Published : 07 Feb 2015 12:26 PM
Last Updated : 07 Feb 2015 12:26 PM

ரியல் எஸ்டேட்: பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

ரியல் எஸ்டேட் துறைக்கு வரும் நிதியாண்டு (2015-16) பட்ஜெட் கைகொடுக்குமா என்பது குறித்த விவாதங்கள் அத்துறையினரிடையே ஏற்பட்டுள்ளன.

கடந்த ஒன்பது மாதங்களுக்கான பட்ஜெட் விலை மலிவு வீடுகளுக்கு உதவும் வகையில் அமைந்திருந்ததால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரியல் எஸ்டேட் துறையினருக்கு உதவலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கட்டுமானத் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் மேம்படும் வகையில் அடிமட்டம் வரையில் உத்வேகம் அளிக்கும்படியான திட்டங்களோ சலுகைகளோ இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறுகிறார்கள் இத்துறையில் ஈடுபட்டுவருபவர்கள்.

சலுகைகள்

வாடகை வீடுகள் என்னும் பகுதியை மேம்படுத்தினால் அதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது. இப்போது வீட்டு வாடகை வருமானம் வரிகளுக்கு உட்பட்டதாக உள்ளது.

ஆகவே வாடகை வீடுகளை ஊக்குவிக்க அது தொடர்பான கட்டுமானங்களுக்கு வரி விவகாரத்தில் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சலுகை தரப்பட்டால் பெரு நகரங்களில் வீட்டு வசதி துறை வளரும் என இத்துறையினர் நம்புகிறார்கள்.

கட்டுமானத் துறை சந்திக்கும் பெரும் பிரச்சினைகளில் முக்கியமானது கட்டுமானங்களுக்குப் பெற வேண்டிய அரசு ஒப்புதல். இது விரைவாகக் கிடைத்தால் கட்டுமானங்களை உரிய காலத்தில் முடித்து, குடியிருப்பதற்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என்பதால் அது விரைவாகக் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறார்கள்.

ஒப்புதல் விரைந்து அளிக்க வேண்டியது அவசியம் என்றபோதும் கட்டுமானத்தின் தர விஷயத்தில் எந்தச் சமரசமுமின்றி கறாராக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

கட்டுமானத் துறை சந்திக்கும் பெரும் பிரச்சினைகளில் முக்கியமானது கட்டுமானங்களுக்குப் பெற வேண்டிய அரசு ஒப்புதல். இது விரைவாகக் கிடைத்தால் கட்டுமானங்களை உரிய காலத்தில் முடித்து, குடியிருப்பதற்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என்பதால் அது விரைவாகக் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறார்கள்.

ஒப்புதல் விரைந்து அளிக்க வேண்டியது அவசியம் என்றபோதும் கட்டுமானத்தின் தர விஷயத்தில் எந்தச் சமரசமுமின்றி கறாராக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்டநாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்திய கட்டுமானங்களுக்கான அந்நிய நிதி முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கலாம் என்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்த சட்டம்

இந்திய மக்களவையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டம் வடிவமைக்கப்பட்டு பலமுறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்துடன் தொடர்புள்ள அதிகாரிகளைச் சமாளித்து நிலத்தைக் கையகப்படுத்துவது எளிதல்ல.

இந்தச் சட்டத்தின் இப்போதைய வடிவத்தில் இது கட்டுநர்களுக்கும் அதற்கு நிதியுதவி செய்பவர்களுக்கும் உதவும் சட்டமாகவே பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறை நிலம் கையகப்படுத்தச் சட்டம் என்னும் தடையைத் துணிவுடன் தாண்ட விரும்புகிறது. ஏனெனில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கட்டுமானங்களை கட்டியெழுப்பவும் அதிக அளவிலான நிலம் தேவைப்படுகிறது.

மேலும் 2020க்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது, நூறு ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் முனைப்புடன் உள்ளது. இவற்றை எல்லாம் செயல்படுத்த இந்தச் சட்டத்தில் சில சலுகைகளை அறிவிப்பது அவசியமாகிறது.

நிலம் கையகப்படுத்துதலில் தற்போதுள்ள சிக்கலான நடைமுறைகளை எளிமைப்படுத்தி எளிதாக நிலத்தைக் கையகப்படுத்த வசதி செய்தால் மட்டுமே கட்டுமானங்களை ஊக்குவிக்க முடியும் என்கின்றன கட்டுமான நிறுவனங்கள்.

பசுமைக் கட்டுமான ஊக்குவிப்பு

வரும் நிதிநிலை அறிக்கையில் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் அவசியம் என்று கட்டுமான நிறுவனங்கள் எண்ணுகின்றன. இந்திய நுகர்வோரைப் பொறுத்தமட்டில், அவர்கள் பசுமைக் கட்டிடங்களுக்குச் சற்று அதிக விலையைக் கொடுக்க விரும்புவதில்லை. பசுமைக் கட்டிடங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தபோதிலும் அதற்குரிய விலை கொடுக்க ஏனோ அவர்களுக்கு மனம் ஒப்புதவதில்லை.

ஆகவே பசுமை வீடுகளுக்கான தேவை பெருமளவில் அதிகரிக்கவில்லை. இந்நிலையில் கட்டுநர்கள் அதிக அளவில் பசுமைக் கட்டிடங்களை உருவாக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தரும் வகையில் நிதிநிலை அறிக்கையில் சில சலுகைகள் இருப்பது நல்லது என்றும் கட்டுநர்கள் கருதுகிறார்கள்.

அந்நிய முதலீடு

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையைப் பொறுத்தவரை இன்னும் அதிக அளவில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். அந்நிய முதலீடு தொடர்பான ஒழுங்குமுறையில் காணப்படும் மந்தம், அரசுகளின் நிலையின்மை, அதிகாரவர்க்கத்தினரின் கெடுபிடி ஆகியவை இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இந்திய அரசு நினைத்தால் முதலீட்டாளர்களை ஈர்க்கும் சந்தையாக இந்திய ரியல் எஸ்டேட் துறையை மாற்ற முடியும். வரி விதிப்பில் சில மாற்றங்களைச் செய்து இதைச் சாதிக்க இயலும். வரி என்னும் தடைக்கற்களைத் தாண்டுவதற்கு உதவாத வரையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறை முதலீட்டு நிறுவனங்கள் மேம்பாடடைவது கடினம். ஆகவே நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது அரசு இந்த விஷயத்தில் கவனம் கொள்வது இத்துறைக்கு உதவும்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு இன்னும் போதாமை நிலையிலேயே உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தத் துறையில் அந்நிய முதலீடு கிடைத்தால் உதவியாக இருக்கும் இதற்கும் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியானால் அது ரியல் எஸ்டேட் துறைக்கு நலம் தருவதாக அமையும் என்கிறார்கள் கட்டுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x