Published : 06 Feb 2015 10:24 AM
Last Updated : 06 Feb 2015 10:24 AM

புதுச்சேரியில் 3 பெண்கள் தற்கொலை விவகாரம்: சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை - உயிர் தப்பிய ஆசிரம சகோதரிகள் பேட்டி

‘நாங்கள் இன்னும் ஆசிரமவாசிகள் தான். எங்கள் தாயார் மற்றும் சகோதரிகள் இருவர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய சகோதரிகளான நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத் தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் நிரந்தர உறுப்பினர்களாகி ஆசிரமத்தி லேயே தங்கி இருந்தனர். அவர்கள், ஆசிரம விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஆசிரமத்தில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் மூலமாக ஆசிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 சகோதரிகளும் தங்கள் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். தற்கொலைக்கு முயன்ற 7 பேரில், தாயார் மற்றும் 2 சகோதரிகள் உயிரிழந்தனர். ஜெய, ஹேமலதா, நிவேதிதா, தந்தை பிரசாந்த் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நிவேதிதா, ஹேமலதா ஆகிய இருவரும் நேற்று முதல்முறையாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

அரவிந்தர் ஆசிரம நிர்வாகத் துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்கொலை சம்பவத்துக்கு பின்னர் எங்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் இழப்பீடு எதுவும் தரப்படவில்லை. முதல்வர் ரங்கசாமியை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்தோம். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எங்கள் தாயார், சகோதரிகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தேசிய மகளிர் ஆணையத்தில் நாங்கள் அளித்த புகார் விசாரணையில் உள்ளது. ஏற்கெனவே, அசோக் ஆனந்த் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் ஆட்சியர் விசாரணை தொடங்கியது. ஆனால், ஆசிரம நிர்வாகத்தினரின் நெருக்கடி காரணமாக விசாரணை தொடர வில்லை. மீண்டும், ஆட்சியர் விசாரணையை தொடங்க வலியுறுத்துகிறோம்.

2001-ம் ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரம நிர்வாகம் எங்களை மிகவும் தொல்லை செய்து வருகிறது. பாலியல் இடையூறும் செய்தனர். ஆள் பலம், பணபலம், அதிகார பலத்தை வைத்து எங்களை துன்புறுத்தினர். எங்கள் சகோதரிகளின் இறப்புக்கு ஊழல்வாதிகளே காரணம். அன் னைக்கு பிறகு பொதுநல அறக் கட்டளையாக ஆசிரமம் உள்ளது. ஆனால், இதன் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. பொய் கணக்குகளை தாக்கல் செய்கின்ற னர். தொடர்ந்து 30 ஆண்டுகளாக, ஒருசிலரே பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஜனநாயக முறை யில் ஆசிரம நிர்வாகம் செயல்பட வில்லை. ஆசிரம நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு இடைக்கால நிர்வாகியை அரசு நியமிக்க வேண்டும். புதிய அறக்கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஆசிரம முறைகேடுகள் தொடர் பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலை மையிலான விசாரணையை மீண் டும் தொடங்க வேண்டும். நாங்கள் இன்னும் ஆசிரமவாசிகள்தான். விடுதியைவிட்டு மட்டுமே வெளி யேற்றுமாறு நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், எங்கள் சலுகை கள், உரிமைகளை ஆசிரம நிர் வாகம் பறித்து விட்டது. ஆசிரமத் தில் தியானம் செய்யவும் எங்களை அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தின் முறைகேட்டுக்கு எதிராக குரல் தருவோரை தொடர்ந்து மிரட்டும் போக்கு உள்ளது. எங்களைப் போல் பாதிக்கப்பட்டோர் பலர் ஆசிரமத்தில் இன்னும் உள்ளனர். அவர்களும் தங்கள் பிரச்சினைக் காக எதிர்ப்பு குரல் கொடுத்தால் உணவு, அடிப்படை வசதிகளை தடை செய்து விடுவார்கள். தற்போது, எங்களுக்காக மாதம் ரூ.29 ஆயிரம் செலவழிப்பதாக ஆசிரம நிர்வாகிகள் கூறுவது பொய்யான தகவல். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x