Published : 25 Feb 2015 02:00 PM
Last Updated : 25 Feb 2015 02:00 PM

பெண்ணுக்கு ஆசிரியர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஆசிரியர் பணி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பிஏ, எம்ஏ பொருளாதாரம் மற்றும் பிஎட் படிப்புகளை தமிழ்வழி கல்வியில் பயின்றேன். தமிழகத்தில் 2881 பட்டதாரி மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள் பணித்தேர்வு தொடர்பாக 9.5.2013-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 21.7.2013-ல் நடைபெற்ற தேர்வில் பங்கேற்றேன். இந்த தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன். தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. எனக்கு தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், 4.8.2013-ல் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் மனுதாரர் எம்ஏ சான்றிதழை காண்பிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மனுதாரர் தரப்பில், சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு வாரியம் கூறிய தேதியில் நடைபெறவில்லை. 23.10.2013 அன்று நடைபெற்றது. அப்போது எனது அனைத்து கல்வி சான்றிதழ்களையும் வழங்கினேன். நான் முழுக்க முழுக்க தமிழ்வழியில் கல்வி பயின்றுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பணித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற தேதியை தேர்வு வாரியம் தவறாகக் கூறியுள்ளது. மனுதாரர் தமிழ்வழியில் கல்வி பயின்றுள்ளார். அதற்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளார். எனவே, மனுதாரருக்கு 12 வாரத்தில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x