Last Updated : 09 Mar, 2015 09:01 AM

 

Published : 09 Mar 2015 09:01 AM
Last Updated : 09 Mar 2015 09:01 AM

ஏற்றத்தாழ்வு இயற்கையானதா?

உலக மகா பணக்காரர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவர்களுடைய தேவைகள்குறித்து யார் சிந்திப்பார்கள்? வாழ்க்கை அவர்களுக்கு ‘எளிதாக’ இருக்கப்போவதில்லை; உலக மக்கள்தொகையில் 1% மட்டுமே இருக்கும் உலக மகா பணக்காரர்கள் அடுத்த ஆண்டு உலக மக்கள்தொகையில் 99% மக்கள் கொண்டிருப்பதைவிட அதிகச் சொத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட முறையில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு அவர்களுக்கு நிறையச் செலவு பிடிக்கிறது. ஏற்றத்தாழ்வு அதிகமாகிக்கொண்டே வருவதால் சமூகத்தில் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கிறது. இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியக் கூடும்.

பெரும் செல்வம், பெரும் சிந்தனைகுறித்துப் பேச டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அரங்கின் மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ‘ஆக்ஸ்ஃபாம் சர்வதேசம்’ என்ற அமைப்பினர், உலகப் பெரும் பணக்காரர்களின் செல்வம் மட்டும் அதிகரிப்பதுகுறித்தும் ஏழை - பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போவதுகுறித்தும் கேள்விகள் எழுப்பினார்கள். “ஒரு சிலர் கைகளிலேயே செல்வம் குவியும் போக்கு, சர்வதேசப் பொருளாதாரச் சுணக்கத்துக்குப் பிறகு மேலும் அதிகரித்து விட்டது; அது வளர்ச்சிக்கும் நல்ல நிர்வாகத்துக்கும் உகந்ததல்ல” என்று ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் தலைமை இயக்குநர் வின்னி யான்யிமா எச்சரித்தார். ஏற்றத்தாழ்வு என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, பெரும் பணக்காரர்களுக்கும் நல்லதல்ல. அதனால்தான், ஐ.எம்.எஃப். தலைவர் கிறிஸ்டைன் லகார்டே போன்ற வர்கள்கூட ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

ஏழைகளின் தலையெழுத்து அப்படியா?

‘எல்லா இடங்களிலும் காணப்படும் ஆழமான ஏற்றத்தாழ்வானது பார்ப்பவர்களுடைய கண்களில்தான் இருக்கிறது, உண்மையில் இல்லை’ என்று கூறுகிறார்கள். ஏழ்மைக்குக் காரணம் ஏழைகள்தானே தவிர, வேறு எதுவும் இல்லை என்றும், அவர்களுடைய நெறிபிறழ்வுதான் அவர்களுடைய ஏழ்மைநிலை என்றும் கூறுகிறார்கள். அதாவது, பெரும் பணக்காரர்கள் அந்த நிலையில் இருப்பதில் தவறில்லை, அது அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பரிசு என்றே கருதுகிறார்கள். உண்மையில், பெரும் பணக்காரர்களில் ஏராளமானோரிடம் குவியும் செல்வம் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த சம்பாத்தியம் அல்ல; ஏற்கெனவே பெருஞ்செல்வத்தைத் தனது மூதாதையர்களிடமிருந்து பெற்றவர்கள்தான் அவர்கள். அந்தச் செல்வம் மேலும் அதிகமாகிறது அவ்வளவுதான். அதற்குக் காரணம் அவர்களுடைய அபாரத் திறமையல்ல, இப்படி நடப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் பொருளாதார அமைப்புதான் காரணம்.

பொருளாதாரச் சூழலானது பருவநிலையைப் போல இயற்கையானது - கட்டுப்படுத்த முடியாத காலநிலை போன்றது - என்கிறார்கள். புவிவெப்பம் அதிகரிப்பதைப் போல பெரும் பணக்காரர்களுக்கும் வருவாய், லாபம், சொத்து மதிப்பு போன்றவை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. உண்மையில், இந்த நிலையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர, தவிர்க்க முடியாதவை அல்ல. இப்படிச் செல்வம் குவிய அனுமதிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன, வேண்டுமென்றேதான் இப்படிச் செல்வம் குவிய அனுமதிக்கப்படுகிறது.

பணக்காரர்களின் துதிபாடிகள்

செல்வங்கள் ஏழைகளுக்கு மறுவிநியோகம் செய்யப்படுவதைப் பணக்காரர்கள் தடுத்துவிடுவார்கள். இடைத்தரகர்கள் மூலமும், தங்களுக்கு அணுக்கமான வரி ஏற்பாடுகள் மூலமும் அவர்கள் இதைச் சாதித்துக்கொள்கிறார்கள். ஆக, ஏற்றத்தாழ்வு என்பது தவிர்க்க முடியாதது அல்ல, அது வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. இப்படிப் பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைப் பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் ஏனென்று கேட்பதே இல்லை. ஏற்றத்தாழ்வும் பொருளாதார வளர்ச்சியின் துணை விளைவுதான் என்று கூறியும், பொருளாதார வீழ்ச்சியைக் கணித்து முன்கூட்டியே அரசுகளை எச்சரிக்கத் தவறியும்கூட இந்தப் பொருளாதார அறிஞர்கள் மீதான மதிப்பு மக்களிடையே குறையவில்லை.

