Last Updated : 06 Mar, 2015 11:59 AM

 

Published : 06 Mar 2015 11:59 AM
Last Updated : 06 Mar 2015 11:59 AM

நினைவை விட்டு அகலாத நிலைக்காட்சி

பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏழை பணக்கார ஏற்றதாழ்வு, கூட்டுக் குடும்பச் சூழல் சிதைவு, சாலை விதிகளைக் கடைபிடிக்காமை, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்றவை சமூகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.

இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான விழிப்புணர்வைச் சமூகத்திலும், மாணவர்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்கத்தில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமைமிக்க பாளையங்கோட்டையில் தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் நிலைக்காட்சி (TABLEAU) என்ற வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றது.

சமூக அவலங்களான பாலியல் வல்லுறவு, வரதட்சிணைக் கொடுமை, போதைப்பொருள், மது ஒழிப்பு, குழந்தைத் திருமணம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சீர்கேடு, தொட்டில் குழந்தை, ஈவ்டீசிங், பெண்ணடிமைத்தனம், பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல், சாலை விதிகளைக் கடைபிடிக்காததால் நிகழும் விபத்துகள் உள்ளிட்ட பலவற்றைத் தங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தினர். இந்நிகழ்வுக்காக இக் கல்லூரி மாணவிகள் தாமரை, டேஃபடில்ஸ், டூலிப், ரோஜா, மல்லிகை என்று 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் 20 நிலைக்காட்சிகளைக் கல்லூரி வளாகத்தில் நடித்துக் காட்டினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிலைக்காட்சியைப் பல்வேறு பள்ளி மாணவர், மாணவிகள் கண்டு வியந்தனர். காரணம் ஒவ்வொரு சம்பவத்தையும் நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை அவை நமக்கு ஏற்படுத்தியிருந்தன.

புத்தகச் சுமையைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்பச் சுமையைச் சுமக்கும் சிறுமியின் நிலை, கணவனின் சந்தேகத் தீயால் பெண் தீக்குளிப்பது, குடிகாரக் கணவரால் சிதறடிக்கப்படும் பெண்கள், தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குறித்தெல்லாம் இவர்கள் சித்தரித்திருந்தனர்.

பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு விரைவாக நீதி வழங்கும் விரைவு நீதிமன்றங்களை நாடு முழுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலைக்காட்சி மனதில் நிலைபெற்றது. சாலை விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை அறிந்துகொண்டு

அவற்றை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்த்தும் வகையிலான நிலைக்காட்சியில் தனிக்குடும்ப முறைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினர். ஏழை- பணக்கார ஏற்றத்தாழ்வைச் சித்தரிக்கும் காட்சிகளில் மாணவிகளின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. எச்சில் இலை சோற்றுக்குச் சண்டையிடும் மனிதர்களைக் கண்முன் நிறுத்திய காட்சி அனைவரையும் ஈர்த்தது.

ஒரு கதையையோ வரலாற்று நிகழ்வையோ ஒரு இடத்தில் அசைவற்ற நிலையில் பல நிமிடங்களுக்கோ அல்லது மணி நேரத்துக்கோ நடிப்பதுதான் நிலைக்காட்சி என்று இக்கல்லூரிப் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலைக்காட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ஆர். கிளாடிஸ் ஸ்டெல்லா பாய், கடந்த 25 ஆண்டுகளாக இக்கல்லூரியில் இது போன்ற நிலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

நாடகக் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் சொல்ல வரும் விஷயங்கள் உடனே மறக்கப்பட்டு விடலாம். ஆனால் நிலைக்காட்சி என்ற வித்தியாசமான நிகழ்வு, சொல்லவரும் விஷயத்தைத் தொடர்ந்து மனதில் பதியவைக்கும் அளவுக்கு நீடிக்கும். இதுபோன்ற நிலைக் காட்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு வீதிகளிலும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x