Published : 14 Sep 2014 09:30 AM
Last Updated : 14 Sep 2014 11:55 AM
நான் முதல்வரானால் மகாராஷ் டிரத்தை முதலிடம் பெறச் செய்வேன் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் அக்டோபர் 15-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவராக இருப்பார் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் சிவசேனா, பாஜக கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘மாநிலத் தின் முதல்வர் வேட்பாளராக நானே களமிறங்குவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி கலந் துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தபோது நரேந்திர மோடி முதல் வரிசைக்கு வந்தார். அவரை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்தனர்.
இப்போது மகாராஷ்டிர சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதிய முகத்தை அவர்கள் தேடுகிறார்கள். அந்த புதிய முகம் சிவசேனாவின் முகமாகத்தான் இருக்கும். என்னை மக்கள் தேர்ந் தெடுத்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்.
நான் பால்தாக்கரேவின் மகன். எனது பொறுப்பை ஒருபோதும் தட்டிக் கழிக்க மாட்டேன். நான் முதல்வரானால் மகாராஷ்டிரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி முதலிடம் பெறச் செய்வேன்.
மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் ஆட்சி நிர்வாகம் குறித்து புகார் அளிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பு அளிக்கவே மாட்டேன். மகாராஷ்டிரத்தில் நல்லாட்சி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
வரம்பு மீறக்கூடாது
பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உத்தவ் தாக்கரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாங்கள் போட்டியிடாத தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்களின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த வேண்டும் என்றுதான் விரும்பும். பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே 25 ஆண்டு கால நட்புறவு உள்ளது. எனினும் கூட்டணி கட்சிகள் தங்கள் வரம்பை மீறாமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது என்று அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தற்போது காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2009 சட்டமன்றத் தேர்தலின்போது சிவசேனா 160 தொகுதிகளில் போட்டியிட்டு 44 இடங்களில் வென்றது. பாஜக 119 இடங்களில் போட்டியிட்டு 46 தொகுதிகளைக் கைப்பற்றியது. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 23 இடங்களிலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எனவே மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்தவரே புதிய முதல்வராக தேர்ந்தெடுக் கப்படுவார் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி யாகவே உத்தவ் தாக்கரே தனது முதல்வர் கனவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.