Published : 13 Jan 2015 13:01 pm

Updated : 13 Jan 2015 13:01 pm

 

Published : 13 Jan 2015 01:01 PM
Last Updated : 13 Jan 2015 01:01 PM

தேவை நாலுகால் பாய்ச்சல் - வெற்றிப்பாதை: பிளஸ் 2

2

தாவரவியலைவிட விலங்கியலைப் பெரும்பாலான மாணவர்கள் கடினமாக உணர்வார்கள். தினசரித் திருப்புதலில் தாவரவியலுக்கு அரை மணி நேரம் அளித்தால், விலங்கியலுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குவது என்பது போல அனைத்து அம்சங்களிலும் விலங்கியலுக்குத் தனிக் கவனம் கொடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவப் படிப்புக்குத் தயார் செய்யும் மாணவர்கள்.

கெய்டுகளை பயன்படுத்துவது பாஸாவதற்கு உதவலாம். மற்றபடி அதிக மதிப்பெண்களைப் பெறப் பாட நூலில் இருந்து தயாரிப்புகளை மேற்கொள்வதே நல்லது. தினம் ஒரு பாடத்தலைப்பு என 7 நாளில் ஒரு சுற்று விலங்கியல் பாடநூலைத் திருப்புவது நல்லது. ஒரு மார்க்கைப் பொறுத்தவரை, கெய்டுகளைவிட ஆசிரியர் உதவியுடன் சுயமாகக் கேள்விகளை உருவாக்கிப் பதில்களைத் தொகுத்துப் படிப்பது நல்லது.

மாற்றி படிக்கலாம்

விலங்கியலில் 3 மார்க் தயாரிப்புக்கு அனைத்துப் பாடங்களும் முக்கியம் என்றபோதும், 2, 3, 4 ஆகிய பாடங்களில் 5 மார்க் கேள்விகளில் உள்ளடங்கி இருக்கும் 3 மார்க் கேள்விகளை உணர்ந்து படிக்கவேண்டும். எழுதவேண்டிய 8 மூன்று மார்க்கில், இந்த 3 பாடங்களில் இருந்தும் 6 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

ஐந்து மார்க் வினாக்கள் 1, 2, 3, 4, 7 ஆகிய பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும். பாடம் 3-லிருந்து ஒரு 5 மார்க் கட்டாய வினா இடம்பெறும். 10 மார்க்கைப் பொறுத்தவரை பாடங்கள் 5 மற்றும் 6-ல் இருந்து தலா ஒன்று உண்டு. அதேபோல முதல் பாடத்தை 2 பாதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலிருந்தும் தலா 1 பத்து மார்க் கேள்வி கேட்கப்படும்.

முதல் பாடம் 99 பக்கங்களை உள்ளடக்கியது என்பதால், அதில் உரிய தயாரிப்பு இல்லாதவர்கள் 5, 6 பாடங்களிலிருந்து 10 மார்க் இரண்டையும் எழுதலாம். முதல் பாடம் கடினமானது, சற்று நீளமானது என்பதால் அதைத் தவிர்ப்பதைவிட, திருப்புதலில் அந்தப் பாடத்துக்குக் கூடுதல் கவனம் அளிக்கலாம். இதிலிருந்து கட்டாயம் 4 ஒரு மார்க் இடம்பெறும் என்பதால், இந்தக் கவனம் தவிர்க்க முடியாதது.

மூடநம்பிக்கை வேண்டாம்

வினாத்தாள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ, குறிப்பிட்ட பாடத்துக்கு அதிக விடுமுறை விடப்பட்டிருந்தாலோ அந்தப் பாடத்துக்கான தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்பது போன்ற வதந்திகள் மாணவர் மத்தியில் உலவுவது வாடிக்கை. முழு மதிப்பெண்ணுக்கு உழைப்பவர்கள், இந்த மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அதேபோல ஒரு மார்க்கில், நான்கு விடைகளில் 2 விடைகளுக்கு இடையே தீர்வு காண முடியாத சிலர், இரண்டையும் குறிக்க முயற்சிப்பார்கள். அதாவது அ மற்றும் ஆ இடையே விடையைத் தீர்மானிக்க முடியாத தடுமாற்றத்தில், ’அ’ என்று குறிப்பிட்டு ’ஆ’வுக்கான விடையை எழுதிவிடுவார்கள். விடைத்தாள் திருத்துபவர் கவனப்பிசகாக மார்க் அளித்துவிடுவார் என்பது சிலரின் நம்பிக்கை. அது தவறு! நன்றாக நினைவு கூர்ந்து, ஒருவர் படித்ததை எழுதுவதே நல்லது.

நூற்றுக்கு நூறு பெற

100 சதவீதம் சரி என்று உணர்ந்தால் மட்டுமே முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடுவது நல்லது. பல செண்டம் இலக்கு மாணவர்களின் ஒரு மதிப்பெண் இழப்பு, சிறிய தவறை அடிக்கோடிட்டுக் கவனப்படுத்தியதாலே நிகழ்ந்திருக்கிறது.

இதேபோல அடித்து - திருத்தி எழுதும் இடங்களிலும், தாள் திருத்துபவரின் கவனம் ஈர்க்கப்பட்டு மதிப்பெண் குறைய வாய்ப்பாகும். படம் வரைய வேண்டிய விடைகளுக்கு, முதலில் படம் வரைந்த பின்னரே விளக்கமளிக்க வேண்டும். தாவரவியலில் ’சுழற்சி’ தொடர்பான கேள்விகளுக்குப் படம் வரையும்போது, அவை ஒரு முழுத் தாளில் இடம்பெறுமாறு எழுதலாம்.

பாடம் 6-ல் இடம்பெறும் ’உயிர் உரங்களின் பங்கு’ தலைப்பில் வரும் சைனோபாக்டீரியம் குறித்த கேள்விகளுக்கு அதிகக் கவனம் வேண்டும். பாடம் 5-ல் ஒளிச்சேர்க்கை தலைப்பின் கீழ் மாங்கனீசு, மெக்னீசியம் பிரயோகங்களில் பலரும் மாற்றி எழுதி மதிப்பெண் இழப்பது நடக்கிறது.

முக்கியப் புள்ளிகள்

வார்த்தை மாறினால் அர்த்தம் மாறும் வாய்ப்புள்ளதால், செண்டம் பெறச் சொந்த நடையை அறவே தவிர்த்துவிடலாம். பத்திகள் நிறைந்த பதிலைவிட பாயிண்டுகளை பட்டியலிடும் பதிலுக்கான கேள்விக்கு முன்னுரிமை தரலாம். குறிப்பாக விலங்கியலில் பாடங்கள் 5,6 ஆகியவற்றில் நீளமான பதில்கள் உண்டு. இவற்றுக்கு மாறாகப் பாயிண்டுகள் மட்டுமே அடங்கிய கேள்விகளைச் சாய்ஸில் தேர்வு செய்யலாம்.

விலங்கியலைப் பொறுத்தவரை 2, 3, 4, 5, 6 ஆகிய 5 பாடங்களையும் முழுமையாகப் படிப்பது, பாடங்கள் 1 மற்றும் 7-ல் இருந்து 1 மார்க் நன்றாகத் தயார் செய்வது ஆகியவற்றைச் சரியாகச் செய்தால் விலங்கியலின் மொத்த மதிப்பெண்கள் 75-ஐயும் முழுமையாகப் பெற வாய்ப்புண்டு.

உயிரியல்வெற்றிப்பாதைபிளஸ் 2பள்ளிக்கல்விநூற்றுக்கு நூறுமதிப்பெண்கள்

You May Like

More From This Category

More From this Author