Published : 05 Feb 2015 12:35 pm

Updated : 05 Feb 2015 12:35 pm

 

Published : 05 Feb 2015 12:35 PM
Last Updated : 05 Feb 2015 12:35 PM

வீடில்லா புத்தகங்கள் 20: கற்றவை கற்றபின்...!

20

உலகெங்கும் பொது நூலகங்கள் பண்பாட்டு மையங்களைப் போலச் செயல்படுகின்றன. அங்கே புத்தக வெளியீடுகள், கதை சொல்லும் முகாம். விமர்சனக் கூட்டம், ஆவணப்படங்கள் திரையிடுவது, விருது பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடுதல், புகைப்படக் கண்காட்சி எனப் பல்வேறுவகையான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்தப் பொது நூலகத்திலும் இப்படியான கலை இலக்கிய நடவடிக்கைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.

சில நூலகங்களில் ‘வாசகர் வட்டம்’ சார்பில் புத்தக அறிமுகக் கூட்டம், அல்லது வார விழா அரிதாக நடைபெறுகின்றன. அதைத் தவிர நூலகம் என்பது புத்தகம் படிக்கவும், இரவல் பெறவும் செய்யும் இடம் மட்டுமே.

‘அண்ணா நூலகம்’ போன்ற மிகப்பெரிய நூலகமும் இப்படித்தான் செயல்படுகிறது. குறிப்பாக, அண்ணா நூலகத்தில் குளிர்ச் சாதன வசதி செய்யப்பட்ட, மிக அழகான அரங்கம் ஒன்றிருக்கிறது. அதில், இதுவரை புத்தக வெளியீட்டு விழாவோ, இலக்கியக் கூட்டங்களோ நடந்ததே இல்லை.

பல மாதங்களாக அது மூடப்பட்டே இருக்கிறது. முன்பு தனியார்கள் நடத் தும் நிகழ்ச்சிக்கு வாடகைக்குக் கொடுத்து வந்தார்கள். அதுவும் தற்போது அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்ற தடை உள்ளது என்கிறார்கள்.

‘தேவநேயப் பாவாணர்’ நூலக மாடியில் இயங்கிய அரங்கில் பல ஆண்டுகளாகப் புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் மூடப்பட்டுவிட்டது.

சென்னை போன்ற பெருநகரத்தில் கூடப் புத்தகம் படிப்பவர்கள் ஒன்று கூடுவதற்கு என இடமே இல்லை. பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்குகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தருகிறார்கள். புத்தக வெளியீடு கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

சிங்கப்பூரில் உள்ள ‘தேசிய நூலகம்’ ஆசிய அளவில் மிகப் பெரியது. தமிழ்நாட் டில் கிடைக்காத தமிழ்ப் புத்தகங் கள் கூட அங்கே வாசிக்கக் கிடைக் கின்றன. புத்தக வாசிப்பை மேம்படுத்து வதிலும், எழுத்தையும் எழுத்தாளர்களை யும் கவுரவித்துக் கொண்டாடுவதிலும் சிங்கப்பூர் ‘தேசிய நூலகம்’ முன்னோடி யாகச் செயல்படுகிறது.

ஆண்டு முழுவதும் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சிகள், முகாம்கள், வெளியீட்டு அரங்குகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எழுத் தாளர்களின் கையெழுத்துப் பிரதிகள், அவர்களின் குரல் பதிவு, ஆவணப்படம் எனச் சகலமும் அங்கே பாதுகாக்கப் படுகின்றன.

தமிழ்நாட்டிலோ இன்னமும் நூலகங் கள் இணையவழி ஒன்றிணைக்கப்பட வில்லை. பொது நூலகங்களில் வாசகர் பயன்படுத்தும்படியான இணைய வசதி யும் கிடையாது. எங்கிருந்தும் ஆன்லைனில் புத்தகங்கள் தேடவோ, படிக்கவோ வசதியில்லை.

நூலகங்களை நவீனப்படுத்த போது மான நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஆள் பற்றாக்குறை, இடம் போதவில்லை, நிர்வாகச் சிக்கல்கள் எனப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள நூலகங் களுக்குக் கொல்கத்தாவில் உள்ள ‘ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை’ நிதியுதவி செய்கிறது. அதில்தான் கணிச மான ஆங்கில நூல்கள் வாங்கப்படுகின் றன. அத்தோடு ‘குழந்தைகள் நூலகம்’ அமைக்கவும் அவர்கள் நிதி வழங்கு கிறார்கள். அதைப் பயன்படுத்தி நிதி பெற்ற சில நூலகங்களில் குழந்தைகள் பிரிவு என்பது வெறும் பெயர் பலகையாக மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 4,042 பொது நூலகங்கள் இயங்குகின்றன. இரண்டு மாநில மைய நூலகங்கள், மாவட்டத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராமப்புற நூலகங்கள், 539 பகுதி நேர நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்கள் இதில் அடங்கும்.

