Published : 24 Sep 2014 06:14 PM
Last Updated : 24 Sep 2014 06:15 PM
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் வில்வித்தை ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் சிறந்த வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ராஞ்சி வீராங்கனையான தீபிகா குமாரி, 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் இரட்டைத் தங்கம் வென்றவர்.
அவர் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 70, 60, 50, மற்றும் 30 மீ தூரம் அம்பெய்தும் போட்டியில் மொத்தமாக 1337 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடம் வந்தார். இதனால் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்று, அதில் உஸ்பெக் வீராங்கனை முனிரா நுர்மனோவா என்பவருடன் செப்டம்பர் 26ஆம் தேதி மோதுகிறார்.
மற்ற 3 வீராங்கனைகளான லஷ்மிராணி மாஜி, லைஷ்ரம் பம்பாய்லா தேவி மற்றும் பிரனிதா வர்தனேனி ஆகியோர் முறையே 15, 20, மற்றும் 30 ஆம் இடங்களில் முடிந்தனர்.
தீபிகா குமாரி மற்றும் லஷ்மிராணி ஆகியோர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். லஷ்மிராணி கிர்கிஸ்தான் வீராங்கனை ஷர்பெகோவா அசேல் என்பவருடன் மோதுகிறார்.
அணிகள் பிரிவில் இந்திய மகளிர் அணி மொத்தம் 3957 புள்ளிகளுடன் 5ஆம் இடம் பிடித்தது. இதனால் ஹாங்காங் அணியை காலிறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி சந்திக்கிறது.
அணிகள் பிரிவில் பதக்கம் வெல்வது மிகமிகக் கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில், தென்கொரியா, சீனா, ஜப்பான், சைனீஸ் தைபே ஆகிய நாடுகளை வீழ்த்துவது கடினம்.