Last Updated : 19 Feb, 2015 03:16 PM

 

Published : 19 Feb 2015 03:16 PM
Last Updated : 19 Feb 2015 03:16 PM

மின்ஆளுமைத் திட்டத்தில் சான்றிதழுக்கு அலைக்கழிக்கப்படும் கோவை மக்கள்

கோவையில் வருவாய்த் துறை மூலமாக விநியோகிக்கப்படும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றின் அரசு பணி நடைமுறைகள் அனைத்தும் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் (இ-கவர்னன்ஸ்) கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி, சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமானால் ரேஷன் கார்டு, பெற்றோரின் அசல் சாதிச் சான்றிதழுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி அறை பிரிவில் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.

அதனை ஆன்-லைனிலேயே ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சான்றிதழ்களை மெயில் மூலமாக அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். இதுதான் புதிய நடைமுறை. ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்டுள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதைத் தவிர, வேறு எங்கும் பதிவு செய்ய முடியாது.

கோவை மாநகரைப் பொறுத்தவரை பெரும்பாலானோர், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துதான் பதிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

மையத்தில் தாமதம்

சில இடங்களில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் மட்டும்தான் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் உள்ள பதிவேற்ற மையங்களில் கணினி இயக்கம் தாமதம், பணியாளர் விடுப்பு போன்ற காரணங்களால் பதிவேற்றம் சீராக இல்லை. இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் திரள்கின்றனர். ஆனால், அங்கு ஒரு கணினி மூலமாக மட்டுமே பதிவேற்றம் நடைபெறுகிறது. ஒருவருக்கு பதிவேற்றம் செய்வதற்கு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாகிறது. இதனால், ஒரு நாளைக்கு சுமார் 15 பேருக்கே பதிவேற்றம் செய்ய முடிகிறது. ஆனால், பதிவேற்றத்துக்காக வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 50-ஐ தாண்டுகிறது. இது போன்ற சூழலால் மனஉளைச்சலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காத்துக் கிடக்கும் மக்கள்

இது குறித்து, சான்றிதழ் பதிவேற்றத்துக்காக நேற்று காலை முதல் காத்திருந்த ஒரு முதியவர் கூறுகையில், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று பெறுவதற்காக காத்திருக்கிறேன். நேற்று முன்தினமே பதிவேற்றம் செய்வதற்கான டோக்கன் (கையினால் எழுதியது) கொடுத்தார்கள். அதில் எந்த முத்திரையும் இல்லை.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்கிறார்கள். அன்றைய தினம் பதிவு செய்ய முடியாததால், நேற்று காலை 9 மணிக்கு வந்துவிட்டேன். 11-வது டோக்கன் கொடுத்தார்கள். 2.30 மணிவரை 6 டோக்கன் வரைதான் பதிவேற்றம் நடந்துள்ளது. தற்போது, முறைப்படுத்தப்படாத இந்த நடைமுறையால் 3 நாட்களாக பதிவேற்றத்துக்காக வந்து உட்கார்ந்து இருப்பவர்களை பார்க்க முடிகிறது என்றார்.

அறிவிப்பு இல்லை

கோவையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதற்கு இந்த முறை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. வழக்கம் போல, வெளி நபர்களிடம் காசு கொடுத்து விண்ணப்பங்களை பொதுமக்கள் வாங்கி வந்து பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இதனால், தேவைற்ற கால விரயம் ஏற்படுவதாக விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்த திட்டத்தின் பொறுப்பு அதிகாரியும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நர்மதாவிடம் கேட்டபோது, ஆட்சியர் அலுவலகத்தை தவிர்த்து மாநகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யலாம். பதிவு செய்த 15 நாட்களுக்குள் மெயில் வழியாக விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வந்துவிடும். சில நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். தாமதம் ஏற்படாமல் பார்த்து வருகிறோம் என்றார்.

மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x