Last Updated : 17 Feb, 2015 11:18 AM

 

Published : 17 Feb 2015 11:18 AM
Last Updated : 17 Feb 2015 11:18 AM

தோனிக்கு தலைவர்கள் சில யோசனைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அதை மீண்டும் கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப்படி இருக்கும்? - ஒரு கற்பனை

ஜெயலலிதா:

வீரர்கள் ஒழுங்கா பந்தாடறாங்களோ இல்லையோ, அவங்களை நாம பந்தாடணும். அதிரடி பேட்ஸ்மேனை திடீர்னு பவுலிங்குக்கு அனுப்பணும். பவுலரை பந்து பொறுக்கிப் போடச்சொல்லிட்டு, அந்த வேலை செய்யுற பையனை அம்பயர் ஆக்கிடணும். ‘எப்போ, யாரைத் தூக்குவாங்களோ’ங்கிற கிலியில நல்லா ஆடுவாங்க. எதிர் டீம்ல நல்லா ஆடுற வீரருக்கு குவாலிஸ், இன்னோவா தரப்படும்னு ஆசை காட்டி கூப்பிட்டு வச்சுக்கலாம். அப்புறம் கப்பு நமக்குத்தான்.

கருணாநிதி:

தம்பீ! எனக்கென்னவோ இந்த ஆஸ்திரேலியாவை ஜெயிச்சு கப்பு வாங்க முடியும்னு தோணலை. அதனால ஆஸ்திரேலியாவுக்கு எதிரா உங்க தலைமையில பொது அணி உருவாகணும்னு குரல் கொடுங்க. அப்படி யாரும் சேர வரலைன்னா, ‘அம்பயர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்திரேலியா ஜெயிச்சுடுச்சு’ன்னு புகாரைக் கிளப்பிவிடுங்க. நம்ம மக்கள் நிச்சயம் நம்புவாங்க. ஆனா ஒண்ணு.. எது நடந்தாலும் கேப்டன் பதவியை மட்டும் விட்டுடவே கூடாது.

விஜயகாந்த்:

ஜெயிக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. சமீபத்துல டெல்லியிலகூட காஜல் அகர்வால்.. வந்து.. சமீபத்துல.. அதிகபட்ச.. ஓட்டு.. அதிகபட்ச ரிஸ்க் எடுத்து.. ஓட்டுவீட்டுல ஏறி ஒரு ஷூட்டிங்குல நடிச்சாங்க. பிளேயர்ஸ் எல்லாரையும் வந்து வரிசையா நிக்கச் சொல்லுங்க. நான் ஒவ்வொருத்தர் தலையிலயும் தட்டறேன். என்கிட்ட தட்டு வாங்கின ராசி உங்களுக்கு கப்பு கிடைக்கும். அப்புறம், நாக்கை கொஞ்சம்போல உள்ளார மடிச்சுக்கிட்டு கண்ணை சிவக்க வச்சு அம்பயரைப் பாருங்க.. பயந்து போயி அவுட் கொடுத்திடுவாரு.

மோடி:

‘‘ஹமாரா தேஷ் கோ இந்துஸ்தான் சப்பக் பச்சக் லேத்தா ஹூம்..’’ அப்படீன்னு கம்பீரமா ஒரு சவுண்ட் விட்டுக்கிட்டே பந்தை வீசுங்க. என்ன சொல்றீங்கன்னு புரியாம ஜெர்க் ஆகியே பேட்ஸ்மேன் அவுட் ஆகிடுவாரு. முதல்ல நீலநிற டிரஸ்ஸை மாத்துங்க. நம்ம பார்ட்டி நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தா எல்லாருக்கும் காவி கலர் யூனிபார்ம் ரெடியாகிடும். டிரெஸ்ல ஒவ்வொரு நூல்லயும் உங்க பேரை பிரின்ட் பண்ணச் சொல்லிடலாம். எதிர் டீம் உங்க டிரெஸ் பத்தி மட்டும் பேசிட்டு, மேட்ச்சை கோட்டை விட்டுடுவாங்க. எதுக்கும், கில்லாடி அமித்ஷாகிட்ட ஒரு தடவை ஆலோசனை கேட்டுக்கங்க. டெல்லி மேட்ச் தவிர எல்லாத்துக்கும் சூப்பரா ஐடியா கொடுப்பார்.

ராமதாஸ்:

இன்றைய இளைஞர்கள் சீரழியறதுக்கு காரணமே காதல்தான். அதனால காதலிக்கிற வீரர்களை டீம்ல இருந்து தூக்குங்க. குறிப்பா அந்த நடிகையை காதலிக்கிற ‘கோலி’ப்பயலை தூக்கிடுங்க. இதையெல்லாம் பண்ணியும் டீமைத் தேத்த முடியாதுன்னு தோணினா, பேசாம ஜெயிக்கிற நிலைமையில இருக்கிற டீமோட கூட்டணி சேர்ந்துடுங்க. அதையும் மீறித் தோத்துட்டா, கவலைப்படாதீங்க... 2019-ல் கோப்பையை வெல்வோம்னு நிதானமா அறிக்கை விட்டுக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம்:

போட்டியில ஜெயிக்க உடம்பு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். சீட் நுனிகூட ஜாஸ்தி. அதைவிட கம்மியான இடத்துல உட்காரப் பழகணும். நீங்க கேப்டனாவே இருந்தாலும் உங்களை இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தது தேர்வுக் குழுங்கிறதை மறந்துடக்கூடாது. அவங்க அனுமதியில்லாம மைதானத்துல டீம் மீட்டிங்கூட போடக்கூடாது. ஒவ்வொரு தடவை டாஸ் போடும்போதும் அவங்களை நினைச்சு கண் கலங்கணும். நாம ஏதோ சோகத்துல இருக்கமாதிரி அடிக்கடி டவலால கண்ணை துடைச்சிட்டே இருக்கணும். தேவைப்பட்டா கிளிசரின்கூட பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x