Published : 27 Mar 2015 15:01 pm

Updated : 29 Mar 2015 12:07 pm

 

Published : 27 Mar 2015 03:01 PM
Last Updated : 29 Mar 2015 12:07 PM

66ஏ-க்கு ஒரு டிஸ்லைக்

66

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஷாகின் தாதா என்ற இளம்பெண் ஒரு கருத்தை முகநூலில் இட்டார். அதற்கு ரினு சீனிவாசன் என்னும் இளம்பெண் லைக் இட்டார். அதற்காகத் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66-ஏ-ன் கீழ் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரே இறந்தபோது மும்பை முழுவதும் கடையடைப்பு நடந்ததைக் கண்டித்து மும்பையைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் தங்கள் கருத்தை முகநூலில் பதிவுசெய்ததற்காக நடந்த இந்தக் கைது ஸ்ரேயா என்ற இளம்பெண்ணை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. தனது வழக்கறிஞர் அம்மாவான மணாலி சிங்கலிடம் அந்தக் கைது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தார் ஸ்ரேயா.

ஒரு கட்டத்தில் அம்மாவின் வழிகாட்டலோடு, ஸ்ரேயா 66 ஏ சட்டப் பிரிவுக்கு எதிராகப் பொது நல வழக்குத் தொடுத்தார். இவரது தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். உச்ச நீதிமன்றம் 66ஏ பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி அந்தப் பிரிவை ரத்து செய்து இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது.

“இரண்டே மாதங்களில் நான்கு பேர் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. இதில் புதுச்சேரியில் ஒரு அரசியல் தலைவருக்கு எதிராகப் பதிவை இட்ட வர்த்தகரும் ஒருவர். இதேபோன்ற சூழ்நிலை எனக்கும் வரலாம். எனது நண்பர்களுக்கும் வரலாம். யாருக்கும் வரலாம். அதனால்தான் என் அம்மாவின் ஊக்குவிப்புடன் அந்தப் பொதுநல வழக்கைத் தொடுத்தேன்” என்கிறார் ஸ்ரேயா.

இணைய ஊடகத்தின் மூலம் உலகச் சமூகத்தை இணைக்கும் சாத்தியம் உள்ளதாலும், பல தரப்பு மக்களின் கருத்துகள் புழங்கும் இடம் என்பதாலும் அரசுகள் தொடர்ந்து கருத்து வெளிப்பாட்டை எதிர்க்கின்றன என்கிறார் ஸ்ரேயா.

யார் நிர்ணயிப்பது?

இணையம்தான் இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு, கருத்து வெளிப்பாட்டுக்கான வெளி, பண்பாட்டுப் பரிவர்த்தனைகளின் ஊடகமாக இது உள்ளது. அந்த இணையத்தில் ஒரு செய்தியையோ, கருத்தையோ வெளியிட்டால் சிறை என்ற சூழல் வருமானால் அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமைக்கே எதிரானது என்கிறார் இளம் ஊடகவியாலாளர் அருண் பகத்.

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனால் பெரிய சமூக மாற்றம் எல்லாம் வந்துவிடும் என்று நான் நம்பவில்லை. திண்ணைப் பேச்சுகளின் தொடர்ச்சியாக இன்றைய சமூக வலைத்தளங்கள் உள்ளன. ஒத்த கருத்துள்ள வர்களும், எதிர்க் கருத்துள்ள வர்களும் விவாதிக்கும் இடமாக அவை இருக்கின்றன. யார் கருத்தும் யாரையும் புண்படுத்தலாம், ஒருவர் எழுதும் எழுத்தை இன்னொருவர் வரம்பு மீறியது எனலாம். வரம்பு மீறியது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை யார் நிர்ணயிப்பது? யாருக்கு அந்த நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுப்பது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

வரைமுறைகளும் தேவைதானே!

இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் யாரையும் யாரும் புண்படுத்தலாம், என்றிருக்கும் சூழ்நிலையில் போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்யாத வகையில், கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காத நிலையில் சில வரைமுறைகளோடு சட்டங்கள் அவசியமானது என்கிறார் சமூக வலைதளங்களில் அதிகமாகச் செயல்பட்டுவரும் முத்துராமன்.

