Published : 23 Feb 2015 09:22 AM
Last Updated : 23 Feb 2015 09:22 AM

நாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்!

‘தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்துக்கும் எதிரான மகத்தான போராளியான பன்சாரே, தனது மனைவி உமாவுடன் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். பன்சாரேவின் உடலுக்குள் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரது மனைவியின் தலையின் இடது பக்கத்தைத் துளைத்தது மற்றொரு குண்டு. அக்கம்பக்கத்து வீட்டார்கள்தான் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தார்கள். மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை முயற்சிகளையும் மீறி பன்சாரேவின் உயிர் வெள்ளியன்று பிரிந்துவிட்டது. உமா சிகிச்சையில் இருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில்தான் இந்துத்துவ வெறியர்கள் புணேவில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். பன்சாரே போன்றே தபோல்கரும் மக்களுக்காகப் போராடிய எளிய மனிதர். தபோல்கர் போன்றே பன்சாரேவும் லட்சியத்தில் உறுதிகொண்டிருந்தவர். இருவருமே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். மக்களை விழிப்படைய வைத்து அவர்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராட இடைவிடாது ஊக்குவித்துக்கொண்டிருந்த களப் போராளிகள்தான் இருவருமே.

தபோல்கரும் பன்சாரேவும்

பிள்ளையார் பால் குடித்ததாக 20 ஆண்டுகளுக்குமுன் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டபோது, அறிவியல் செயல்விளக்கத்தின் மூலம் எளிமையான முறையில் மறுத்து, மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார் தபோல்கர். அதேபோல், வீர சிவாஜியை இஸ்லாமிய எதிர்ப்பாளராக உருவகப்படுத்தி, அவரது பிம்பத்தை வைத்துத் தங்கள் தத்துவங்களை நியாயப்படுத்தி, இளைஞர்களுக்கு ஆவேசப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் சிவசேனா-ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை வரலாற்றுரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் கோவிந்த பன்சாரே. ‘உண்மையாக, சிவாஜி யார்?’ (சிவாஜி கோன் ஹோட்டா?) என்ற அவரது புத்தகம், சாதி-மத உணர்வுகளுக்கு அப்பால் ஏழை எளிய மக்களின் நலன்களை நேசித்தவர், போராடியவர் சிவாஜி என்ற அடையாளத்தை எடுத்து வைத்தது. இது சங் பரிவாரத்துக்கு எரிச்சல் ஊட்டியது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் அண்மையில் குரல்கொடுக்கத் தொடங்கியதும், பன்சாரே மிகவும் அதிர்ச்சியடைந்து அதைக் கண்டிக்கத் தொடங்கினார். கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றில் இத்தகைய முயற்சிகளை வெளிப்படையாக விமர்சித்தார் பன்சாரே. அந்தக் கூட்டத்திலேயே அதற்கு எதிராகக் குரல்கொடுத்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பன்சாரே வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம்சாட்டினார். வகுப்புவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுவரும் சில இந்துத்துவ அமைப்புகள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பன்சாரே கோரியதும், தொடர்புள்ள ஆட்கள் அவர்மீது அவதூறு வழக்கைத் தொடுத்தார்கள்.

நரேந்திர தபோல்கர் வெறும் அறிவியல் பிரச்சாரப் பணிகளை மட்டிலும் செய்துகொண்டிருக்கவில்லை. சாதாரண மக்கள் நலனுக்காகத் தம்மால் இயன்ற வழிகளில் உதவியும், அவர்களைத் திரட்டிப் போராடியும் வந்தார். அவரைப் போன்றே அடித்தட்டு மக்களுக்காகத் துடித்த கோவிந்த பன்சாரேவின் இதயத்தைத்தான் வகுப்புவாத வெறியர்கள் தற்போது செயலிழக்க வைத்துவிட்டார்கள்.

“அண்ணா… அண்ணா!”

ஆகஸ்ட் 2013-ல் நரேந்திர தபோல்கர் மறைவை அடுத்து, சதாரா வீதிகள் துயரத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்தன. மூங்கில் கழியின் துணையோடு மெல்ல நடந்து வந்த - எண்பதுகளில் இருந்த முதிய மனிதர் பாபன் ராவ் உத்தாலே தன்னிடம் கபடி விளையாட்டு பயின்ற தனது அன்புக்குரிய தபோல்கரின் முகம் வெறியர்களது குண்டுகளால் சிதைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சனிக்கிழமையன்று கோலாப்பூரின் பீடித் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளும், துப்புரவுத் தொழிலாளர்களும் கோவிந்த பன்சாரே உடலின் அருகே திரண்டு நின்று “அண்ணா... அண்ணா” என்று கதறிக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் நலனுக்காக உழைக்கும் போராளிகளை மதவெறியர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் அரசியல் மிகவும் நுட்பமானது. அது மக்களுக்கு எதிரானது. தங்கள் தத்துவத்தை எதிர்ப்பவர்களைப் பாசிச சக்திகள் மன்னிப்பதில்லை. ஆனால், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் ஒருபோதும் இந்தப் போராட்டத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை.

தபோல்கரின் பாதையில்…

தனது சொந்தத் துயரத்தைவிடவும், மறைந்த தனது கணவர் தபோல்கர் படைக்க விரும்பிய சமூகத்துக்கான லட்சியம் முக்கியமானது என்ற முடிவை தபோல்கரின் மனைவி ஷைலா அப்போதே எடுத்தார். அவரது மகன் ஹமீத் மனநல மருத்துவராக இருக்கிறார். அவரும் தனது பணியையெல்லாம் விட்டுவிட்டு, தனது தந்தையின் அடிச்சுவட்டில் சென்றுகொண்டிருக்கிறார். தபோல்கரின் மனைவி, மகன் மட்டுமல்ல அவரது மருமகள், மகள் உட்பட மொத்தக் குடும்பமும் கடந்த மாதங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூட நேரமின்றி ஊர் ஊராகப் பயணம் செய்து, தபோல்கர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவுநாள் அன்று மட்டுமே குடும்பம் ஒன்றுகூடுகிறது. தனது மருத்துவத் தொழிலைவிடவும் தந்தையின் லட்சியமே முன்னுரிமை என்கிறார் ஹமீத்.

கோவிந்த பன்சாரே இறுதி நிகழ்ச்சியில் குழுமிய பெருங்கூட்டத்தில் உரத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன: “நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் கோவிந்த பன்சாரேக்கள்.” அதன் பொருள், இந்த இரு மனிதர்களுக்குமே மரணம் கிடையாது என்பதுதான்.

வகுப்புவாத வெறி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமைக்கு எதிராகப் பூதாகரமான சவாலாக வளர்ந்து நிற்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதைச் சந்திக்கும் துணிவுடைய மக்கள் சக்தி, அதைவிடப் பிரம்மாண்டமாக வளரவே செய்கிறது என்பதுதான் மகத்தான உண்மை. ஜனநாயகம் நீடித்து நிலைக்க வேறெதுவும் வேண்டாம். மிகமிகச் சாதாரண, அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்துவரும் இந்தக் குரல்கள் அளிக்கும் நம்பிக்கை ஒன்றே போதும்!

- எஸ்.வி. வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x