Last Updated : 05 Jan, 2015 08:30 AM

 

Published : 05 Jan 2015 08:30 AM
Last Updated : 05 Jan 2015 08:30 AM

காந்தஹார் கடத்தல் பாணியில் இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி: டெல்லி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் உஷார் நிலை

காந்தஹார் விமான கடத்தலைப் போன்று ஏர் இந்தியா விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

குறிப்பாக டெல்லி-காபூல் ஏர் இந்தியா விமானத்தை தீவிர வாதிகள் கடத்த முயற்சிக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அந்த விழாவைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவதாக உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சதிகள் முறியடிப்பு

சுதந்திர தின விழாவை சீர்குலைப்பதற்காக காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 45 தீவிரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. அந்தத் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் பின்வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு குஜராத் கடல் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் மர்ம கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். வெடிகுண்டுகளுடன் வந்த அந்த கப்பல் நடுக்கடலில் வெடித்துச் சிதறியது. இதில் கப்பலில் இருந்த 4 தற்கொலைப் படை தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

2008 மும்பை தாக்குதல் சம்பவம் போன்று இந்தியா மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காந்தஹார் பாணி கடத்தல் சதி

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் தவிடுபொடியாக்கி வருவதால் 1999 காந்தஹார் விமான கடத்தல் போன்று இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் புதிய சதித் திட்டத்தை தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

அநேகமாக டெல்லி- காபூல் இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தை கடத்த தீவிரவாதிகள் முயற்சிக்கக்கூடும் என்று உளவுத் துறை சுட்டிக் காட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் பாது காப்பு பன்மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் சோத னைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் நீண்ட நேரம் சோத னைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கமாண்டோ படை வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

விமானங்களில் எந்த ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தாலும் உடனடி யாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு விமானப் பணிப் பெண்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவுக்கு மிரட்டல்

இதனிடையே கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், அந்த நிறுவன விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கூறும்போது, குடியரசு தினத்தை முன்னிட்டு கொல்கத்தா விமான நிலையத்தில் ‘ரெட் அலர்ட்’ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற் றப்படுகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

உளவுத் துறையின் எச்சரிக்கை யைத் தொடர்ந்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், சென்னை உட்பட நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் பல அடுக்கு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x