Last Updated : 08 Sep, 2014 10:00 AM

 

Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

250 ஆண்டு பழமையான கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை: கோட்டையில் ஆய்வுப்பணியை தொடங்கியது தொல்லியல் துறை

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள 250 ஆண்டு பழமையான ‘கிங்ஸ் பராக்ஸ்’ கட்டிடம் சிதிலமடைந்திருப்பதால், அதை சீரமைப்பதற்கான ஆய்வுப் பணியை தொல்லியல் துறை பொறியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மிகப் பழமையான பாரம்பரிய கட்டிடங்கள் பல உள்ளன. இவற்றில் சில கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளன. அங்குள்ள கட்டிடங்களிலேயே மிகப் பெரியது ‘கிங்ஸ் பராக்ஸ்’ கட்டிடம். அந்தக் காலத்தில் அரசரின் படைப்பிரிவுகள் தங்கியிருந்ததால் இப்பெயர் பெற்றது. தற்போது இங்கு பாதுகாப்புத் துறையினருக்கு குறைந்த விலையில் குண்டூசி முதல் டிவி, ஃபிரிட்ஜ் வரையிலான பொருள்களை விற்கும் கேன்டீன் ஸ்டோர்ஸ் டிப்போ செயல்பட்டு வருகிறது.

250 ஆண்டு பழமையானது

மிகப் பழமையான இந்த 2 மாடிக் கட்டிடம் 1756-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதன்பிறகு 1762-ல் விரிவுபடுத்தப்பட்டது. பாரம்பரியமிக்க இக்கட்டிடம் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ‘கிங்ஸ் பராக்ஸ்’ கட்டிடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்திருப்பது பற்றி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தை சீரமைக்க தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

கண்காணிப்பாளர் பேட்டி

இதுகுறித்து தொல்லியல் துறை (சென்னை வட்டம்) கண்காணிப்பாளர் ஜி.மகேஸ்வரி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புனித ஜார்ஜ் கோட்டையில் பெரிய சேமிப்புக் கிடங்கு, அர்ஸெனல், சாப்ளைன்ஸ் ஹவுஸ், கிளைவ்ஸ் ஹவுஸ், கேரிசன்ஸ் இன்ஜினீயர்ஸ் டெப்போ, கார்ட் ரூம் எண்-5, கிங்ஸ் பராக்ஸ், லாஸ்ட் ஹவுஸ், நர்சிங் சிஸ்டர்ஸ் பிளாக், ஓல்டு பிரிட்டிஷ் இன்ஃபென்ட்ரி மெஸ், கோட்டை மதிற்சுவர், வாயில்கள், அகழிகள், புனித மேரி தேவாலயம் மற்றும் வெல்லெஸ்லி ஹவுஸ் ஆகிய பழமையான 12 கட்டிடங்கள் உள்ளன. இதில் 5 கட்டிடங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் மற்றவை ராணுவத்திடமும் உள்ளன.

அனுமதி கேட்டு கடிதம்

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சில கட்டிடங்கள் சிதிலமடைந்து வருவதால் அதை பராமரிக்க தொல்லியல் துறை சில ஆண்டுகளாக தொடர்ந்து அனுமதி கேட்டுவருகிறது. கடந்த ஆண்டு நான் பதவியேற்றபிறகு, அப்போதைய தென்மண்டல லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதினேன். அதன்பிறகு கட்டிடத்தின் சில இடங்களில் சிமென்ட் போட்டு ராணுவத்தினர் பராமரிப்பு செய்திருந்தனர்.

அப்படி செய்யக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, கட்டிடங்களை முழுமையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக பாரம்பரியமிக்க கிங்ஸ் பராக்ஸ் கட்டிடத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் பெயர்ந்து விழுந்துவிட்டன. அதை உடனடியாக செப்பனிட தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதைத் தொடர்ந்து, தற்போது பராமரிப்பு பணிகளைத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லாவரத்துக்கு கேன்டீன் மாற்றம்

தற்போது, அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனை விரைவில் பல்லாவரத்துக்கு மாற்ற ராணுவம் திட்டமிட்டுள்ளது. எனினும், கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகளில் பராமரிப்புப் பணியை விரைவில் தொடங்கவுள்ளோம். இதற்கான செலவை நாங்கள் ஏற்போம். கட்டுமானத்தின் மேற்பார்வையை ராணுவத்தினர் பார்த்துக் கொள்வர்.

இதுதொடர்பான ஆய்வை கடந்த புதன்கிழமை தொல்லியல் துறை பொறியாளர்கள் குழு தொடங்கியுள்ளது. கட்டிட சேதம் மற்றும் செலவு பற்றிய அறிக்கையை இந்தக் குழு விரைவில் அளிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளைத் தொடங்கிவிடுவோம். மேலும், கோட்டை சுவரில் வளர்ந்திருக்கும் செடிகளையும் வளாகத்தில் உள்ள புதர்களையும் அழித்து அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x