ஒரு ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படத் தனியார் துறை நலனைவிடக் குடிமக்கள் நலன் அவசியம் என்கிறார் தாமஸ் பிக்கெட்டி. பணக்காரர்களுக்கே சாதகமாகப் பொருளாதார அறிஞர்கள் நடந்துகொள்ளும் இந்தச் சூழலில், பிக்கெட்டியின் சித்தாந்தம் புரட்சிகரமானதுதான். நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு உழைக்கும்போது செல்வம் ஒருசிலருடைய கைகளில் மட்டும்தான் குவியும் என்ற கட்டுப்பெட்டிகளின் வாதத்துக்குச் சவால் விடுகிறார் தாமஸ் பிக்கெட்டி.

உலக மக்கள்தொகையில் 1% கூட இல்லாத பெரும் பணக்காரர்கள், அவர்களுடைய அபரிமிதமான ஆற்றலாலும், சுய முயற்சியாலும்தான் அவற்றைப் பெற்றார்கள் என்பதை மக்கள் ஏற்கத் தயாரில்லை. பணக்காரர்கள் அனைவருமே ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் போனோ (இசைக் கலைஞர்) போன்றவர்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான் என்பது வெறும் மாயை. எல்லா தொழிலதிபர்களும் கற்பனாசக்தி கொண்டவர்களும், தொழில் மேலாண்மைத் திறன் உள்ளவர்களும், இணையற்ற உழைப்பாளிகளும் அல்லர். உண்மை என்னவென்றால், பரம்பரையாகக் கைமாறி வரும் சொத்துகளுக்கு அதிபராக இருப்பதாலும், தங்களுடைய திறமைக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறாமல், தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை நிர்ணயித்துக்கொள்வதாலும் அவர்கள் கொழுத்துக்கொண்டே வருகிறார்கள். வாராக் கடன் களால் வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தாலும் ஆண்டுக்கு 10 லட்சம் டாலருக்கு மேல் தங்களுக்கு ஊதியம் நிர்ணயித்துக்கொள்ளும் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

செல்வாக்கு இல்லாதவர்களுக்கு எதிராக, செல்வாக்கு உள்ளவர்கள் பக்கம் எப்போதுமே சிலர் சேர்ந்துகொள்வார்கள். பொருளாதார அறிஞர்கள் இதில் தனித்துவம் பெற்றவர்கள். “இப்போதுள்ள அரசு - பொருளாதார முறைமை பணக்காரர்களுக்கு ஆதரவாக இல்லை” என்று உண்மைக்கு மாறாகக் கூறியதற்காகப் பேராசிரியர் கிரிகோரி மான்கிவின் வகுப்பை, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இப்போதுள்ள சர்வதேச நிதி அமைப்புகளில் உள்ள மூத்த நிர்வாகிகளை மாற்றிவிட்டு, வேறு ஆட்களை நியமித்தாலும் ஒன்றும் மோசமாகிவிடாது. ஆனால், அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தைப் போல இரண்டு மடங்கு சம்பளத்தைத் தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக்கொள்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால், தங்களைத் தனிப் பிறவியாக நினைத்துக்கொள்ளட்டும், நாம் அப்படி நினைக்க வேண்டாம்.

முதலாளித்துவத்தின் புதிய அவதாரம்

‘புதிய தாரளமய’த்தைப் பற்றி நாம் பேசும்போது, இந்த ஏற்றத்தாழ்வு ஏன் பெரிதாகிக்கொண்டே போகிறது, 1% பணக்காரர்கள் எப்படி செல்வத்தின் பெரும் பங்கைத் தங்களுக்கு உரியதாக்கிக்கொள்ள முடிகிறது என்று பேச வேண்டியிருக்கிறது. நிதிச் சந்தைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொதுச் சேவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, நலவாழ்வுத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி, உழைக்கும் மக்களுடைய உரிமைகளைக் களையும் சட்டங்களை இயற்றி, தொழிற்சங்கங்களைப் பொது அமைதிக்கு எதிரியாகச் சித்தரித்துப் புதிய அவதாரம் எடுத்துள்ளது ‘முதலாளித்துவம்’ என்பதால்தான் இந்த ஏற்றத்தாழ்வு.

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆதரவாக, ‘வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’என்று தொடங்கிய மக்கள் இயக்கம், ஊக்கமின்றிச் சிதறிவிட்டது. பிரிட்டனில் மக்கள் மௌனமாக ஏற்றுக்கொண்ட அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐரோப்பாவில் - குறிப்பாக கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் - கிளர்ச்சிகள் தொடங்கியுள்ளன.

ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் வேண்டுகோள் சில பெரும் செல்வந்தர்களின் தர்ம சிந்தனையைத் தூண்டலாம், ஆனால் அது போதாது. பொருளாதாரத்தைச் சுணக்கத்திலிருந்து மீட்க நினைக்கும் அரசுகளின் முயற்சி தோல்வியில்தான் முடியும் - மக்களுடைய எதிர்ப்பால் அல்ல - மக்களுடைய வருவாய் குறைந்ததால், நுகர்வும் குறைவதால். உழைக்கும் வர்க்கம்குறித்து அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. ஆனால், மத்தியதர வர்க்கம் ஏமாற்றமடைந்துவருகிறது என்று தெரிந்தால் கவலைப்படுகிறார்கள்.

ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும் என்றால், அதைத் தவிர்க்க முடியாது என்ற உணர்வை முதலில் விலக்க வேண்டும். இது ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் இடத்தில் நாம் இல்லை. ஏழைகள் எப்போதுமே நம்மோடுதான் இருக்கின்றனர். இப்போது பெரும் பணக்காரர்களும் நம் பக்கம் வருகிறார்களோ? என்ன செய்வது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்த (பொருளாதார) பருவநிலையும் மாறக் கூடும்.

© ‘தி கார்டியன்’, |சுருக்கமாக தமிழில்: சாரி|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x