Published : 26 Mar 2015 09:34 AM
Last Updated : 26 Mar 2015 09:34 AM

சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரி வைகுண்டராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவராக இருந்தவர் சுப்பையா. தற்போது மேற்குவங்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.

இவர் துறைமுக கழகத் தலைவ ராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பையா, அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சுப்பையா சொத்து சேர்ப்பதற்கு உதவி செய்ததாக விவி மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரையும் வழக்கில் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சிபிஐ பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மீதான வழக்கு, தற்போது முதல் தகவல் அறிக்கை நிலையில்தான் உள்ளது. இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சூழலில் வழக்கை ரத்து செய்யும்படி கோர முடியாது என சிபிஐ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு கூறுவதை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று அளித்த தீர்ப்பில், மனுதாரர்கள் மீதான வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையில்தான் உள்ளது. மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கும்போது கூறப்பட்ட காரணங்கள், வழக்கை ரத்து செய்வதற்கு பொருந்தாது. இந்த வழக்கை ரத்து செய்ய கூறும் காரணத்தை ஏற்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் வசமுள்ள இவ்வழக்கு தொடர்பான ஆவணங் களை சிபிஐயிடம் வழங்கலாம். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், மனுதாரர் தரப்பு ஆவணங்களை சிபிஐ பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x