Published : 08 Feb 2015 12:02 PM
Last Updated : 08 Feb 2015 12:02 PM

முடக்கப்பட்ட திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட கருணாநிதி கோரிக்கை

முடக்கப்பட்ட தமிழ்க ரயில்வே திட்டங்களையும் வரும் ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நான் அண்மையில் நம்முடைய இன்றைய முதல் அமைச்சரின் முக்கியப் பணிகள் இரண்டு என்றும், ஒன்று எனக்குப் பதில் தருவது, இன்னொன்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த இரண்டு பணிகளுக்கும்கூட “அம்மா” வின் அனுமதி பெறாமல் முதலமைச்சர் “தும்முவது” கூட இல்லையாம்! இதனை மெய்ப்பிக்கும் வகையில் தான், நேற்றையமுன்தினம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்களை மத்திய நிதி நிலை அறிக்கையிலே இணைக்க வேண்டுமென்று எழுதிய கடிதம் கூட “புரட்சித் தலைவி அம்மா பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியபடி” என்ற தலைப்பிலே தான் உள்ளது. எப்படியோ போகட்டும்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தினை மத்திய அரசு ஏற்று, விரைவில் வெளிவரவுள்ள மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையிலே அந்தத் திட்டங்களையெல்லாம் சேர்த்து அறிவிக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பிரதமர் மோடி அவர்களையும், மத்திய ரெயில்வே அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க. அரசு விடுத்த வேண்டுகோள் ஆயிற்றே, அதை ஆதரிக்கலாமா என்றெல்லாம் நினைக்காமல், தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, ஆளும் அ.தி.மு.க. அரசின் வேண்டுகோள் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அதனை ஆதரிக்கின்றேன்.

தமிழகத்திலே காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து ஆற்றிய உரையில், “மத்திய அரசிடம் முதலமைச்சர், எங்களைக் காட்டித் தமிழகத்தின் தேவைகளைப் பெறட்டும்; நாங்கள் குற்றஞ்சாட்டுவதாகத் தெரிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கேட்டுப் பெறட்டும்” என்றெல்லாம் பேசியிருக்கும் அரசியல் நாகரிகத்தை கருத்திலே கொண்டு அதே வழியிலே தான் தமிழகத்திற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 22 ரெயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரெயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்...

மேலும் விரிவாக தமிழகத்திலே ரெயில்வே திட்டப் பணிகள் முடக்கப்பட்டிருப்பது பற்றி எழுதப்பட்டிருந்ததையும் நினைவிலே கொள்ள வேண்டும். முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள திட்டங்களைப் போலவே, பல ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு - பழனி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென்று திருமதி சோனியா அவர்கள் மூலமாகப் பாரதப் பிரதமரிடம் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் திட்டம் சேர்க்கப்பட்டு, 25-2-2004இல் இரண்டு கோடி ரூபாய் முதல் நிலை ஆய்வுக்காக அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்தத் திட்டத்திற்காக கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் காரணமாக 2009ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 40 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இவ்வளவுக்கும் பிறகு 22-7-2011இல் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் அனைத்தும் வரவிருக்கின்ற ரெயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மத்திய ரெயில்வே அமைச்சருக்கு தற்போது அவசர அவசரமாகக் கடிதம் எழுதிய தமிழக முதல் அமைச்சருக்கு கடந்த ஆண்டு 26-9-2014 அன்று மத்திய ரெயில்வே அமைச்சர் தமிழகத்திற்கு வந்த போது அளித்த பேட்டி ஒன்றினை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். மத்திய ரெயில்வே அமைச்சர் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்தவரை, 15ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தச் செலவுத் தொகையில் மாநில அரசின் பங்களிப்பு ஏதும் இல்லை. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகா,ரெயில் திட்டங்களுக்கு, இலவசமாக நிலங்களை அளித்துள்ளதோடு, ரெயில் திட்டங்களை நிறைவேற்றத் தேவைப்படும் தொகையில் 50 சதவீதத்தை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். “ரெயில் திட்டங்களுக்கான 50 சதவிகிதத் தொகையை, மாநில அரசு ஏற்றுக் கொண்டால், திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், தமிழக அரசிடமிருந்து ரயில்வே அமைச்சகத் திற்கு, எந்தப் பதிலும் வரவில்லை. எனவே, ரயில் திட்டங்களுக்கு, நிதி உதவி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன். மாநில அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்க வில்லை” என்று மத்திய ரெயில்வே அமைச்சர் தமிழகத்திற்கு வந்து சாட்டிய குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் சார்பில் என்ன பதில் அளிக்கப்பட்டது?

ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற எவ்வகையான ஒத்துழைப்பு இதுவரை அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் இப்போதாவது பன்னீர்செல்வம் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா? மாநிலங்களவையிலே ஆதரவு கேட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இவருடைய “அம்மா”வை வீட்டிலே போய்ச் சந்தித்ததாகச் சொல்லப்பட்டதே, அப்போதாவது தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டு மானால், தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கும், மக்கள் நலன் சார்ந்த ஏனைய திட்டங்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டுமென்று ஜெயலலிதா கேட்டாரா? அல்லது தான் தப்பித்துக் கொள்வது பற்றித் தான் பேசினாரா? தமிழக மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்க; இதற்காவது பன்னீர்செல்வம் உண்மையான பதிலைச் சொல்வாரா?

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x