Published : 31 Mar 2015 14:01 pm

Updated : 31 Mar 2015 14:01 pm

 

Published : 31 Mar 2015 02:01 PM
Last Updated : 31 Mar 2015 02:01 PM

நேர்முகத்தில் முணுமுணுக்கலாமா?

சாமி அறைக்குள் நுழைகிறார். உட்காரச் சொன்னதும் உட்கார்கிறார். கொஞ்சம் மிரட்சி தெரிகிறது.

தேர்வாளர் 1- உங்க பெயர் மிஸ்டர் சாமிதானே?

சாமி ஆமாம் சார்.

தேர்வாளர் 1- பொதுவாக, ராமசாமி, கந்தசாமின்னு ஏதாவது ஒரு வாலும் பெயரில் ஒட்டியிருக்குமே!

சாமி (முணுமுணுக்கிறார்) வால் என்பது பின்னால் இருப்பது.

தேர்வாளர் 2- என்ன சொன்னீங்க?

சாமி ஒண்ணுமில்லை சார். என் பெய ர் சாமி மட்டும்தான்.

தேர்வாளர் 2- உங்களைப் பற்றிய எந்த விமர்சனமும் நாங்க செய்யக்கூடாது இல்லையா? செய்தா அது சாமி குத்தம் ஆயிடும்.

(உரத்துச் சிரிக்கிறார். சாமி மிகவும் சங்கடமாகவும், பரிதாபமாகவும் சிரிக்கிறார்)

தேர்வாளர் 1- மிஸ்டர் சாமி, உங்க ஜாப் எக்ஸ்பெக்டேஷன்ஸ் என்ன?

சாமி இன்டர்வியூ முடிந்தால்தான் தெரியும் சார். இந்த ஜாபை நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றேன்.

(இரண்டு தேர்வாளர்களும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்கின்றனர்)

தேர்வாளர் 2- (திடீரென்று) - எங்களைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் நாலு வாக்கியங்களைச் சொல்லுங்க.

சாமி எங்கள் கிராமத்தின் பெயர் கடுகுப்பட்டி. அங்கே ஆரம்பப் பள்ளியில் படித்தேன். பிறகு உயர்நிலைப் பள்ளியைத் திருச்சியில் முடித்தேன். கல் லூரி படிப்புக்காகச் சென்னைக்கு வந்திருந்தேன்.

தேர்வாளர் 2- (இடைமறித்து) உங்களுக்கு லிசன் (listen) செய்யத் தெரியாதா?

சாமி நல்லா தெரியும் சார். பார்வைக் குறைவுக்காகக் கண்ணாடி போட்டிருக்கேனே தவிர, காது நல்லாவே கேக்கும்.

(நேர்முகம் தொடர்கிறது)

சாமி அளித்த பதில்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம்.

தன் பெயரைப் பற்றிய ஆராய்ச்சியில் தேர்வாளர்கள் இறங்குவது சாமிக்குச் சற்றுச் சங்கடம் தருவது இயல்புதான்.

என்றாலும் இது பற்றி சாமி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. வெளிப்படையாகவே ‘வால் என்பது பின்னால் இருப்பதுதான் சார்’ என்பதைக் கூறியிருக்கலாம். அது ஒரு இயல்பான நகைச்சுவைதான்.

‘சாமி குத்தம்’ என்பது போன்ற தேர்வாளர்களின் கமெண்ட் அவ்வளவு நாகரிகமானது அல்ல. இது போன்ற கருத்துகளைத் தேர்வாளர்கள் கூறும்போது அதை எதிர்த்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். சாமி செய்ததைப் போலச் சங்கடமாகவும், பரிதாபமாகவும் ரியாக்ட் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

முகத்தைக் கொஞ்சம் இறுக்கமாக்கிக் கொண்டு மவுனமாக இருந்தாலே போதும். அது ‘நீங்கள் கூறியதை நான் ஏற்கவில்லை. அதே சமயம் எதிர்த்துப் பேசி உங்களை எதிர்க்கவும் மாட்டேன்’ என்ற உங்களின் மனப்போக்கு அதில் விளங்கிவிடும்.

தேர்வாளர்களைப் புரிந்து கொள்வதில் சாமி போதிய கவனம் செலுத்தவில்லை என்றேபடுகிறது. ‘ஜாப் எக்ஸ்பெக்டேஷன்ஸ்’ என்று தேர்வாளர் குறிப்பிடுவது இந்த வேலையில் நீ எதையெல்லாம் எதிர்பார்க்கிறாய் (ஊதியம், வேலை பார்க்கும் நேரம், போக்குவரத்து வசதி போன்றவை இதில் அடங்கும். அல்லது என்ன மாதிரி வேலையில் நீங்கள் சிறப்பாகப் பொருந்துவீர்கள் என்கிற அர்த்தத்தை இதற்கு வைத்துக் கொள்ளலாம்) என்பதைத்தான். ஆனால் சாமி கொஞ்சம் பாமரத்தனமாக யோசித்திருக்கிறார்.

பொதுவாக “உங்களைப்பற்றிச் சொல்லுங்க’’ என்றுதான் நேர்முகத் தேர்வில் கேட்பார்கள். ஆனால் இங்கே தேர்வாளர் “எங்களைப் பற்றிச் சொல்லுங்க’’ என்கிறார். (ஒரு வேளை அவர் வாய் தவறியும் இப்படிக் கேட்டிருக்கலாம்). இதைப் புரிந்து கொள்ளாமல் சாமி பாட்டுக்குத் தன்னைப் பற்றிய விவரங்களை அடுக்குகிறார். இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதித் தேர்வாளர்களைப் பற்றிய தனது கருத்தாக நாலு நல்ல விஷயங்களை (அவை பொய்யாகவே இருந்தாலும்) கூறியிருக்கலாம். வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.

சாமி தாங்கள் கூறியதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதால்தான் ‘சொல்வதை லிசன் செய்ய மாட்டீர்களா? என்று தேர்வாளர் கேட்கிறார். அப்போதும் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ‘தனக்குக் கேட்கும் சக்தி உண்டு’ என்கிறார் சாமி.

லிசனிங் (listening) என்பது தகவல் பரிமாற்றத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி. பேசுபவர் அல்லது கேள்வி கேட்பவர் தனக்கு த் தெரிந்ததை வெளிப்படுத்தி விட்டுப் போனால் போதாது. அவர் எந்தக் கோணத்தில் ஒன்றை அறிந்து வைத்திருக்கிறாரோ, அதே கோணத் தை எதிராளியும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் (அவர் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம்).

நாம் எதிராளியின் பேச்சை மனதில் வாங்கிக் கொள்கிறோம் என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்ய முடியும். எதிராளி பேசும்போது உரிய இடங்களில் தலையாட்டலாம். தான் பேசியது தொடர்பாக எதிராளி ஏதாவது கேள்வி கேட்டால், உடனடியாகப் பதில் கூறலாம்.

கவனிப்புத் திறன் இருந்தால் அதுவே நமது வாழ்க்கையில் பல பிரச்சினைகளை வராமல் தடுக்கும். நேர்முகத்தில் தாறுமாறாக கேள்வி கேட்பார்கள் என்று எதிர்பார்த்துப் போக வேண்டும். அத்தகைய நேரங்களில் முணுமுணுப்பதை தவிர்க்கலாம்.

நேர்முகம்கவனம்வேலைஆலோசனை

You May Like

More From This Category

More From this Author