Last Updated : 10 Jan, 2015 04:34 PM

 

Published : 10 Jan 2015 04:34 PM
Last Updated : 10 Jan 2015 04:34 PM

பறவைகள் பிடிக்குமா?- கணக்கெடுப்புக்கு உதவலாம்!

பறவைகளைப் பார்ப்பதிலும் அவற்றின் வாழ்க்கையை ரசிப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டா? இந்தப் பொங்கல் விடுமுறைக்கு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்ப்பதுடன், கணக்கெடுத்தும் உதவலாம்.

இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களைச் சுற்றியுள்ள ஓர் இடத்தில் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு என்ன வகையான பறவை வகைகள் வருகின்றன என்று பார்க்க வேண்டும். வீடு, பால்கனி, ஜன்னல், தோட்டம், புழக்கடை, பூங்கா எனப் பசுமை பரப்பு இருக்கும் எங்கு வேண்டுமானாலும் பறவைகளை நோக்கலாம்.

மூன்று நாள் நடக்கும் இந்தப் பறவை கணக்கெடுப்புக்குச் சென்னை இயற்கையாளர்கள் சங்கம் (எம்.என்.எஸ்.) அழைப்பு விடுத்துள்ளது. "கேரளத்தில் ஓணத்தின்போது நடத்தப்படும் பறவை கணக்கெடுப்பைப் போன்றது இது" என்கிறார் எம்.என்.எஸ். தலைவர் கே.வி. சுதாகர்.

எப்படிச் செய்வது?

ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பைச் செய்ய வேண்டும். எந்தப் பகுதியிலும், ஒரு நாளின் எந்த நேரத்திலும் செய்யலாம். உங்களுக்கு அடையாளம் தெரியாத பறவைகள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இந்தப் போட்டிக்கான முடிவுகளைப் பதிவேற்றும் இணையதளம் உங்களுக்குக் கைகொடுக்கும்.

இந்தக் கணக்கெடுப்பு மூலம் ஒரு பகுதியில் உள்ள பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கணிக்க முடியும். பறவைகளைப் பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தத் தகவல்கள் உதவும்.

நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கையை www.ebird.org என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். முறைகளில் ‘birdlogasia’ என்ற 'ஆப்' மூலம் தகவலையும் படங்களையும் பதிவேற்றலாம். இ பேர்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை பற்றி அறிய: > http://bit.ly/1x7qEnk

>

சென்னை பறவை பந்தயம்

ஜனவரி வந்தால், சென்னை பறவை பந்தயத்துக்குத் தயாராகிவிட வேண்டியதுதான். ஏழாவது சென்னை பறவை பந்தயம் ஜனவரி 25 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. இந்தியன் பேர்ட் ரேசஸ் அமைப்புடன் இணைந்து இதை ஏற்பாடு செய்யும் சென்னை இயற்கையாளர்கள் சங்கம் (எம்.என்.எஸ்.) உங்களுக்கு உதவும்.

பறவை பந்தயம் என்பது சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் எத்தனை வகைப் பறவைகளை ஒருவரால் பார்க்க முடிகிறது என்பதற்கான போட்டி. பறவை நோக்கர்கள் மட்டுமின்றி, பறவைகள் மீது ஆர்வம் உள்ளவர்கள், குழந்தைகளும் பங்கேற்கலாம். தனியாகவோ, குழுவாகவோ செல்லலாம். பறவைகளை அடையாளம் காணத் தெரியாவிட்டால் பரவாயில்லை. எம்.என்.எஸ். உங்களுக்கு உதவும்.

என்ன செய்ய வேண்டும்?

சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் 300 பறவை வகைகள் உள்ளன. கிண்டி தேசியப் பூங்கா, தியசாபிகல் சொசைட்டி, நன்மங்கலம் புதர்க்காடு, பள்ளிக்கரணை சதுப்புநிலம், முட்டுக்காடு காயல் பகுதி போன்றவை பறவைகளை நோக்கச் சிறந்த இடங்கள்.

சென்னையில் உள்ள பறவைகள், பறவை வகைகளின் எண்ணிக்கை, இயற்கை செழிப்பு போன்றவற்றை இப்போட்டி மூலம் அறிந்துகொள்ள முடியும்.

சென்னை பறவை பந்தயத்துக்குப் பதிவு செய்துகொள்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்: >http://blackbuck.org.in/ 044-24995833

கூடுதல் தகவல்களுக்கு: 9884366446.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x