Published : 26 Jan 2015 11:45 AM
Last Updated : 26 Jan 2015 11:45 AM

ஒபாமாவின் இந்திய வருகை சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா சென்றடைவதற்கு முன்னரே, அவரது வருகை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பெயர் அடிபடத் தொடங்கிவிட்டது.

உலகத் தலைவர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தையொட்டி, அந்தந்த நாட்டின் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க வேண்டும் என்ற சர்வதேச விதிமுறைகளின்படி, இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர், இந்தியாவின் அச்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஒபாமா. மும்பை தாக்குதல்கள் தொடர்பாகவும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பாகவும் தவிர்க்க முடியாத வகையில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பேட்டியில் ஒபாமா பொதுவாகத்தான் பேசியிருக்கிறார். புதியதாகவோ ஆச்சரியப்படுத்தும் விதத்திலோ அல்லது குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக்கூட ஒபாமா பேசவில்லை.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் தங்கள் குறிக்கோள் என்று பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். பயங்கரவாதிகள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் இடமாக பாகிஸ்தான் இருப்பதை ஏற்க முடியாது என்றும், மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் நீதியால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் சொல்வதை, பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருவதன் எதிரொலியாகத்தான் பார்க்க வேண்டும்.

அத்துடன், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. 2008-ல் நடந்த அந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் எண்ணமும்!

அதேசமயம், இந்திய அதிகாரிகளும் அந்நாட்டின் தேசியவாத ஊடகங்களும், ஒபாமாவிடமும் அமெரிக்க அதிகாரிகளிடமும் பாகிஸ்தான் தொடர்பான கருத்தைப் பெற முயற்சி செய்யும். இதன் மூலம் பாகிஸ்தான் குறித்து இன்னும் மோசமான விதத்தில் சித்தரிக்க அவர்களது கருத்துகள் பயன்படுத்தப்படும். ஒருவேளை தாங்கள் விரும்பிய பதில் கிடைக்கவில்லை என்றால், யாராவது ஒரு இந்திய அதிகாரி பரபரப்பாக எதையாவது சொல்வார். அடுத்த 3 நாட்களுக்கு அதுதான் தலைப்புச் செய்திகளில் அடிபடும்!

அதேசமயம், இது தொடர்பாக என்ன பதிலளிப்பது என்பதில் பாகிஸ்தான் அரசுக்கும் வெளியுறவுத் துறைக்கும் குழப்பம் ஏற்படும். பதிலே சொல்லாமல் இருந்தால் பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதாக முத்திரை குத்தப்படலாம். அல்லது வெளியுறவுத் துறை மூலம் எதையாவது சொல்ல முயன்றால், அது இந்தியாவுடனான வார்த்தைப் போருக்கு வித்திடலாம்.

மிகவும் கஷ்டமான விஷயம்தான். சொல்லப்போனால், இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பதுதான் நல்லது. ஒபாமா இந்தியாவுக்குச் சென்றால் அது வணிக நிமித்தமான பயணம் என்று சொல்வது; அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தால் அது இருதரப்பு உறவு தொடர்பானது என்று சொல்வது! அர்த்தமற்ற வகையில் இடைவிடாமல் இப்படிப் போட்டி போடுவதிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியே வர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா - இந்தியா மாநாட்டில் அந்த இரு நாடுகளும் விவாதிக்கவிருக்கும் விஷயங்களில், பாகிஸ்தான் அதிகாரிகள் சொல்லும் கருத்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும் அல்லது அதை வெளிப்படையாக அறிவித்தாலும் நல்லதுதான். பாகிஸ்தான் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதுதான் அது. இரு நாடுகளுக்கும் இடையே, விவாதிக்கப் பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியாவுடனான உறவில் முக்கியமானது என்பதைவிட பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான விஷயம் பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதுதான். அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராகப் போரிடுவதுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x