Last Updated : 27 Mar, 2015 12:34 PM

 

Published : 27 Mar 2015 12:34 PM
Last Updated : 27 Mar 2015 12:34 PM

ஆந்திரா மீல்ஸ்: ஒரு புதிய காற்று

நான் யார்? எனக்கு என்ன வேண்டும்? இந்தக் கேள்வியோடு கிளம்பும் நாயகர்களைச் சினிமாவில் ஒவ்வொரு தலை முறையிலும் பார்த்திருக்கிறோம். தமிழில் வெளிவந்த ’அன்பே சிவம்’ படத்தை இந்த வகைக் கதைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நா. அஸ்வின் இயக்கியிருக்கும் தெலுங்குப் படமான ‘எவடே சுப்ரமண்யம்’ வழக்கமான தெலுங்கு சினிமாவுக்கு மாறான ஒரு பாதையைக் காட்டி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இமாலயத்தின் மேலிருக்கும் தூத் காசிக்குச் செல்லும் மூன்று நண்பர்கள். அவர்கள் சந்திக்கும் புதிரும் அற்புதமும் கலந்த அனுபவங்கள்தான் கதை. இந்தப் பயணம் வழியாக அவர்கள் தங்களை அறிந்துகொள்கின்றனர்.

ஐஐஎம்-ல் நிர்வாகம் முடித்து, பெரிய நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக இருக்கும் சுப்ரமண்யன்தான் படத்தின் நாயகன். கம்பெனி முதலாளியின் மகளுடன் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட நிலையில் ரிஷி என்ற தனது பள்ளிப் பருவ நண்பனைச் சந்திக்கிறான்.

ஆனந்தி என்ற தன் தோழியைச் சுப்ரமணியனுக்கு அறிமுகப்படுத்துகிறான் ரிஷி. அவர்கள் மூவரும் இமாலயத்தில் உள்ள தூத் காசிக்குச் செல்லத் திட்டமிடுகின்றனர். ஆனால் அந்தப் பயணத்தை இரண்டு பேர் மட்டும் செய்யவேண்டிய துயரமான திருப்பம் நிகழ்கிறது. அந்தப் பயணமும் அது நாயகனுக்குத் தரும் தாக்கமும்தான் இந்தப் படம்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர்கள்தான் முதன்மை காரணம். ஒரு சாமர்த்தியமான நிர்வாகியாக இறுக்கமான முகத்துடன் அறிமுகமாகும் சுப்ரமண்யம், இயற்கையின் பிரமாண்ட அழகின் முன்னால் மயங்கி, தன் கர்வம் ஒடுங்கிக் குழந்தையாக மாறுவதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் நானி.

இந்தப் படத்தின் ஆச்சரியகரமான கதாபாத்திரம் நாயகனின் நண்பனாக வரும் ரிஷிதான். எதைப் பற்றியும் கவலையில்லாமல் வாழ்க்கையை அதன்போக்கில் அனுபவிக்கும் நண்பன் ரிஷியாக வாழும் விஜய் தேவரகொண்டா பிரமாதமான நட்சத்திரத் தேர்வு. நாயகி மாளவிகா நாயரும், ஆனந்தி கதாபாத்திரத்துக்கு அற்புதமாகப் பொருந்திப் போகிறார்.

இமயமலையின் அழகை மட்டுமே பிரதானப்படுத்தாமல் யதார்த்தமாகப் பதிவுசெய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராகேஷ் எருகுல்லா. படத்தின் இடைவேளைக்குப் பிறகு நேஷனல் ஜியாகிரபியைப் போல நகர்கிறது. இளையராஜாவின் புகழ்பெற்ற பாடலான ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலைத் தெலுங்காக்கிப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பாடல் கதையின் ஆன்மாவை வருடுகிறது.

பொழுதுபோக்கைப் பிரதானப்படுத்தும் தெலுங்கு சினிமா உலகில் சமீபத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு என்று எவடே சுப்ரமண்யத்தை சுலபமாகச் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x