Published : 27 Mar 2015 09:25 AM
Last Updated : 27 Mar 2015 09:25 AM

கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடனுக்கான அசல், வட்டியை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி: தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் அசல் மற்றும் வட்டியை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், அரசு மற்றும் வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை அரசின் நிதியுதவி இல்லாமல் செலுத்தவும், மீண்டும் முதன்மைச் சங்கங்களுக்கு கடன் வழங்கி புத்துயிர் அளிக்கவும் மாபெரும் சலுகை திட்டத்தை செயல் படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறைப்படுத் தப்பட்ட தள்ளுபடி சலுகை திட்டங்களின் மூலம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களில் 56 ஆயிரத்து 373 பேர், சுமார் ரூ.464 கோடியே 10 லட்சம் அளவுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி சலுகை பெற்றனர். அதில் 49 ஆயிரத்து 364 பேருக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய அளவில் 31.12.2013-க்கு முன்பு குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவு கடன்கள், அடமான கடன்கள், திட்டக் கடன்கள், மனைப் பிரிவு ஆகிய திட்டங்களில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்ற உறுப்பினர்களின் வட்டிச் சுமையை குறைக்கும் வகையில் அசல் மற்றும் வட்டி செலுத்த முன்வருவோருக்கு அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி திட்டத்தில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன்பெற்ற கடன்தாரர்கள் தங்களின் தவணை தவறிய அசல் மற்றும் வட்டியை செலுத்தினால் தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

எனவே, உறுப்பினர்கள் இந்த தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி, தாங்கள் பெற்ற கடனுக்குச் செலுத்த வேண்டிய தவணை தவறிய தொகையை நிலுவையின்றி செலுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கையை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x