தேர்தல் நடத்த வேண்டும்,” என்றார்.
இதே போன்று ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை கண்டித்து புகார் அளிக்க வந்திருந்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், “மேல்மலையனூரில் போட்டியிட இருந்த பாஜக வேட்பாளர் பிரபாகரன் கடத்தப்பட்டுள்ளார்.
தேவக்கோட்டையில் டெபாசிட் கட்டணம் தாமதாக கட்டப்பட்டதாக ரசீதில் தேதியை மாற்றி எழுதி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருப்போரூர், குன்னூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறியுள்ளனர். களத்தில் உள்ள கட்சிகளைப் பார்த்து தோல்வி பயத்தால் தான் அதிமுக இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
எனவே, வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் தேர்தலை ஜனநாயகமான முறையில் நடத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்றார்.
புகார்களை பெற்றுக் கொண்ட மாநில தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து அறிக்கைப் பெற்று, அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக தமிழிசை குறிப்பிட்டார்.