Published : 09 Mar 2015 02:41 PM
Last Updated : 09 Mar 2015 02:41 PM

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா, கர்நாடக அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

‘இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க வேண்டும், அரசுத் தரப்புக்கு உதவ அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டு க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வாதங்கள் நிறைவு

இம்மனு, நீதிபதிகள் மதன் லோக்கூர், ஏ.கே.கோயல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் ஆஜராகி, ‘மேல்முறையீட்டு விசாரணையில் வாதங்கள் முடிந்துள்ளன’ என்று நீதிபதிகளிடம் எடுத்துரைத் தார்.

க.அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதிடும்போது, ‘சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்குக்கு மட்டுமே அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் மேல் முறையீட்டு வழக்கிலும் தொடர்வது சட்ட விரோதம். அவர் பாரபட்சமற்ற முறையில் நடக்கவில்லை. அவர் நம்பகத் தன்மையை இழந்து விட்டார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை குலைத்து விட்டார். எனவே, அவரை நீக்கி உத்தரவிட வேண்டும். அதுவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும்’ என்றார்.

விசாரணை பாதிக்கும்

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கும் பேச்சுக்கே இப்போது இடமில்லை” என்றனர்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமன், “இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்பழகன் மனுவை விசாரணைக்கு ஏற்றால், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை பாதிக்கும்” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘மேல் முறையீட்டு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுவை ஏப்ரல் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 30-ம் தேதிக்கு வேண்டு மானால் தள்ளிவைக்கலாம்’ என்று தெரிவித்ததுடன், அன்பழகன் மனு குறித்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x