Published : 06 Sep 2014 12:10 PM
Last Updated : 06 Sep 2014 12:10 PM
நகர்ப்புறம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கு 2 புதிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சென்னையில் 33 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் கிண்டியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். இத்திட்டப் பணிகள் எனக்கு திருப்தி அளிக்கிறது. முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே வரும் டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்போக்குவரத்து நிச்சயம் தொடங்கும். 2015-ம் ஆண்டில் சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவகங்கள், ஸ்டால்கள், ஏடிஎம், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் வருவாயைப் பெருக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்.
மத்திய பொதுப்பணித் துறையில் தற்போது நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து டெல்லியில் வரும் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 60 தலைமைப் பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். திறன், அளவு கோல், வேகம் (டிரிபிள் எஸ்) என்ற அடிப்படையில் திட்டப்பணிகளை விரைவுபடுத்தவும், திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மை, நம்பகத் தன்மை, குறித்த காலத்துக்குள் முடித்தல் ஆகியன அவசியம் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் என்ன ஆட்சி நடக்கிறது என்று பார்க்காமல், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியே முன்னிறுத்தப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த, பிரதமர் மக்கள் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ், வியாழக்கிழமை மாலை வரை 2 கோடியே 30 லட்சம் பேர் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்குள் 10 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்பது இலக்கு. ஆனால், அடுத்த குடியரசு தினத்துக்குள்ளாகவே இலக்கு எட்டப்பட்டுவிடும்.
நகர்ப்புறம் மற்றும் வீட்டுவசதிமேம்பாட்டுக்காக 2 புதிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும். அரசு வீட்டு வசதித் திட்டங்கள் அனைத்தும் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்படும். ஆசிரியர் தினத்தையொட்டி நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இதைக்கூட குறைசொல்கிறார்கள். உயர்ந்த நோக்கத்துக்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒன்றும் அரசியல் சொற்பொழிவு இல்லை.
பொது போக்குவரத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, மோனோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு வாய்ப்புகள் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு தாங்கள்தான் அடித்தளம் போட்டதாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சொல்கிறார். 10 ஆண்டுகளாக அடித்தளம் போட்டார்களா. அடித்தளம் போட்ட அடுத்த ஆண்டே பலன் கிடைக்க வேண்டாமா?
மாநிலத் தலைநகர் குறித்து முடிவெடுப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பமாகும். ஆந்திர மாநில தலைநகர் உருவாக்கப்படும்போது தேவையான உதவிகளை மத்தியஅரசு அளிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும் என்பதிலும், 1987-ல்ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனே செய்து கொண்ட ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் இலங்கை அரசுடன் சுமூகமான நல்லுறவும் பேணப்படும்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.