Published : 02 Feb 2015 02:03 PM
Last Updated : 02 Feb 2015 02:03 PM

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு எதிரான சட்டம்: கருணாநிதி சந்தேகம்

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பது தொடர்பான சட்டதிருத்தத்தை மேற்கொள்ளும் முன்னர் அனைத்து கட்சிகளுடனும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தை திமுக வரவேற்றாலும், அதில் காவல் துறைக்கு மிகையான அதிகாரத்தை வழங்குவதைப் போல உள்ள சொற்றொடர்கள் சந்தேகத்தை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரப்போவதாக இன்றைய நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இந்தப் புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களை புகார் இல்லாமல், தேர்தல் அதிகாரி நேரில் பிடித்து வழக்கு பதிவு செய்ய முடியும். போலீசார் "வாரண்ட்" இல்லாமலே குற்றவாளியைக் கைது செய்து நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் விசாரணையைத் தொடங்க முடியும்.

பொதுவாக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

எனினும், இதில் காவல் துறைக்கு மிகையான அதிகாரத்தை வழங்குவதைப் போல உள்ள சொற்றொடர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன.

ஏனென்றால் தற்போது காவல் துறையினர் மனசாட்சிபபடி நடந்து கொள்வதாகக் கூறிக் கொண்டாலும், ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

எனவே ஆளுங்கட்சியினரே வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்ற நிலைமையில் அதன் மீது நேர்மையான நடவடிக்கை எடுக்கக் காவல் துறை முன் வருமா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுவது இயற்கையே! அப்படி ஒருசிலர் நடவடிக்கை எடுக்க முன் வந்தாலும், ஆளுங்கட்சியும், மேலதிகாரிகளும் குறுக்கிடாமல் அனுமதிப்பார்களா? என்பன போன்ற கேள்விகள் விவாதத்திற்கு உரியவை.

எனவே, மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நல்ல விடை காணும் வகையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடம் கலந்து பேசி ஆலோசனைகளைப் பெற்று நிறைவேற்ற வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.

தேர்தல் முறையை மாற்ற வேண்டும்:

மேலும் இந்தச் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டுகளாகப் பலராலும் சொல்லப்பட்டு வருகின்ற "விகிதாச்சார பிரதிநிதித்துவ" முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

ஏற்கனவே நான் இதுபற்றி கூறும்போது, "உலகத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகள் நீங்கலாக, ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைத் தான் கடைப்பிடிக்கின்றன. அந்த முறைப்படி தேர்தல் நடைபெறும்; கட்சிகள் போட்டியிடும். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு வீதத்துக்கு ஏற்ப, நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

தொகுதிகளுக்கான உறுப்பினர்களை, கட்சி தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும். இப்படிப்பட்ட "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை" தான் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று அண்ணா திரும்பத் திரும்பச் சொன்னார். இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத இந்தக் கருத்து இப்போது பல தேசியக் கட்சிகளாலும் வலியுறுத்தப் படுகிறது" என்று நான் தெரிவித்ததையும் ஆழ்ந்து பரிசீலனை செய்திட வேண்டுமென விரும்புகிறேன்.

லிங்டோ கருத்துகளை பரிசீலிக்கலாம்:

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணைர் ஜே.எம்.லிங்டோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் தற்போது பிரச்சாரச் செலவுக்கான உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. எனினும், அந்த அளவைத் தாண்டி வேட்பாளர்கள் செலவு செய்வதால், தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு என்பதே கேலிக் கூத்தாகி விட்டது.

எனவே தற்போதுள்ள தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும். இதில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த முறை கொண்டு வரப்பட்டால் தேர்தலில் யாரும் பெரும் தொகையைச் செலவு செய்ய மாட்டார்கள்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் அரசியல் கட்சிகள் தான் போட்டியிடும்; வேட்பாளர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள். இதனால் தேர்தலில் பண பலத்தின் தாக்கம் குறையும்.

எனவே, அந்த முறையை அறிமுகம் செய்வது குறித்து நாம் முயற்சித்துப் பார்க்கலாம்" என்று லிங்டோ தன்னுடைய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மத்திய அரசு சீரிய கவனத்தில் கொள்ள வேண்டியவை.

எனவே வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும்போது, என்னுடைய இந்தக் கருத்துகளையும் மனதிலே கொண்டு, விரிவான விவாதத்துக்கு வழி வகுத்து, நேர்மையான, முறையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்" என்று கருணாநிது குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x