Published : 10 Mar 2015 11:29 am

Updated : 10 Mar 2015 11:29 am

 

Published : 10 Mar 2015 11:29 AM
Last Updated : 10 Mar 2015 11:29 AM

எல்லை தாண்டாமல் எந்த கதாபாத்திரமும் ஏற்கத் தயார்: நந்திதா சிறப்புப் பேட்டி

‘‘மாடர்ன் கேரக்டர் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்போது நான் தேர்வு செய்து வரும் கதாபாத்திரங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் அமைந்துவிடாது. அதேபோல எல்லா நாயகிகளுக்கும் எளிதில் பொருந்தவும் செய்யாது.

‘இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு நந்திதா சரியா இருப்பா’ என்று இயக்குநர் உள்ளிட்ட கதைக் குழுவினர் நினைத்து கதையை என்னிடம் விளக்குவதே இன்றைய சூழலில் பெரிய விஷயம். அதுவே மகிழ்ச்சி இல்லையா’’ - கன்னக் குழி சுழித்து புன்னகையை வீசுகிறார் நந்திதா.

‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘உப்புக்கருவாடு’ இதெல்லாம் நந்திதாவின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல். தொடர்ந்து அவரிடம் பேசியதில் இருந்து..

அடுத்து ரிலீஸாகவுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?

என் கேரியரில் கஷ்டப்பட்டு செய்த படம் இது. பிடித்து நடித்த படமென்றும் சொல்லலாம். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வர்றேன். இந்த படத்தில் விஷ்ணு, ஐஸ்வர்யா மற்றொரு ஜோடி. அவங்க ரெண்டு பேரையும் ஒரு இடத்தில்கூட சந்திக்க மாட்டேன்.

ஹீரோக்கள் மட்டும்தான் சந்தித்துக்கொள்வார்கள். படத்தில் என் பகுதி எல்லாம் கொடைக்கானலில் நடக்கிறது. என் கதாபாத்திரம் பெயர் வெண்மணி. மலைவாழ் மக்களின் மொழி, நிறம் என்று என்னை நானே நம்பமுடியாத அளவுக்கு உருவத்தை வித்தியாசமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

தாவணி-பாவாடை, கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் நந்திதா செட் ஆவாரா?

ஒரு பேட்டி வருகிறது என்றால் மாடர்ன், சாரீ, ஆஃப் சாரீ என்று எல்லா விதமான உடைகள் அணிந்துதான் புகைப்படம் அனுப்பிவைக்கிறேன். ஆனால், ‘இவளுக்கு மாடர்ன் செட் ஆகாது’ என்று அவர்களாக நினைத்துக்கொண்டு, அந்த புகைப்படங்களை ஒதுக்கிவிடுகிறார்கள்.

எனக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறேன். அதை தாண்டாத வகையில் எந்தவிதமான கதாபாத்திரத்தை யும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட, யாரும் எதிர்பார்க்காத ரோல்களில் இனி வரும் படங்களில் என்னைப் பார்க்கலாம்.

ஆனால், நந்திதாவை திரையில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறதே?

அறிமுகமான முதல் ஆண்டில் ‘அட்டகத்தி’ நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது. அடுத்த ஆண்டான 2013-ல் ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ நல்ல அடையாளம் கொடுத்தன. கடந்த ஆண்டு ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட 3 படங்கள். ‘

முண்டாசுப்பட்டி’ நல்ல ரிசல்ட். இந்த ஆண்டில் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும் படங்கள் ‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘உப்புக்கருவாடு’ என்று, அறிமுகமான நாள் முதல் இன்று வரை பிஸியாக இருக்கிறேன். ஒருவேளை, மீடியா முன்பு அதிகம் முகம் காட்டாமல் இருப்பதால் அப்படித் தெரியலாம். மற்றபடி, இடைவெளி விழுந்ததாக எனக்குத் தெரியவில்லை.

அறிமுகமாகும் முதல் படம் வெற்றி அடைந்தால் அதைத் தொடர்ந்து விறுவிறுவென வளர்ந்துவரும் நாயகிகள் அடுத்து சில ஆண்டுகளிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். கதாபாத்திரங்களை அவர்கள் சரியாக தேர்வு செய்வதில்லையா?

எனக்கு அப்படி தோன்றவில்லை. கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், நிறைய படங்கள் நாயகிக்கு சரியான படமாக அமைவதாகவே நினைக்கிறேன். ‘விடியும்முன்’, ‘மெரினா’ இப்படி நிறைய படங்களில் நாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கவே செய்திருக்கிறது.

வித்யாபாலன் நடித்த ‘கஹானி’ படத்தின் கதையெல்லாம் அந்த வரிசையில் மிஸ் பண்ணவே முடியாத படங்களாச்சே.

நந்திதாவுக்கு போட்டி யார்?

எனக்கு போட்டியாளர் எல்லாம் இல்லை. முதல் இடம், இரண்டாம் இடம் பிடிக்கணும் என்றெல்லாம் இதுவரை மூளைக்குள் கொண்டு சென்றதே இல்லை. ராதாமோகன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘உப்புக்கருவாடு’ படம் நாயகன்-நாயகி படம் மாதிரி நகராது. ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். என் கதா பாத்திரம் ரொம்பவே அருமையாக நகரும்.

இதுமாதிரி கதைக்கு ராதாமோகன் என்னை தேர்வு செய்ததே, நாம சரியான திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ‘அஞ்சல’ படத்தில் நகரத்துப் பெண் வேடம். விளம்பரப் படங்களில்தான் இதுபோல நடித்திருக்கிறேன். காமெடி, கமர்ஷியல் கலவை இருக்கும். இதுமாதிரி தனித்துவ கதாபாத்திரங்களை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி போட்டி என்ற வார்த்தையை என் மனம் எப்பவுமே எடுத்துக்கொள்ளாது.

சினிமாவுக்கு அப்பாலும் பணியாற்றும் ஆர்வம் நடிகைகளுக்கு அதிகரித்துவருகிறதே. நீங்கள் எப்படி?

நம் மூளை ரொம்ப சின்னதுதானே. ஒரு நாளில் அதிகபட்சம் 10 மணி நேரம் கடின உழைப்பைக் கொடுக்கலாம். இப்போது நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

சின்னச் சின்ன ரிலாக்ஸ் போல ஃபேஷன் வீக், விளம்பர படங்கள் செய்கிறேன். மற்ற விஷயங்களில் இப்போதைக்கு கவனம் செலுத்த முடியாது. இப்போது செய்வதை சிறப்பாக, மனநிறை வாக செய்தால் போதும் என்று கருதுகிறேன்.

நேர்காணல்நந்திதாதமிழ் சினிமாபேட்டிகதாநாயகி

You May Like

More From This Category

More From this Author