Last Updated : 09 Mar, 2015 11:43 AM

 

Published : 09 Mar 2015 11:43 AM
Last Updated : 09 Mar 2015 11:43 AM

அழியும் அரிய வகைப் பறவையினம் : வேட்டையாடப்படும் கவுதாரிகளை பாதுகாக்குமா அரசு?

தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளில் கவுதாரி பறவைகள் வேட்டையாடப் படுவது அதிகரித்து வருகிறது. ஒரு கவுதாரி சிக்கினால் அதன் கூவல் ஓசை கேட்டு வரும் மற்ற பறவைகளும் கூண்டோடு வேட்டையாடப்படுகின்றன.

அடர்ந்த காடுகளிலும், புதர் மண்டிய இடங்களிலும் கவுதாரி பறவைகள் காணப்படும். தவிட்டு நிறத்தில் உடலில் கருமை நிற கோடுகளுடன் கோழி போன்ற உருவத்தில் இருக்கும். இனப்பெருக்கக் காலத்திலும் பிற நேரங்களிலும் தனது துணையை அழைக்க கவுதாரிகள் கூவும். தற்போது இந்த கூவலே அவற்றுக்கு எமனாக மாறிவிட்டது.

வேட்டைக்காரர்கள் தங்களிடம் சிக்கும் கவுதாரியை இவ்வாறு கூவச் செய்கின்றனர். ஒரு கவுதாரி கூவியதும் எங்கோ இருக்கும் மற்ற கவுதாரிகள் அனைத்தும் சத்தம் வரும் திசை நோக்கி வருகின்றன.

அப்போது அவற்றை வலைகளை விரித்து வைத்து வேட்டைக்காரர்கள் பிடிக்கின்றனர். பின்னர் சந்தைக்கு கொண்டு சென்று கவுதாரி இறைச்சி சாப்பிட்டால் உடல் வலிமை பெறுவதோடு ஆண்மை அதிகரிக்கும் என்றும் நெஞ்சு சளி குறையும் என்றும் கூறி விற்கின்றனர். இதனால் ஒரு ஜோடிப்பறவை ரூ.300 முதல் 400 வரை விலைபோகிறது.

வனப்பகுதியில் திரியும் இந்த அரிய வகைப் பறவைகளை வேட்டை யாடு வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேட்டபோது வனத்துறை அலுவலர்கள் கூறிய தாவது:

பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏதாவது வதந்திகளை கிளப்பி அரிய வகை பறவைகளை பிடித்து வந்து சிலர் விற்பனை செய்கின்றனர். கவுதாரி பறவைகளை பிடிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், வாங்கி சாப்பிடுபவர்கள் அனைவர் மீதும் வனத்துறை நடவடிக்கை எடுக்கும். வளர்ப்பு பறவைகளை மட்டுமே அடித்து சாப்பிட அனுமதி உண்டு.

காடுகளில் வாழும் பறவை மற்றும் மிருகங்களை பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. கவுதாரி போன்ற வன உயிரினங்களை வேட்டையாடுவோரை மக்கள் அடையாளம் காட்டினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்புடன்தான், கவுதாரிகளை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x