Published : 10 Feb 2015 11:40 am

Updated : 10 Feb 2015 11:40 am

 

Published : 10 Feb 2015 11:40 AM
Last Updated : 10 Feb 2015 11:40 AM

உலக மசாலா: டீ பாக்கெட்டில் ஓவியம்!

ஷாங்காயைச் சேர்ந்த ரெட் ஹாங் யி வித்தியாசமான கலைஞர். இதுவரை யாரும் பயன்படுத்தாத பொருள்களைக் கொண்டு ஓவியங்களை உருவாக்குவதில் வல்லவர். சமீபத்தில் டீ பாக்கெட்களை வைத்து ஓர் ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார் ரெட்.

சூடான நீரில் டீ பாக்கெட்டை மூழ்க வைத்து 10 விதமான வண்ணங்கள் கொண்ட பாக்கெட்டுகளை உருவாக்குகிறார். இதனால் தேவையான இடங்களில் பழுப்பு, வெள்ளை, இளம் பழுப்பு போன்ற நிறங்களைக் கொடுக்க முடிகிறது.

ஓர் அட்டையில் வரிசையாக டீ பாக்கெட்களை அடுக்கிக் கட்டுகிறார். பிறகு அட்டைகளை அடுக்கினால் அட்டகாசமான ஓவியம் கிடைத்து விடுகிறது. 20 ஆயிரம் டீ பாக்கெட்களைப் பயன்படுத்தி இந்தப் பிரமாண்டமான ஓவியத்தைப் படைத்திருக்கிறார்.

இரண்டு மாதங்கள் திட்டமிட்டு, குறிப்பு எடுத்த பிறகுதான் வேலையில் இறங்குவதாகச் சொல்கிறார் ரெட். ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் இவரது படைப்புகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அடிக்கடி ஓவியக்காட்சிகளை நடத்துகிறார்.

இவ்வளவு கஷ்டப்பட்டாலும் ரொம்ப காலத்துக்கு இது நிலைச்சிருக்காதே…

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் போர்ட்லாண்ட் பூங்காவில் ஆந்தைகள் வசிக்கின்றன. அதிகாலையில் பூங்காவில் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை ஆந்தைகள் தாக்குகின்றன. பெரிய அளவில் காயம் ஏற்படாவிட்டாலும் ஆந்தைகள் தாக்க வருவது திகிலான விஷயமாக இருக்கிறது.

மர ஆந்தை, வரி ஆந்தை என்ற பெயர்களில் அழைக்கப்படும் மிக அரிய வகை ஆந்தைகள் இங்கே வசிக்கின்றன. இது இனப்பெருக்கக் காலம் என்பதால் அச்சத்தில் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ம்… மனிதர்கள் மீது பயம் வருவது இயற்கைதானே…

உலகின் மிகப் பெரிய டிஸ்னி டவுன் சீனாவின் ஷாங்காய் நகரில் தயாராகி வருகிறது. 3.6 பில்லியன் டாலர்கள் செலவில், 1000 ஏக்கர் பரப்பில் இந்த டிஸ்னி டவுன் வேகமாக உருவாகி வருகிறது. 2016-ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட இருக்கிறது.

ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் இங்கே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னி கேரக்டர்களுடன் சீனாவின் பிரத்யேக கேரக்டர்களும் இந்த டிஸ்னி டவுனில் வலம் வர இருக்கின்றன.

எதையும் பிரமாண்டமாகச் செய்வதில் சீனர்கள் வல்லவர்கள்!

700 தீவுகளைக் கொண்ட நாடு பஹாமாஸ். இங்குள்ள சில தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய அளவுக்கு இயற்கை எழில் நிறைந்தவை. கரீபியன் தீவு அதில் ஒன்று. ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சின்னஞ்சிறு தீவில் பன்றிகள் பெருங் கூட்டமாக வசிக்கின்றன. பளிங்கு போல காணப்படும் தெளிவான நீரில் 300 அடி தூரம் வரை சென்று நீந்தி விளையாடுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் படகுகள் வரும்போது வேகமாக நீந்திச் சென்று, படகைக் கரைக்கு அழைத்து வருகின்றன. பன்றிகளின் நீச்சல் சாகசத்தைக் கண்டு களிக்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதால், பன்றிகள் சுற்றுலாவில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

அட! பன்றி நீந்தும் என்பதே ஆச்சரியமாக இருக்கு…

உலக மசாலா

You May Like

More From This Category

More From this Author