நூலகங்களுக்குப் போய்ப் படிக்கிற பழக்கம் இளம் தலைமுறையிடம் வெகு வாகக் குறைந்துவிட்டிருக்கிறது. மத்திய, மாநிலப் பணிகளுக்கான போட்டித் தேர்வு களுக்காகப் படிப்பவர்களே அதிகம் நூலகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பொது நூலகத்தைப் பெண் கள் மிகக்குறைவாகவே பயன்படுத்து கின்றனர். மாவட்டந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனத் தனி நூலகம் அல்லது தனிப் பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும். அது போலவே மாற்றுத்திறனாளிகள் நூலகங்களைப் பயன்படுத்த சிறப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்

நூலகத்தைப் பண்பாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக நூலகம் சார்பாக வாரம் ஒருமுறை எழுத்தாளர் சந்திப்பு, நூல் அறிமுகக் கூட்டம், ஆவ ணப்படங்கள், குறும்படங்கள் திரை யிடல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு போன்றவற்றைச் செய்யலாம். மாணவர்களுக்கான சிறப்பு வாசிப்பு முகாம்கள், கதை, கவிதை பயிலரங்கு கள் எனப் பன்முகமான நடவடிக்கை களை மேற்கொள்ளலாம்.

இதற்குத் தேவையான நிதி உதவி களைத் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வகைக் கல்வி நிறுவனங்கள், புரவலர் வழியாகக் கோரலாம். இப்படியான பண் பாட்டு நிகழ்வுகள் நடைபெறாமல் போனால் நூலக இயக்கம் தேக்கம் அடைந்து முடங்கிவிடும் என்பதே உண்மை.

தமிழக நூலக இயக்கத் துக்கு முன்னோடியாக இருந்த வர் டாக்டர் எஸ்.ஆர். ரங்க நாதன். அவர் உருவாக்கிய ஐந்து விதிகளே நூலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. 1948-ல் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கொண்டுவந்த பொது நூலகச் சட்டம்தான் இந்தியாவில் இயற்றப்பட்ட முதல் பொது நூலகச் சட்டமாகும்.

நூலகம் குறித்து ஆதங்கப்படும் போதெல்லாம் நான் எடுத்துப் படிக்கும் புத்தகம் டாக்டர். நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய ‘நினைவு அலைகள்’ புத்தகம் தான்.

மூன்று தொகுதிகளாக வெளி வந்துள்ள இந்தத் தொகுதிகளைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கோடம்பாக்கம் சாலையோர புத்தகக் கடையில் வாங்கினேன், அற்புதமான வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் இது.

‘கல்வி வள்ளல்’ காமராஜர் அவர்களு டன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் தந்ததில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு 1951-ம் ஆண்டுப் பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தபட்டவைகளே இலவசக் கல்வி, மதியஉணவு, சீருடைத் திட்டங் களாகும். அவற்றைச் செயல்படுத்த வேண்டிய நிதி ஒதுக்கீடு, நிர்வாகச் சிக்கல் போன்றவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? எவ்வளவு சிக்கலான சவாலாக இருந்தது என்பதைச் சுந்தர வடிவேலு துல்லியமாக இந்தப்புத்தகத் தில் விவரிக்கிறார்.

கல்வித்துறையோடுச் சேர்த்து பொது நூலக இயக்குநராகவும் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு பதவி வகித்தார். அந்தக் காலத்தில் மாவட்ட அளவில் மட்டுமே நூலகங்கள் செயல்பட்டுவந்தன. கிராமப்புறத்தில் கல்வி வளர்ச்சி பெற நூலகம் அமைக்கப் பட வேண்டும் என்று முடிவு செய்த இவர், தமிழகம் முழு வதும் 400-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை ஏற்படுத் தினார்.

பொதுமக்கள் செலுத் தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாகப் பெறப்படுகிற திட்டம் இவரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

‘நினைவு அலைகள்’ நூலில் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு ஐ.ஐ.டி-க்காகக் கேட்டபோது காமராஜர் அனுமதிக்க மறுத்தது, கிராமப்புறங் களில் அரசுப் பள்ளி உருவாக எவ்வாறு போராடினார்கள்?

இலவச மதிய உணவு திட்டத்துக்கு எப்படி எல்லாம் எதிர்ப்பு உருவானது? காமராஜரின் நிர்வாகத் திறன் எப்படியானது எனப் பல்வேறு உண்மைகளை நேரடி சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார். நாட்டுடமையாக்கபட்ட இவரது நூல்கள் இணையத்திலும் தரவிறக்கம் செய்ய எளிதாகக் கிடைக்கின்றன.

கல்வி முற்றிலும் வணிக மயமாகி விட்ட இன்றையச் சூழலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருமுறையாவது இந்த மூன்று தொகுதிகளையும் வாசிக்க வேண் டும். அப்போதுதான் இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தையும் முன்னோடிகளின் அர்ப்பணிப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

writerramki@gmail.com

எஸ் ராமகிருஷ்ணன்தொடர்எஸ் ராபுத்தக வாசிப்புபுத்தக அறிமுகம்

You May Like

More From This Category

More From this Author