Published : 22 Mar 2015 11:18 AM
Last Updated : 22 Mar 2015 11:18 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகத்தேர்வு: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

ஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி நேர்முகத்தேர்வு நடத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியான பிறகு, சென்னையில் தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி நேர்முகத்தேர்வு (மாக் இண்டர்வியூ) நடத்தப்படும்.

மெயின் தேர்வு முடிவு வெளியான அடுத்த 2 நாட்களில் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் (காஞ்சி வளாகம்) உள்ள மேற்கண்ட பயிற்சி மையத்தில் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.

யார் யார் சேரலாம்?

அரசு மையத்திலோ, இதர பயிற்சி மையங்களிலோ அல்லது சுயமாகவோ மெயின் தேர்வுக்குப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இப்பயிற்சி பெறுவதற்கு தகுதியுடைவர் ஆவர். தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி 3 பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

யுபிஎஸ்சி நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த மாதிரி நேர்முகத்தேர்வினை மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நிபுணர்கள் நடத்துவர். இதில் பங்குபெறும் மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் 10 நாட்கள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும். அதோடு, செலவுக்காக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

மாதிரி நேர்முகத்தேர்வு நாள் விவரம் தொடர்பான தகவல்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் மெயின் தேர்வு முடிவு வெளியானதும் வெளியிடப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x