Published : 20 Jan 2015 09:40 AM
Last Updated : 20 Jan 2015 09:40 AM

அரசியல் தலையீடுகளின் அவலம்

திரைப்படத் தணிக்கைக்கான மத்திய வாரியத் தலைவர் லீலா சாம்சனும் வேறு சில உறுப்பினர்களும் திடீரென ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை, மேலிடத்துக் குறுக்கீடுகளும் ஊழலும் மலிந்துவிட்டன என்று தங்களுடைய பதவி விலகலுக்குக் காரணங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது நியமிக்கப்பட்டதுதான் இந்தத் தணிக்கைக் குழு. அந்தக் குழுவினரின் பணியில் யார் குறுக்கிட்டார்கள், எப்படிக் குறுக்கிட்டார்கள் என்று அவர்கள் விளக்க வேண்டியது அவசியம். இந்தப் பதவி விலகல்களுக்கு உண்மையான காரணங்கள் எதுவாக இருந்தாலும், தணிக்கைத் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற அவர்களுடைய கருத்தில் தவறேதும் இல்லை. ஆனால், ‘மெஸஞ்சர் ஆஃப் காட்’என்ற திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழைத் தங்களால் தர முடியாது என்று அவர்களே கூறியதற்குப் பிறகு, மேல்முறையீட்டு அமைப்பு சில நிபந்தனைகளை விதித்து, சான்றிதழை வழங்கியது சரியல்ல என்று அவர்கள் கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தத் திரைப்படம் குர்மித் ராம் ரஹீம் சிங் என்பவரைக் கடவுளைப் போலச் சித்தரிக்கிறது. அவரிடம் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல்கள் இருப்பதாகக் காட்டுகிறது என்பது தணிக்கைக் குழுவின் ஆட்சேபங்கள். அதற்காக ஒரு திரைப்படத்தைத் திரையிட தணிக்கைச் சான்றிதழை மறுப்பது சரியாகுமா? அபத்தமான, மூடநம்பிக்கையை வளர்க்கும் திரைப்படங்கள் பலவற்றுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரைப்படங்கள் என்பவை படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் அடிப்படையிலானவை என்பதை மறந்துவிடலாகாது.

திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ச்சியாகப் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்கள் பதவி விலகுவதாக இருந்தால் அதில் குறையேதும் காண்பதற்கில்லை. ஒரேயொரு திரைப்படத்துக்குத் தணிக்கைக் குழு சான்றிதழ் தர மறுத்ததாலும், மேல் முறையீட்டுக் குழு சான்றிதழ் தந்ததாலும்தான் இந்த எதிர்ப்பு என்றால், சரியாகப் படவில்லை. ஒருவேளை அப்படி செய்தி, ஒலிபரப்புத் துறை தொடர்ந்து தலையிட்டும், நெருக்குதல் தந்தும், ஊழலில் திளைத்தும் செயல் பட்டிருந்தால் அவற்றையெல்லாம் தகுந்த ஆதாரங்களுடன் பட்டிய லிட்டு வெளிப்படையாகத் தெரிவிக்கும் கடமை தணிக்கைக் குழுவுக்கும் அதன் முன்னாள் தலைவர் லீலா சாம்சனுக்கும் நிச்சயம் இருக்கிறது.

திரைப்படத்தின் சான்றிதழுக்காகத் தயாரிப்பாளர் ஒருவர் மேல்முறையீடு செய்தவுடன் அதற்கான நடுவர் குழு விரைந்து செயல்படுவதைப் பாராட்டியே தீர வேண்டும். ஆனால், ராம் ரஹீம் பிரிவினர்தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியாணா சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட துறைகளிலும் அரசியல் தலையை நுழைப்பது நமது சமூகத்தின் சமீப காலத்திய அவலம். இந்தப் பின்னணியில், தணிக்கைக் குழுவின் அமைப்பு, செயல்பாடு, உறுப்பினர்கள் தேர்வு என்று எல்லாவற்றையும் சீர்திருத்துவது அவசியம். அதில் அரசியல் சார்புள்ளவர்கள் இடம்பெறக் கூடாது. ஊழலுக்குத் துணைபோகிறவர்கள், உறுப்பினர்களாக நீடிப்பதற்கான தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, தணிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x