Published : 23 Feb 2015 03:04 PM
Last Updated : 23 Feb 2015 03:04 PM

பேரவையில் தேமுதிக கூண்டோடு சஸ்பெண்ட் எதிரொலி: திமுக, காங். வெளிநடப்பு

தேமுதிக உறுப்பினர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் எதிரொலியாக, சட்டப்பேரவையில் இருந்து திமுகவும் காங்கிரஸும் வெளிநடப்பு செய்தது.

தேமுதிக உறுப்பினர்கள் பேரவையில் பெரும் குழப்பம் விளைவித்தனர். என்னையும், அவைக் காவலர்களையும் தாக்க முற்பட்டனர். அதனால், நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் என்று பேரவைத் தலைவர் தனபால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.

ஆனால், தேமுதிக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யக் கோரி, பேச அனுமதிக்குமாறு திமுக சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் இன்று கூடிய சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு அவைத்தலைவர் தனபால் அனுமதி மறுத்ததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவைக்கு வெளியே ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ''முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனவே, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரிலே பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக சார்பில் கோரிக்கையை முன்வைக்க அவையிலே முயற்சித்தோம்.

இந்தக் கோரிக்கையை வைப்பதற்குக் கூட சபாநாயகர் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் ஆளும் கட்சி சட்டசபை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜயதாரிணி குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x