“மத அடிப்படைவாதிகளும், சாதிய அடிப்படைவாதிகளும் கருத்துரிமை என்ற பெயரில் விஷமத்தனமாகக் கருத்துகளை இட்டுக் கலவரங்களைத் தூண்டும் நிலைகூட ஏற்படலாம். தனிநபர்களே இன்னொரு நபரைத் திட்டி ஆயிரக்கணக்கான பேருக்கு அதைப் பகிர்ந்துவிடலாம். இதனால் தனிநபர்கள் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. அதனால் சில வரைமுறைகளுடன் கூடிய சட்டம் தேவை” என்கிறார்.

“ஒரு சட்டம் என்று இருக்கும் வரைதான் எதையும் யோசித்துச் செய்யும் நிலை இருக்கும். சுதந்திரம் என்பது இன்னொருவரின் மூக்கைத் தொடும் வரைதான். பத்துப் பேரோ, ஒரு குழுவோ தவறான கருத்துகளைச் சொல்ல முடியும். இந்தச் சட்டம் இருந்தபோதே எல்லாரையும் எல்லாரும் அவதூறு செய்யும் நிலைதான் இணையதளங்களில் இருந்தது. சட்டத்தை ரத்துசெய்தால் நிலைமை இன்னும் மோசமாகவே ஆகும். அதனால் ஒரு சட்டம் அவசியம் என்றே நினைக்கிறேன்” என்கிறார் ‘விழித்திரு’ இயக்கத்தின் நிறுவனரான சபரி நாதன்.

சுதந்திரத்தில் குறுக்கிடக் கூடாது

இயற்கைப் பேரிடர்கள் போன்ற சூழ்நிலையிலையில்தான் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர, கருத்துகள் வெளிப்படுத்துவதை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பது சுதந்திரத்தில் குறுக்கிடுவது என்கிறார் இளம் கவிதாயினி மனுஷி.

“இதுபோன்ற சட்டங்களால் எதைப் பற்றியும் யாரும் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது என்ற நிலை ஏற்படும். அது பேச்சுக்கும் எழுத்துக்கும் தொடரும். எந்தச் செயலையும் வெளிப்பாட்டையும் அது நடந்த பிறகுதான் மதிப்பிட வேண்டுமே தவிர முன் அனுமானத்தில் சட்டங்களின் மூலம் தடைசெய்வது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்றார் மனுஷி.

“என்னுடைய மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லவும், அதை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்குமான இடம்தான் பேஸ்புக், ட்விட்டர். அந்த இடத்தில் போய் கருத்து சொல்பவர்களைத் தடை செய்வது என்பது தனிமனித சுதந்திரத்தில் குறுக்கிடுவதுதான். அதற்குக் கொடுக்கப்படும் சிறைத் தண்டனையும் அதிகப்படியானது” என்கிறார் ஆர்.ஜேவாகப் பணிபுரியும் லெனின்ஷா.

இளைஞர்களும் இளம்பெண்களும் சமூக உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்; செல்போன்கள், டேப்லட்கள், கேம்ஸ், கடலை என்றுதான் இருப்பார்கள் என்ற பொது எண்ணத்தை 24 வயதான ஸ்ரேயா உடைத்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டுச் சட்டம் படிக்கும் மாணவியான இவர்தான் இன்றைய இளைஞர்களின் ஊடகமான இணையத்தில் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டியுள்ளார்.

‘ஸ்ரேயா சிங்கல் எதிர் இந்திய அரசு’ என்ற இந்த வழக்குதான் வருங்கால சட்ட மாணவர்களுக்குப் பாடமாக வரப்போகிறது. இதே வழக்கைப் பற்றி ஸ்ரேயாவே அடுத்தடுத்த வருடங்களில் தனது தேர்வுக் கேள்விக்கான பதிலையும் எழுதக்கூடும்.

இளமையின் சக்தி66ஏவிவாதம்களம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author